போக்குவரத்து தொழிற்சங்கங்கள் உடனான பேச்சுவார்த்தை தோல்வி: திட்டமிட்டபடி நாளை முதல் பஸ் ஸ்டிரைக் - போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவிப்பு
போக்குவரத்து தொழிற்சங்கங்கள் உடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால், திட்டமிட்டபடி நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தொழிற்சங்கங்கள் அறிவித்து உள்ளன. அதேநேரத்தில் தொ.மு.ச உள்ளிட்ட தொழிற்சங்க பணியாளர்களை கொண்டு பஸ்கள் இயக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இதனால் நாளை பஸ்கள் ஓடுமா, ஓடாதா என்று மக்கள் குழப்பத்தில் உள்ளனர்.
அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த மாதம், 19ம் தேதி, சி.ஐ.டி.யு., - ஏ.ஐ.டி.யு.சி., உள்ளிட்ட, 26 தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கின. வேலை நிறுத்தத்தை தவிர்க்க, தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்படி, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரை முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார். போக்குவரத்து கழக ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து, இதுவரை மூன்று கட்ட பேச்சு நடந்துள்ளது. இருப்பினும், பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
இன்று 4-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் எந்த தீர்வும் எடுக்கப்படாததால், இந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இதனால் நாளை (ஜன.,9) திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் நடைபெறும் என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. பேச்சுவார்த்தைக்கு பின்னர் தொழிற்சங்க நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோரிக்கைகள் எல்லாம் இப்போதைக்கு ஏற்க முடியாது; பொங்கல் பண்டிகைக்கு பிறகு பேசி கொள்ளலாம் என அரசு தரப்பில் கூறியது.
அரசின் இந்த நிலைபாட்டை ஏற்க முடியாது. போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது. ஊதிய உயர்வு உள்ளிட்ட சில கோரிக்கைகளை கூட பிறகு பேசலாம், தற்போதைக்கு நிலுவையில் உள்ள பஞ்சப்படியை அமல்படுத்துங்கள் என்று கேட்டோம். நிலுவையில் உள்ள தொகையை மட்டுமாவது வழங்க வேண்டும் என்று கூறினோம். ஆனால் அரசு ஏற்கவில்லை. எங்கள் தொகையை மறுத்துவிட்டு, போராட்டத்தை கைவிடுங்கள் என கூறுவதற்கு அரசுக்கு என்ன உரிமை இருக்கிறது?
திட்டமிட்டபடி வேலைநிறுத்தம்
இதனால் நாளை திட்டமிட்டபடி வேலைநிறுத்த போராட்டம் நடக்கும். இந்த போராட்டத்திற்கு பொதுமக்களும் ஆதரவு கொடுக்க வேண்டும். 6 கோரிக்கைகளில் இருந்து ஒரு கோரிக்கை வரை வந்தோம்; அந்த ஒரு கோரிக்கையையும் அரசு ஏற்கவில்லை. இன்று மாலை வரை அரசுக்கு நேரம் இருக்கிறது. எப்போது பேச்சுவார்த்தைக்கு அழைத்தாலும் வருகிறோம். ஆனால் இதில் முடிவு கிடைக்க வேண்டும்; இல்லையென்றால் தவிர்க்க முடியாத காரணத்தால் 100 சதவீத பஸ்களும் நாளை நிறுத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
அமைச்சர் சிவசங்கர்
போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது: தொ.மு.ச உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் நாளை பணியில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர். எனவே நாளை பஸ்கள் வழக்கம்போல் இயக்கப்படும். 2 கோரிக்கைகளை ஏற்பதாக ஏற்கனவே போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. அதனால் தான் மற்ற கோரிக்கைகளை பொங்கல் பண்டிகைக்கு பிறகு பேசலாம் என தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் குழப்பம்
பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், அமைச்சர் சிவசங்கர் பஸ்கள் இயக்கப்படும் என்றும், திட்டமிட்டபடி பஸ்கள் இயக்கப்படாது என தொழிற்சங்கங்களும் மாறுபட்ட கருத்தை தெரிவித்துள்ளதால் பஸ் போக்குவரத்தை நம்பியுள்ள பொதுமக்கள் குழம்பி போயுள்ளனர்.
No comments:
Post a Comment