கருஞ்சீரகத்தின் மூலம் குணமாகும் நோய்கள், பயன்படுத்தும் வழிமுறைகள்
சித்த மருத்துவத்தில் பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வரும் மிகப் பழமையான மூலிகை கருஞ்சீரகம். இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்கள், "கருஞ்சீரகம், இறப்பை தவிர மற்ற அனைத்து நோய்களையும் இறைவன் நாடினால் குணப்படுத்தும்" என குறிப்பிட்டிருக்கிறார்.
அரபு நாடுகளில் கருஞ்சீரகத்தை அதிகளவில் உணவில் பயன்படுத்துகிறார்கள், இதனால் தான் அவர்களுக்கு இதயம் சார்ந்த நோய்கள் அதிகமாக வருவதில்லை. யுனானி மருத்துவத்திலும் கருஞ்சீரக எண்ணெய் சிறந்த உடல் தேற்றியாக பயன்படுத்தப்படுகிறது.
கருஞ்சீரகத்தின் சிறப்புகள், அவற்றில் உள்ள மருத்துவ பயன்கள், அதன் மூலம் குணமாகும் நோய்கள், பயன்படுத்தும் வழிமுறைகள் போன்றவற்றை விரிவாக காண்போம்.
கருஞ்சீரகம் செடி வகையைச் சேர்ந்த மூலிகை ஆகும். ஆங்கிலத்தில் இதை பிளாக் குமின் என்பார்கள். இதன் தாவரவியல் பெயர் நிஜல்லா சடிவா. இம்மூலிகையின் பிறப்பிடம் தெற்கு ஐரோப்பா மற்றும் தென்மேற்கு ஆசியா நாடுகள் ஆகும். இது, மத்திய கிழக்கு நாடுகள், ஐரோப்பா, இந்தியா போன்ற நாடுகளில் அதிகஅளவில் பயிரிடப்படுகிறது. இந்தச்செடியின் காய்-கனியில் இருந்து வெளிப்படும் விதை மூலிகையாக பயன்படுகிறது.
கசப்புத்தன்மை கொண்ட கருஞ்சீரக விதைகள் பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்டவை. கருஞ்சீரகத்தை சித்த மருத்துவரின் ஆலோசனையின் பேரில் எவ்வாறு பயன்படுத்தி எந்த நோய்களை தீர்க்கலாம். அதன் விவரம் வருமாறு:-
தாய்ப்பால் சுரக்க:
பிரசவத்திற்கு பிறகு பெண்களுக்கு வரும் வலி, சோர்வு போன்றவை நீங்க கருஞ்சீரகத்தை தேன் விட்டு அரைத்து கொடுக்கலாம். இது தவிர தாய்ப்பால் நன்றாக சுரக்கும், கருப்பையை இயல்பு நிலைக்கு மாற்றும். பிரசவத்திற்கு பின் கருப்பையில் சேரும் அழுக்குகளை நீக்க, ஒரு டேபிள் ஸ்பூன் கருஞ்சீரக பொடியுடன் பனை வெல்லம் சேர்த்து சாப்பிடலாம். குழந்தை பெற்ற மூன்றாம் நாளில் இருந்து தொடர்ந்து 5 நாட்கள் சாப்பிட வேண்டும்.
தோல் நோய்கள்:
தோல் நோய்களுக்கு கருஞ்சீரகம் ஒரு சிறப்பான மருந்து. கருஞ்சீரகத்தை அரைத்து நல்லெண்ணெய்யில் குழப்பி, கரப்பான், சிரங்கு உள்ள இடங்களில் பூச நல்ல குணம் கிடைக்கும்.
