சிவப்பு எறும்பு சட்னிக்கு புவிசார் குறியீடு வழங்கிய மத்திய அரசு..!
சிவப்பு எறும்பு சட்னியை உண்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
ஒடிசா மாநிலத்தின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் வருடம் முழுவதும், சிவப்பு எறும்புகள் ஏராளமாகக் காணப்படும். இந்த எறும்புகள் மரங்களின் இலைகளில் கூடு கட்டி வாழும். அப்பகுதி மக்கள் அந்த எறும்புகளை பிடித்து சட்னி செய்து சாப்பிடுவார்கள். இந்த சட்னி ஓடிசாவில் உள்ள மக்களுக்கு மிகவும் பிடித்த உணவாகும்.
இந்த எறும்பு சட்னி அதிகம் விரும்பப்படக் காரணம், அதில் அதிக அளவு புரதம், கால்சியம், ஜிங்க், வைட்டமின் பி-12, இரும்புச் சத்து, மக்னீசியம், பொட்டாசியம், சோடியம், காப்பர் மற்றும் 18 வகையான அமினோ அமிலங்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இதை உண்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
இந்த அளவுக்கு சத்துக்கள் நிறைந்த எறும்பு சட்னிக்கு, புவிசார் குறியீடு பெற ஒடிசாவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் உணவுப் பட்டியலின் கீழ் விண்ணப்பம் செய்திருந்தனர்.
இந்நிலையில், மத்திய அரசின் தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சகத்தின் சார்பில் ஒடிசா மாநிலத்தின் சிவப்பு எறும்பு சட்னிக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. புவிசார் குறியீடு என்பது ஒவ்வொரு வட்டார பகுதியில் உற்பத்தி ஆகக்கூடிய தனித்துவமான பொருட்களை அடையாளம் கண்டு அதற்கான சட்டப் பாதுகாப்பு வழங்குவது ஆகும். இது அந்தப் பொருளின் தரத்தை நம்பிக்கைக்குரிய முறையில் உறுதிப்படுத்தி, அப்பொருளை உலகளவில் எடுத்துச் செல்வதற்கு உதவுகிறது.
No comments:
Post a Comment