இளநரையைத் தடுப்பதற்கு உதவும் கருவேப்பிலையின் மருத்துவ பயன்கள்! - Minnalseithi

Latest

Search This Blog

Monday, January 8, 2024

இளநரையைத் தடுப்பதற்கு உதவும் கருவேப்பிலையின் மருத்துவ பயன்கள்!

 இளநரையைத் தடுப்பதற்கு உதவும் கருவேப்பிலையின் மருத்துவ பயன்கள்!


வெறும் வாசனைக்காக மட்டும் கறிவேப்பிலையை சமையலில் சேர்ப்பதில்லை! அதிலிருக்கும் மருத்துவக் குணங்கள் நிறைந்த வேதிப்பொருள்களுக்கு, பல்வேறு உடல் உபாதைகளை சரிசெய்யும் தன்மை இருப்பதன் காரணமாகவே, சமையலில் தவறாமல் இடம்பிடித்து வருகிறது.


மூலிகை சாதப் பொடி:


பசியெடுக்காமல் அவதிப்படுகிறீர்களா? கறிவேப்பிலை இலைகளை உலரவைத்து பின் அதை பொடியாக அரைத்து வைத்துக்கொண்டு, அதில் சீரகத்தூள், மிளகுத்தூள், உப்பு சேர்த்து வைத்துக்கொள்ளுங்கள். தினமும் ஒரு வேளை இந்தக் கலவையை சோற்றில் பிசைந்து சாப்பிட நல்ல பசியுண்டாகும். அதாவது `சாதப் பொடியாக’ இந்த மூலிகைக் கலவையைப் பயன்படுத்தலாம். சாதத்தில் பிசைந்து சாப்பிடும்போது சிறிது நல்லெண்ணெய் கலந்து சாப்பிடுங்கள்.


பசியெடுப்பதற்காக செயற்கை மாத்திரைகளையோ டானிக்குகளையோ எடுப்பதை நிறுத்திவிட்டு, கறிவேப்பிலை பொடியை முயன்று பாருங்கள். நீங்களே இந்த மருந்தைத் தயார் செய்துகொள்ளலாம். நீங்கள் தயாரித்த மருந்தைப் பயன்படுத்திப் பாருங்கள்… பின்னர், அதன் அருமை பெருமைகளைச் சொல்லி மற்றவர்களுக்கும் பரிந்துரை செய்வீர்கள்!


கர்ப்பிணிகளின் நண்பன்:


அரசு சித்த மருத்துவமனைகளில் வழங்கப்படும் `அரசு மகப்பேறு சஞ்சீவி’ எனப்படும் கர்ப்பிணிகளுக்கான சித்த மருந்துகளின் தொகுப்பில் `கறிவேப்பிலை பொடி’ சேர்க்கப்பட்டுள்ளது. பெண்களின் கர்ப்ப காலத்தின் முதல் மூன்று மாதங்களில் பசியின்மை, வயிற்றுப் பொருமல், உணவு எதுக்களித்தல் போன்ற செரிமானத் தொந்தரவுகள் அதிகமாக உண்டாகும். இதை சரிசெய்ய கறிவேப்பிலை பொடியை சிறிதளவு எடுத்து சாதத்தில் கலந்து சாப்பிடலாம். உங்களுக்கு தெரிந்த கர்ப்பிணி சொந்தங்களிடம் இந்த மருந்தின் பயன்களைப் பற்றி எடுத்துச் சொல்லுங்கள். அவர்களும் இதனால் பலன் அடையட்டுமே!


பயணத்தை இனிமையாக்கும்:


மலைகளில் பயணம் செய்யும்போது, வாந்தி வருவது போன்ற உணர்வு உங்களுக்கு ஏற்படுகிறதா? கவலை வேண்டாம்! எலுமிச்சையோடு சேர்த்து கறிவேப்பிலைகளையும் முகர்ந்து பாருங்கள். நொடிப்பொழுதில் வாந்தி உணர்வு மறைந்துவிடும். முகர்ந்து பார்ப்பது மட்டுமன்றி கறிவேப்பிலை பொடியையும் தண்ணீரில் கலந்து வாந்தி உணர்வை நிறுத்துவதற்கான மருந்தாகப் பயன்படுத்தலாம். மலைகளுக்கு பயணம் மேற்கொள்ளும்போது இனி மறக்காமல் உங்கள் தோழனாகிய கறிவேப்பிலையையும் அழைத்துச் செல்லுங்கள். உங்கள் பயணம் மிகச் சிறப்பாக அமையும்.


