புரோக்கோலி அள்ளித்தரும் மருத்துவப் பயன்கள்! - Minnalseithi

Latest

Search This Blog

Tuesday, January 16, 2024

புரோக்கோலி அள்ளித்தரும் மருத்துவப் பயன்கள்!

 புரோக்கோலி அள்ளித்தரும் மருத்துவப் பயன்கள்!


புரோக்கோலி, அதன் அழகான நிறம் வடிவத்தைப் போலவே பல அற்புதமான மருத்துவக் குணங்களையும் கொண்டது. இதில் பொட்டாசியம், கால்சியம், நார்ச்சத்துகள் அதிகளவில் இருக்கின்றன. கரோடினாய்டு, வைட்டமின் சி. இ, கே, ஃபோலேட், சல்ஃபோரபேன்  ஆகியவையும் இருக்கின்றன.


புரோக்கோலியின் சிறிய பூ போன்ற பகுதியைத்தான் அதிகம் பயன்படுத்துகிறோம். இருந்தாலும் இதன் இலைகளிலும் தண்டுகளிலும் அதிக அளவிலான பினாலிக் (Phenolic), ஆன்டிஆக்ஸிடன்ட், புற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான பல மூலக்கூறுகள் அடங்கியுள்ளன. அதனால் இப்போது பலரும் புரோக்கோலியின் இலைகளையும் தண்டையும் உணவாகப் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள்.


புரோக்கோலியின் மருத்துவப் பயன்கள்...


புற்றுநோய்க்கு மருந்து


புற்றுநோய்க்கு எதிராகச் செயல்படும் அனைத்து அம்சங்களையும் கொண்டது புரோக்கோலி. இதில் அதிகளவில் இருக்கும் சல்ஃபோரபேன் புற்றுநோயைக் கட்டுக்குள் வைத்திருக்கும் ஆற்றல் படைத்தது. சிறிய அளவில் இருக்கும் புரோக்கோலி பெரிய காய்களைவிடச் சிறந்தது. இளசான புரோக்கோலி புரோஸ்டேட் புற்றுநோய், பெண்களிடம் ஏற்படும் பெருங்குடல் புற்றுநோய் மற்றும் நுரையீரல் புற்றுநோய்த் தாக்குதலைத் தடுக்கிறது என சில ஆய்வுகளில் கண்டறிந்துள்ளனர். ஆரம்ப கால மார்பகப் புற்றுநோயை அழிக்கும் சக்தி புரோக்கோலிக்கு உண்டு.


இதய ஆரோக்கியம்


புரோக்கோலியில் இருக்கும் அதிகப்படியான ஃபோலேட், இதய ஆரோக்கியத்துக்கு உதவக்கூடியது. இதய நோய்கள் வராமல் தடுக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்தது. இதிலிருக்கும் பாலிபினால் இதயச் செயல்பாடுகளை மேம்படுத்தும்.


வீக்கம் குறைக்கும்


இதன் இலைகள் நைட்ரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்துவதால், வீக்கங்கள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும். சல்ஃபோரபேனும் இதற்கு உதவும். இதில் வைட்டமின் கே இருப்பதால், ஆர்த்ரைட்டிஸ் வீக்கத்தையும் குறைக்கும்.


ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவைச் சீராக்கும்


கால்சியம் குறைபாடே அதிக ரத்த அழுத்தத்துக்குக் காரணம். புரோக்கோலி உணவைச் சாப்பிட்டால், கால்சியம் சத்து அதிகரிக்கும். ரத்த அழுத்தம் குறையும். இதிலிருக்கும் குரோமியம் ரத்தத்தின் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்; இன்சுலின் சுரக்கும் அளவையும் அதிகரிக்கும்.


ஜுரத்துக்கு நல்லது


இதிலிருக்கும் நார்ச்சத்து உடலின் செரிமான சக்திக்கு உதவும். இதைச் சாப்பிடுவது குடல் ஆரோக்கியம் மேம்படும்; செரிமானம் சீராகும்.


கண்நலம் காக்கும்


வயது அதிகரிக்கும்போது கண் புரை போன்ற கண் நோய்கள் ஏற்படும். புரோக்கோலி இவற்றைத் தடுப்பதற்கு உதவும். இதிலிருக்கும் லூடின் (Lutein), சியாங்தின் போன்ற வேதிப்பொருள்கள் கண் ஆரோக்கியத்துக்குப் பயன்படக்கூடியவை. இதில் ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகம் இருப்பதால், வயது சார்ந்த நோய்களை எல்லாம் கட்டுப்படுத்திவிடும். புரோக்கோலியில் உள்ள வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி 2 ஆகியவையும் பார்வைத்திறன் மேம்பட உதவுபவை.


