ஏழைகளின் தங்க பஸ்பம் என அழைக்கப்படும் பொன்னாங்கண்ணியின் மருத்துவ பயன்கள் - Minnalseithi

Latest

Search This Blog

Sunday, December 31, 2023

ஏழைகளின் தங்க பஸ்பம் என அழைக்கப்படும் பொன்னாங்கண்ணியின் மருத்துவ பயன்கள்

 ஏழைகளின் தங்க பஸ்பம் என அழைக்கப்படும் பொன்னாங்கண்ணியின் மருத்துவ பயன்கள்


பொன்னாங்கண்ணி. பொதுவாக இந்தியாவில் பல இடங்களில் பயிராகக் கூடிய கொடி வகையை சேர்ந்த கீரை. இது, எல்லா காலங்களிலும் கிடைக்கக் கூடியது. இக்கீரையில் கால்சியம், பீட்டா கரோட்டின், நார்ச்சத்து, இரும்புச் சத்து மற்றும் வைட்டமின் சி, ஏ போன்ற சத்துக்கள் அதிகளவில் இருக்கின்றன.


இதை, 'கோல்டன் பிளான்ட்' என, பொதுவாக வர்ணிப்பர். பொன்னாங்கண்ணி கீரையை வாரம் ஒரு முறையோ அல்லது 10 நாட்களுக்கு ஒரு முறையோ தவறாமல் உணவில் எடுத்து கொள்வது நல்லது.


இரு வகைகளில் பொன்னாங்கண்ணி கிடைக்கிறது. பச்சை நிறத்தில் இருப்பது, நாட்டு பொன்னாங்கண்ணி என்றும், சற்று சிவப்பு நிறம் கலந்து இருப்பது, சீமை பொன்னாங்கண்ணி என்றும் அழைக்கப்படுகிறது. இரண்டு வகை நிறக் கீரைகளுமே ஏறக்குறைய ஒரே மாதிரியான சத்துக்கள் கொண்டவை.


பொதுவாக கண் நோய், சர்க்கரை குறைபாடு, நோய்த்தொற்று, கொலஸ்ட்ரால், சத்துக் குறைவு, ரத்த சோகை, உடல் சூடு, மூல வியாதி, வாத நோய் சம்பந்தமான பிரச்னைகளுக்கு நல்ல தீர்வை கொடுக்கக் கூடியது. மேலும், தோலுக்கு பொன்னிறத்தையும், நல்ல மினுமினுப்பையும் தரக்கூடியது.


தினமும் பொன்னாங்கண்ணி கீரையை உண்டு வர, தேகம் அழகு பெறும்.


உப்பில்லாமல் வேக வைத்து, வெண்ணெய் சேர்த்து, 40 நாட்களுக்கு உண்ண, கண் நோய்கள் நீங்கும்.


இக்கீரையுடன் பூண்டு அதிகம் சேர்த்து, அடிக்கடி உண்டு வர, மூல வியாதி நீங்கும்.


பொன்னாங்கண்ணி கீரையை அரைத்து, சிறு சிறு வில்லைகளாகத் தட்டி காய வைத்து கண்களில் வைத்து கட்டி கொள்ள, சூடு குறைந்து, கண் நோய்கள் நீங்கும்.


பச்சை பொன்னாங்கண்ணி கீரையை நன்றாக அரைத்து தலையில் தேய்த்து, 20 முதல் 30 நிமிடங்கள் ஊற வைத்து குளிக்க, கண் எரிச்சல், உடல் சூடு நீங்கும். தலைமுடியும் கொட்டுவது நின்று, கறுத்து வளரும்.


பொன்னாங்கண்ணி சாறு, கரிசலாங்கண்ணி கீரை சாறு, நெல்லிக்காய் சாறு, பசும்பால், எண்ணெய், அதனுடன் சிறிது அதிமதுரம் இவற்றை சமமான அளவில் எடுத்து, பால் விட்டு அரைக்கவும். இக்கலவையை கலந்து காய்ச்சி, வடிகட்டி எடுத்த எண்ணெயை வாரம் இருமுறை தலையில் தேய்த்து, தலை மூழ்கி வர, கண் வியாதிகளும், பித்த நோய்களும் குணமாகும் என கூறியுள்ளனர், சித்தர்கள்.


பொன்னாங்கண்ணி கீரையுடன் துவரம் பருப்பு சேர்த்து குழம்பு செய்து சாப்பிட்டு வர, எலும்புகள் நல்ல வலுப்பெறும். நோயால் குறைந்த உடல் எடை, மீண்டும் இயல்பு நிலைக்கு வரும்.


வாரம் இரண்டு முறையாவது இக்கீரையை சாப்பிட்டு வர, மூளைக்கும், இதயத்திற்கும் புத்துணர்ச்சியும், நன்றாக செயல்படவும் உதவி செய்யும்.


சிறுநீர் எரிச்சல் நீங்கவும், சிறுநீரகம் நன்கு செயல்படவும் பொன்னாங்கண்ணியை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளலாம்.


கால்சியம், இரும்பு மற்றும் தங்கச் சத்துக்கள் பொன்னாங்கண்ணியில் இருப்பதால், இது ஏழைகளின் தங்க பஸ்பம் என, அழைக்கப்படுகிறது

No comments:

Post a Comment