கறிவேப்பிலையில் இருக்கும் `கார்பஸோல்’ (Carbazole) ஆல்கலாய்டுகள், செல்களுக்கு பாதிப்பை உண்டாக்கும் ஃப்ரீ- ரேடிக்கல்களை அழித்து உடலுக்குள் நோய் தங்காமல் பார்த்துக்கொள்ளும். பீட்டா-கரோட்டீன்களோடு வைட்டமின் – ’சி’யையும் நிறைவாகக் கொண்டிருக்கிறது கறிவேப்பிலை. நினைவுத் திறனை அதிகரிக்கவும், விரைவாகச் செயல்படுவதற்கும் காரணமான மூளையின் குறிப்பிட்ட பகுதிகளை கறிவேப்பிலை தூண்டுகிறதாம். அப்படியென்றால் மாணவர்கள் கல்வியில் சாதிக்க கறிவேப்பிலையின் தேவை எவ்வளவு என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.


ரத்த உற்பத்தி அதிகரிக்க:


தவறான உணவுப் பழக்கத்தால் ஏற்பட்ட செரியாமை மற்றும் அதன் காரணமாக உண்டான வாந்தியை நிறுத்த கறிவேப்பிலை ஈர்க்குகளையும் (குச்சிகள்), வேப்ப ஈர்க்குகளையும் சேர்த்து நீரிலிட்டு காய்ச்சி குடிநீரிட்டுப் பருகலாம். ரத்தக்குறைவு நோயைக் குணப்படுத்தவும் கறிவேப்பிலை உதவுகிறது. நிறைய பழங்களோடு சேர்த்து, கறிவேப்பிலை பொடியையும் சேர்த்துக் கொள்ளுங்கள். குறைந்திருக்கும் ரத்த உற்பத்தி விரைவாக அதிகரிக்கும்.


அதுமட்டுமல்ல சர்க்கரை நோய்க்கு எதிராகச் செயல்படும் ஆற்றல் கறிவேப்பிலைக்கு இருப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அது குறித்து தொடர்ந்து பல்வேறு ஆய்வுகளும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. கறிவேப்பிலையை அடிக்கடி பயன்படுத்தினால் உடலில் தேவையற்ற கொழுப்பும் சேராது. இதன் இலைகளில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய்க்கு கிருமிநாசினி செய்கையும் இருக்கிறதாம். கூடவே உடலுக்குத் தேவையான தாதுப்பொருள்களும், வைட்டமின்களும் கறிவேப்பிலையில் அதிகமாகவே இருக்கின்றன.


இளநரைக்கு:


தலைமுடி வளர்ச்சிக்கு சிறந்த உணவுப் பொருள் கறிவேப்பிலை. முடி வளர்ச்சிக்கு மட்டுமல்லாது பள்ளிப் பருவத்திலேயே உண்டாகும் இளநரைக்கும் கறிவேப்பிலை சிறந்தது. இதில் இருக்கும் நுண்பொருள்கள் தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் இளநரையைத் தடுப்பதற்கும் உதவுகின்றன.


வயதான காலத்தில் ஏற்பட்டு வந்த நரை, இக்காலத்தில் இளம் சிறுவர் சிறுமிகளுக்குக்கூட ஏற்படுவதைக் கவனித்தீர்களா! காரணம் என்ன தெரியுமா? சத்து நிறைந்த பழங்களையும், காய்களையும், ஆரோக்கிய உணவுகளையும் புறந்தள்ளிவிட்டு, கொஞ்சமும் சத்தே இல்லாத ஆரோக்கியமற்ற துரித உணவுகளை அதிகமாகச் சாப்பிடுவதால்தான். துரித உணவுகள் வேண்டவே வேண்டாம் மக்களே!


உணவு வகைகளில் சேர்க்கப்படும் கறிவேப்பிலைகளை, உணவோடு சேர்த்து நன்றாக மென்று சாப்பிடுங்கள். அதன் சாரம் செரிமானத் தொந்தரவுகளை சரிசெய்து உங்கள் செரிமான பாதையை மேம்படுத்தும். கறிவேப்பிலைகளை அரைத்து நீரில் கலந்து குடிக்க, செரியாமையால் உண்டான பேதி உடனடியாக கட்டுப்படும்.


பிஞ்சு மாதுளையோடு கறிவேப்பிலை சேர்த்து வெண்ணெயில் வதக்கிப் பரிமாறப்படும் சிற்றுண்டி பற்றிய சங்க இலக்கியப் பதிவு கறிவேப்பிலைக்கு பெருமை சேர்க்கிறது.


உணவுகளில் சேர்க்கப்படும் கறிவேப்பிலைகளை ஓரம் கட்டாமல் சுவைத்துச் சாப்பிடுங்கள். இவ்வளவு மருத்துவ குணங்கள் நிறைந்த கறிவேப்பிலைகளை இனி சாப்பிடாமல் குப்பைகளில் வீசக்கூடாது.

No comments:

Post a Comment