கொழுப்பைக் குறைக்கும்


புரோக்கோலி, நம் உடலில் ஆறு சதவிகிதம் வரை கெட்டக் கொழுப்பைக் குறைக்கிறது’ என ஓர் ஆராய்ச்சியில் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதன் காரணமாகவே, பல நாடுகளில் இதை அதிகம் உற்பத்தி செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். 


மனஅழுத்தம் தவிர்க்கும்


மனஅழுத்தத்தைக் குறைக்க, இதிலிருக்கும் சல்ஃபோரபேன் பயன்படுகிறது. மனஅழுத்தத்தின் அறிகுறிகள் தென்பட்டால், சல்ஃபோரபேன் நிறைந்த இளசான புரோக்கோலியை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.


எலும்புகளை வலுவாக்கும்


எலும்புகளின் உறுதிக்குக் கால்சியம் அவசியம் தேவை. கால்சியம் சத்து நிறைந்தது புரோக்கோலி. இதை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால், எலும்புகள் வலுப்படும். இதிலிருக்கும் வைட்டமின் கே எலும்பு உறுதிக்கு உதவும்.


சருமப் பாதுகாப்பு


புரோக்கோலியில் இருக்கும் வைட்டமின் சி சிறந்த ஆன்டிஆக்ஸிடன்ட் என்பதால், சருமத்துக்குப் பாதுகாப்பைத் தரும். இளசான புரோக்கோலியின் சாற்றைச் சருமத்தில் தடவிவந்தால், சூரியனின் புற ஊதாக்கதிர்களிலிருந்தும் பாதுகாப்பு கிடைக்கும். இந்தக் கதிர்களால் ஏற்படும் பாதிப்புக்கும் இது மருந்தாக அமையும். இதனால் தோல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு குறையும்.


உடல் எடையைக் குறைக்கும்!


கொழுப்புச்சத்துகள் இல்லாத உணவுப் பழக்கத்துக்கு வைட்டமின், மினரல்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளே சிறந்தவை. அந்த வகையில், கலோரிகள் குறைந்த உணவான புரோக்கோலியை நம் உணவுப் பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம். அரை கப் புரோக்கோலியில் 25 கலோரிகளே இருக்கின்றன. அதே நேரத்தில் மற்ற சத்துகள் நிறைவாக இருக்கின்றன.


ரத்தச்சோகையைத் தடுக்கும்


நாம் சாப்பிடும் உணவில் இரும்புச்சத்துக் குறைந்தால், ரத்த செல்களின் அளவு குறையும். இதனால் ரத்தச்சோகை ஏற்படும். புரோக்கோலியில் இருக்கும் வைட்டமின் சி நம் உடலில் இரும்புச்சத்து அதிகரிக்க உதவும். தொடர்ந்து இதை உணவில் சேர்த்து வந்தால், ரத்தச்சோகை வராமல் தடுக்கலாம்.


உடலின் நச்சுத் தன்மையைக் குறைக்கும்


இதிலிருக்கும் சல்ஃபோரபேன் உடலிலுள்ள நச்சுத் தன்மைக்கு எதிராகச் செயல்படும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.


பிரசவகால ஆரோக்கியம் காக்கும்!


பிரசவகாலத்தில் பெண்களுக்கு அதிகம் தேவை கால்சியம் நிறைந்த உணவுகள். புரோக்கோலி கர்ப்பிணிப் பெண்களுக்குத் தேவையான கால்சியத்தை அளிக்கக்கூடியது. இதை கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிடுவதால் பிறக்கும் குழந்தையின் மூளை ஆரோக்கியத்துக்கு உதவும்.


குறிப்பு


புரோக்கோலியை எண்ணெயில் பொரித்தால் அதிலிருக்கும் வைட்டமின் சி, புரதச்சத்துகள் மற்றும் மினரல்களை இழக்க நேரிடும். இதை ஆவியில் வேகவைத்தால் சத்துக்களை இழக்காமல் பாதுகாக்கலாம். சமைத்த புரோக்கோலியில் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றலும் ஆன்டிஆக்ஸிடன்ட் தன்மையும் குறைந்துவிடும். அதனால் பச்சைக் காய்கறியாக, அரை வேக்காடாக, சாலட் போலச் சாப்பிடுவது மிகுந்த பயனைத் தரும். சிலருக்கு இதனால் அலர்ஜி ஏற்படலாம். அவர்கள் மட்டும் இதை உணவில் சேர்த்துக்கொள்வதைத் தவிர்க்கவும்.

No comments:

Post a Comment