இனிய ஆரோக்கியத்துக்கான ‘காரம்!’:அக்கரகாரம் மூலிகையின் மருத்துவ பயன்கள்
பிடித்தமான, பழகிய உணவைப் பற்றி நினைத்ததுமே நாவில் எச்சில் ஊறுவதைப் போல, ‘அக்கரகாரம்’ எனும் மூலிகையோடு பழகிய பின், அதைப் பற்றி நினைத்ததுமே நாவில் எச்சில் ஊறத் தொடங்கிவிடும். காரணம் என்ன தெரியுமா? ஒருமுறை சுவைத்ததும் நினைவில் அழுத்தமாகப் பதிந்துவிடும் அதன் காரம்!
ஆற்று நீரிலோ குளத்து நீரிலோ தோள்வரை மூழ்கி, ராக சாதகம் எல்லாம் செய்தும் குரல் மெருகேறவில்லையா..? அக்கரகாரத்தைத் தினமும் கொஞ்சம் சுவைத்துப் பாருங்கள், அனைத்து ராகங்களும் உங்கள் குரலில் நடனமாடும். குளிருக்குத் தேவையான இதமான வெப்பத்தைக் கொடுக்கும் அக்கரகாரத்தின் ஆதரவு இருந்தால், கப நோய்கள் நம்மை முடக்காது.
பெயர்க் காரணம்: அக்கிராகாரம், அக்கராகாரம் என்றும் அழைக்கப்படுகிறது. ‘கார்ப்புச் சுவை’ கொண்ட மூலிகை என்பதால் அக்கர‘காரம்’ என்று பெயர்.
அடையாளம்: மஞ்சள் நிறப் புள்ளிகள் தூவப்பட்டது போலக் காட்சி தரும் இதன் அழகான மலர்களை, மிகச் சிறிய பூப்பந்தோடு உருவகப்படுத்தலாம். சிறு செடியினமான அக்கரகாரம், பூமிக்குள் காரமான வேர்களைப் பரப்பும்! ‘அனசைக்ளஸ் பைரீத்ரம்’ (Anacyclus pyrethrum) என்பது அக்கரகாரத்தின் தாவரவியல் பெயர். ‘அஸ்டிரேசியே’ (Asteraceae) குடும்பத்தைச் சார்ந்த இதில், பெல்லிடோரின் (Pellitorine), இனுலின் (Inulin), பினைல் எதைலமைன் (Phenylethylamine), டானின்கள் (Tannins) ஆகிய வேதிப் பொருட்கள் காணப்படுகின்றன.
உணவாக: இதன் வேரை வாயில் அடக்கிக்கொள்ள, எச்சில் கோளங்களிலிருந்து ஊற்றுபோல எச்சில் சுரந்து, வாய்ப் பகுதியை நனைப்பதை உணரலாம். உணர்ச்சிப் போக்கித் தன்மை உடையதால், ஆரம்பநிலை பல் வலிகளுக்குக் கிராம்பு போல் அக்கிரகாரத்தைப் பயன்படுத்தலாம்.
இதன் வேரை ஒன்றிரண்டாக இடித்து, தண்ணீரிலிட்டுக் கொதிக்கவைத்து வாய் கொப்பளிக்க, குரல் கம்மல், வாய்ப்புண் ஆகியவை மறையும். முற்காலத்தில் அக்கரகாரத்துடன் அதிமதுரத்தைச் சேர்த்து ‘மவுத்-வாஷ்’ தயாரித்திருக்கிறார்கள். அக்கரகாரத்தை வாயிலிட்டு ருசித்து மென்றால், தொண்டையில் கட்டிக்கொண்டிருக்கும் கோழை, குழைந்து வெளியேறுவதை உணர முடியும்.
அக்கரகாரம், செஞ்சந்தனம், சுக்கு, மிளகு, கிராம்பு, சாதிக்காய், குங்குமப்பூ சேர்த்துச் செய்யப்படும் மருந்து, நரம்புத் தளர்ச்சிக்கு உகந்தது என்கிறது சித்த மருத்துவம். அக்கரகாரம், சுக்கு, அதிமதுரம், சிற்றரத்தை, பேரீச்சை, தேன் சேர்த்துச் செய்யப்படும் ‘கண்டாவிழ்தம்’ எனப்படும் மருந்தை நாவில் தடவுவதால், சுரம், கப நோய்கள் நீங்கும்.
மருந்தாக:
ஆய்வு விலங்குகளில் டெஸ்டோஸ்டீரான் உற்பத்தியை அக்கரகாரம் அதிகரித்திருக்கிறது. விந்தணுக்களின் எண்ணிக்கை, அதன் உயிர்ப்புத் தன்மை ஆகியவற்றை அதிகரிக்கும் மருந்தாக அக்கரகாரம் பயன்படுகிறது. நோய்க் கிருமிகளின் தாக்கம் இருக்கும்போது, அவற்றை எதிர்த்துப் போராடும் ரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அக்கரகாரம் உதவுவதாக ஆய்வு குறிப்பிடுகிறது.
மனச் சோர்வைத் தடுத்து, நினைவுத் திறனையும் அறிவாற்றலையும் அதிகரிக்கவும் அக்கரகாரத்தின் உட்கூறுகள் பயன்படுகின்றன.
வீட்டு மருந்தாக: அக்கரகாரம், மிளகு, கடுக்காய் சம அளவு எடுத்து, இள வறுப்பாய் வறுத்து கால் தேக்கரண்டி அளவு தேனில் குழைத்துச் சாப்பிடுவது இருமலுக்கான முதலுதவி மருந்து. வாந்தியைக் கட்டுப்படுத்தவும் நரம்பு மண்டலத்தை வலுப்படுத்தவும் அக்கரகாரத்தைப் பொடி செய்து, பாலில் போட்டுக் காய்ச்சிப் பருகலாம். மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்படும் இயற்கைப் பற்பொடிகளில் அக்கரகார வேரையும் சேர்த்துக்கொள்ள, பற்பொடியின் கிருமிநாசினித் தன்மை அதிகரிக்கும்.
சித்த மருத்துவம் குறிப்பிடும் கப வகையான சுரங்களுக்கு, அக்கரகாரம் முக்கியமான மருந்து. ‘கப சுரக் குடிநீர்’ எனும் சித்த மருந்தில் அக்கரகாரம் சேர்க்கப்படுகிறது. குரல்வளைப் பகுதியில் ஏற்படக்கூடிய தொற்றுகளை அக்கரகாரம் தடுக்கும்.
நரம்பு வில நோய் (Motor Neuron Disease) அல்லது அடிபடுவதால், 12-ம் கபால நரம்பு சேதமடையும்போது, நாவின் செயல்பாடுகள் பாதிக்கப்படும். இந்நிலையில் உள்நாக்கில் அழற்சி தோன்றும்போது, அக்கரகாரத்தைப் பொடி செய்து, தேனில் குழைத்துக் கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கச் செய்யலாம். அக்கரகாரம், சிற்றரத்தை மற்றும் இஞ்சி சேர்த்து மோர் கொண்டு காய்ச்சித் தயாரிக்கப்படும் குடிநீர், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட வர்களுக்கான ஊக்க மருந்தாக கொடுக்கப்படுகிறது.
No comments:
Post a Comment