மூக்கடைப்பு நீங்க:
கருஞ்சீரக பொடியை தேன் அல்லது நீரில் கலந்து கொடுக்க, மூச்சுமுட்டல் நீங்கும். மழை, குளிர்காலத்தில் பாடாய்படுத்தும் மூக்கடைப்பு நோய்க்கு கருஞ்சீரகம் சிறந்த மருந்து. ஒரு டீஸ்பூன் கருஞ்சீரக பொடியை 50 மில்லி தேங்காய் எண்ணெய்யுடன் சேர்த்து சூடாக்கி, ஆறிய பின் அதில் இரண்டு சொட்டு மூக்கில் விட்டால் மூக்கடைப்பு விலகும்.
இருமல்-விக்கல்:
தொடர் இருமலினால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு டீஸ்பூன் கருஞ்சீரகப் பொடியை, அரை டீஸ்பூன் அரைத்த பூண்டு விழுது மற்றும் தேன் சேர்த்து சாப்பிடலாம். இது நுரையீரலில் தேங்கி இருக்கும் சளியை அகற்றும். கருஞ்சீரகத்தை பொடித்து மோருடன் கலந்து கொடுக்க விக்கல் நீங்கும்.
பித்தப்பை கல் அகல:
ஒரு டீஸ்பூன் கருஞ்சீரகப் பொடியை வெந்நீர் அல்லது தேன் கலந்து காலை, மாலை என இருவேளையும் பருகினால் சிறுநீரக கற்களும், பித்தப்பை கற்களும் படிப்படியாக கரையும்.
மாதவிலக்கு பிரச்சினை:
ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சினைக்கு ஒன்று முதல் 3 கிராம் அளவு கருஞ்சீரக பொடியை உண்டால் மாதவிடாய் ஒழுங்காக ஏற்படும். மாதவிடாய் நேர வயிற்று வலி ஏற்பட்டால், வறுத்து பொடித்த கருஞ்சீரக பொடியை தேன் அல்லது கருப்பட்டி கலந்து மாதவிடாய் தொடங்கும் தேதிக்கு பத்து நாட்கள் முன்பு இருந்தே சாப்பிட்டு வரலாம். இதனால் வயிற்று வலி, ரத்தப்போக்கு, அடிவயிறு கனமாகி சிறுநீர் கழிக்க சிரமப்படுதல் போன்றவை நீங்கும்.
கொழுப்பு நீங்க:
வெந்தயம் கால் கிலோ, ஓமம் 100 கிராம், கருஞ்சீரகம் 50 கிராம் எடுத்து கருக விடாமல் வறுத்து பொடியாக்க வேண்டும். இதை ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து வெதுவெதுப்பான நீரில் கலந்து இரவில் குடிக்கவும். இதை குடித்ததும் வேறு எதையும் உண்ணக்கூடாது. இப்படி தொடர்ந்து செய்து வந்தால் உடலில் தேங்கியிருக்கும் அனைத்து நச்சுகளும் மலம், சிறுநீர், வியர்வை வழியாக வெளியேறும். தேவையற்ற கொழுப்பு நீங்கும். ரத்தம் சுத்தமடையும். ரத்த ஓட்டம் சீராகும்.
ஆண்மை பெருக:
கருஞ்சீரகத்தை, நல்லெண்ணெய்யில் காய்ச்சி அந்த தைலத்தில் சிறிதளவு எடுத்து வெற்றிலையில் பூசி சாப்பிட ஆண்மை பெருகும். இந்த எண்ணெய்யை ஆண் உறுப்பில் தடவ தளர்ச்சி நீங்கும்.
நீரிழிவு குணமாக:
தினமும் காலையில் வெறும் வயிற்றில் கருஞ்சீரகம் கொதிக்க வைத்த நீரை குடித்து வந்தால் நீரிழிவு கட்டுப்படும்.
