ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன? ஆருத்ரா தரிசனத்திற்குக் காரணமான புராணக் கதை - Minnalseithi

Latest

Search This Blog

Tuesday, December 26, 2023

ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன? ஆருத்ரா தரிசனத்திற்குக் காரணமான புராணக் கதை

 ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன? ஆருத்ரா தரிசனத்திற்குக் காரணமான புராணக் கதை


மாதங்களில் சிரேஷ்டமான மார்கழி மாதத்தில், திருவாதிரை நட்சத்திரத்தன்று வருகிறது ஆருத்ரா தரிசனம். நட்சத்திரங்களில் திருவோணம் மற்றும் திருவாதிரை இரண்டிற்கும் தான் திரு என்னும் அடைமொழி சொல்லப்பட்டிருக்கிறது. திருவாதிரையை வடமொழியில் ஆருத்ரா என்று கூறுவார்கள். ஆருத்ரா தரிசனத்திற்குக் காரணமான புராணக் கதை ஒன்றை இங்குப் பார்ப்போம்.


பஞ்ச பூதங்களின் இயக்கத்திற்கும் ஆதாரமாக இருக்கும் ஸ்ரீ சிவபெருமானை நிந்தித்து, ஒருமுறை தாருகாவனத்தில், முனிவர்கள் ஒன்று கூடி, முக்கண்ணனுக்கு எதிராக வேள்வி ஒன்றை நிகழ்த்தினார்கள். அதாவது, அவர்களின் கோட்பாட்டின்படி, கர்மத்தை மட்டும் செய்தால் போதுமானது. கடவுள் என்பவர் கிடையாது என்பதுதான். அவர்களுக்குப் பாடம் புகட்ட வேண்டி, கயிலைநாதன், பிட்சாடனர் ரூபமெடுத்து, பிட்சைக் கேட்டு, முனிவர்களின் இல்லங்களுக்குச் சென்றார். பிட்சாடனரைக் கண்ட முனி பத்தினிகள் அனைவரும், அவரின் பின்னால் போகத் தொடங்கினார்கள்.


இச்செயலைக் கண்ட முனிவர்கள், மிகுந்த கோபம் கொண்டு வெகுண்டு எழுந்தார்கள். வேள்வித்தீயினில், மத யானை, மான், உடுக்கை, முயலகன். தீப்பிழம்பு ஆகியவற்றைத் தருவித்து, அனைத்தையும், ஸ்ரீ சிவபெருமான் மேல் ஏவி விட்டார்கள். சர்வேசன் ஆனவர், மத யானையைக் கொன்று அதன் தோலைத் தரித்துக் கொண்டார். மான், உடுக்கை, அக்னி அனைத்தையும் தானே சுவீகரித்துக் கொண்டார். முயலகனின் மேல் வலது காலை ஊன்றி இடது காலைத் தூக்கியபடி நடனம் ஆடி, முனிவர்கள் உண்மையை அறியச் செய்தார். அதுவே ஆருத்ரா தரிசனம் என்று கூறப் படுகிறது.


ஸ்ரீ நடராஜப் பெருமாள் 108 நடனங்களை ஆடி இருக்கிறார். அவர் தனியாக ஆடியது 48. ஸ்ரீ உமா தேவியுடன் சேர்ந்து ஆடியது 36. தேவர்களுக்காக ஆடியது 12. ஸ்ரீ திருமாலுடன் ஆடியது 9. முருகனுடன் ஆடியது 3. 


பஞ்ச பூதங்களான ஆகாயம் என்பதற்கு சிதம்பரம் என்றும். அக்னி என்பதற்கு திருவண்ணாமலை என்றும், நீர் என்பதற்கு திருவானைக்காவல் என்றும், காற்றுக்கு காளஹஸ்தி என்றும் , நிலத்திற்கு காஞ்சிபுரம் அல்லது திருவாரூர் என்றும் இவைகளின் பெருமைகளைக் கூறும் வண்ணம்  இந்த புண்ணியத் தலங்கள் அமைந்திருக்கின்றன.  இதில் சிதம்பரம் தான் முதன்மையாகச் சொல்லப்படுகிறது.


ஸ்ரீ முக்கண்ணனுக்கு வருடத்தில் ஆறு முறைகள் மட்டுமே அபிஷேகம் செய்யப்படுகிறது. மூன்று முறைகள் திதியன்றும், மூன்று மறைகள் நட்சத்திரம் அன்றும் செய்யப்படும் அபிஷேகத்தில், திருவாதிரை அன்று செய்யப்படும் அபிஷேகமே விசேஷமாகச் சொல்லப்படுகிறது.

No comments:

Post a Comment