சத்தான மற்றும் சுவையான உளுந்தங்களி செய்வது எப்படி?
தேவையான பொருள்கள்
கருப்பு உளுந்து- 2 கப் (எல்லா கடைகளிலும் கிடைக்கும்)
பச்சரிசிமாவு - அரை கப்
பனங்கருப்பட்டி- 3 கப்
நல்லெண்ணெய்- 1 கப்
சுக்குப்பொடி, ஏலப்பொடி- அரை டீஸ்பூன்
உப்பு- 1 சிட்டிகை
செய்முறை
கருப்பு உளுந்தை கல் நீக்கி சுத்தம் செய்து கழுவி காயவைக்கவும். நன்றாக காய்ந்ததும் அகன்ற வாணலியில் எண்ணெய் விடாமல் சிறிது சிறிதாக சேர்த்து உளுந்தின்பச்சை வாசனை போக வறுக்கவும். அதிகமாகவும் வறுக்க வேண்டாம்.
வறுத்த உளுந்தை சூடு ஆறியதும் மிஷினில் கொடுத்து மைய அரைக்கவும். மிக்ஸியில் பொடிக்கலாம். ஆனால் மைய அரைத்தால் தான் களி நன்றாக இருக்கும். அரைத்த உளுந்துமாவுடன் அரிசி மாவு சிட்டிகை உப்பு சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்.
அடுப்பில் பனங்கருப்பட்டியுடன் சிறிதளவு நீர் விட்டு பாகு காய்ச்சவும். பாகு பதம் முதிரக்கூடாது. பாகு பதம் வரும்போது அதிலிருக்கும் கசடுகளை நீக்கி விட்டு அரிசி உளுந்து கலந்த மாவை சிறிது சிறிதாக தூவியபடி சேர்த்து கிளறவும்.
நல்லெண்ணெயை அவ்வபோது சேர்த்து கிளறியபடி இருக்கவும். எண்ணெய் மொத்தமாக சேர்க்காமல் சிறிது சிறிதாக சேர்த்து கிளற வேண்டும். இல்லையென்றால் களி அடிப்பிடிக்க கூடும். அல்லது கெட்டிப்படும்.
அரை மணி நேரம் அடுப்பை மிதமானத்தீயில் வைத்து நன்றாக கிளறிக்கொண்டே இருக்கவும். இப்போது சுக்குப்பொடி ஏலப்பொடி சேர்த்து மீண்டும் நன்றாக கிளறவும். களி எண்ணெயுடன் சேர்ந்து அல்வா பதத்துக்கு சுருண்டு வரும்போது இறக்கவும்.
அப்படியே தட்டில் போட்டு நடுவில் குழியாக்கி நெய் விட்டு சுடச்சுட சாப்பிடலாம்.அல்லது குழந்தைகள் விரும்பும் வண்ணம் நெய் சேர்த்து சிறு சிறு உருண்டைகளாகவும் பிடித்து வைக்கலாம். நல்லெண்ணெயும் உளுந்துமாவும் நன்றாக கலந்து பளபளவென்று பார்க்கும் போதே நாக்கில் எச்சில் ஊறும். இந்த களி மூன்று அல்லது நான்கு நாட்கள் வரை வெளியில் வைத்தே சாப்பிடலாம். கெடாமல் இருக்கும்.
அரிசி மாவு சேர்க்காமல் உளுந்தங்களி செய்வது உண்டு என்றாலும் உளுந்து மாவுடன் சற்று அரிசி மாவு சேர்த்தால் ருசி வித்தியாசப்படும். உளுந்து மட்டும் போடும் போது பசை போன்று இருக்கும்.
உளுந்தை வறுக்காமல் செய்யலாம். அப்படி செய்தால் உளுந்தின் பச்சை வாடையை பெரும்பாலோனோர் விரும்ப மாட் டார்கள்.அதனால் அந்த வாசம் வராமல் இருக்க உளுந்தை வறுத்து போடுவது நல்லது.
பனங்கருப்பட்டி இல்லாதவர்கள் பனை வெல்லம், பனஞ்சர்க்கரை, நாட்டுவெல்லம் என ஏதாவது ஒன்றை பயனபடுத்தலாம்.
No comments:
Post a Comment