புற்றுநோயை தடுக்க:
கருஞ்சீரகத்தை ஆய்வு செய்த போது இதில் உள்ள தைமோகுயினன் புற்றுநோயை உண்டாக்கும் செல்களை தடுப்பது கண்டறியப்பட்டுள்ளது. ரத்த புற்றுநோய், மார்பகம், கணையம், கல்லீரல், கர்ப்பப்பை, பெருங்குடல் மற்றும் வாய் புற்றுநோய்கள் வராமல் தடுக்கிறது. புற்றுநோய் வந்தவர்கள் எந்த சிகிச்சை எடுத்தாலும் உணவில் கருஞ்சீரகத்தை சேர்த்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
விஷக்கடி குணமாக:
4 கிராம் கருஞ்சீரகப் பொடியை நீராகாரத்தோடு மூன்றில் இருந்து ஏழு நாள் வரை காலை, மாலை சாப்பிட்டு வர எந்த நச்சுக்கடி இருந்தாலும் குணமாகும்.
தலைவலி, மூட்டுவலி நீங்க:
கருஞ்சீரகத்தை வெந்நீர் விட்டு அரைத்து தலையின் நெற்றிப்பகுதியிலும், மூட்டுவலி உள்ள இடத்திலும் பூச வலி படிப்படியாக நீங்கும்.
யார் பயன்படுத்தக்கூடாது
கருஞ்சீரக விதைக்கு மாதவிடாயை தூண்டும் தன்மை உடையதால் கர்ப்பிணிகள், கருத்தரிக்க விரும்புபவர்கள் பயன்படுத்தக் கூடாது. ரத்த அழுத்தத்திற்கு மருந்து எடுப்பவர்கள் இதை அளவோடு எடுக்க வேண்டும். ஏனெனில் இது ரத்த அழுத்தத்தை சிறிது குறைக்கும். பொதுவாக சித்த மருத்துவரின் ஆலோசனையுடன் கருஞ்சீரகத்தை தினமும் அளவோடு எடுத்து வந்தால், இது ஆயுள் காக்கும் இறை மருந்து என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இதயத்துக்கு நல்லது
100 கிராம் கருஞ்சீரகத்தில் கார்போஹைட்ரேட் 24.9, புரதம் 26.7, கொழுப்பு 28.5 சதவீதம் உள்ளது. இதுதவிர வைட்டமின்கள் ஏ, சி, ஈ, பி மற்றும் லினோலெய்க் அமிலம் நிறைந்துள்ளது. இதிலுள்ள `தைமோகுயினோன்' என்ற தாவர வேதிப்பொருள் மிகச்சிறந்த ஆன்ட்டி ஏஜிங், ஆன்ட்டி ஆக்சிடென்ட் ஆகும். இது உடலில் உள்ள கழிவுகளை நீக்குவதிலும், உடல் உள் உறுப்புகளில் ஏற்படும் கோளாறுகளை
சீராக்குவதிலும் முக்கிய பங்காற்றுகிறது. கருஞ்சீரக விதைகளில் உள்ள எண்ணெய் சத்து, கெட்ட கொழுப்பை குறைத்து நல்ல கொழுப்பை அதிகரித்து இதய செயல்பாட்டை ஊக்குவிக்கிறது. தைராய்டு சுரப்பி பிரச்சினை உள்ளவர்களுக்கு இது ஓர் அருமருந்து. கருஞ்சீரகத்தை வறுத்து பொடித்து டீ போல போட்டு குடிக்கலாம் அல்லது மசாலாவில் சேர்த்து பயன்படுத்தலாம்.
சத்துக்கள்
கருஞ்சீரகத்தில் 32-40 சதவீதம் எண்ணெய் சத்து உள்ளது. இது தவிர லினோலினிக் அமிலம், ஒலியிக் அமிலம், பால்மைடிக் அமிலம், நைஜல்லின், டிரான்ஸ் - அனித்தோல், தைமோகுயினன், பி- சைமின், கார்வாகிரால், தைமால், ஆல்பா மற்றும் பீட்டா பைனின் போன்ற மனித உடலுக்கு நன்மை பயக்கும் ஆல்கலாய்டுகள், கிளைக்கோசைடுகள், நன்மை தரும் கொழுப்பு அமிலங்கள் மற்றும் புரதச் சத்துகள் உள்ளன.
No comments:
Post a Comment