ஆருத்ரா தரிசனம் அன்று களியும், ஏழு கறிக்கூட்டும் செய்யும் வழக்கம் எப்படி வந்தது?
முந்தைய காலத்தில் சேந்தனார் என்கிற பெயர் கொண்ட விறகு வெட்டி ஒருவர் இருந்தார். அவர் சிறந்த சிவ பக்தர். தினமும் ஒரு சிவ பக்தருக்கு ஆகாரம் அளித்துவிட்டுத் தான் உண்ணுவதையே வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒரு நாள் நல்ல மழை பெய்ததில், வெட்டிய விறகெல்லாம் ஈரமாகி விட்டது. அதை விற்க முடியாமல் போனதால், கையில் பணம் இல்லாமல் போனது. அதனால் மனைவிடம் வீட்டு சிலவிறகு பணம் கொடுக்க முடியாமல் போனது.
அன்றைய தினம் ஒரு சிவபக்தர், சேந்தனாரின் இல்லம் வந்து, பிட்சைக் கேட்டார். அவரின் மனைவி, வீட்டில் இருந்த அரிசி மாவையும் வெல்லத்தினையும் சேர்த்து களி செய்தார். வீட்டில் மிகுதியிருந்த ஏழு காய்களில் கூட்டு ஒன்றினைச் செய்து, சிவனடியாரின் பசியைப் போக்கினார். பிறகே இருவரும் உண்டார்கள். அடுத்த நாள் கோயிலை வழக்கம் போல் திறந்த அர்ச்சகர், பகவானின் கருவறையில் களியும் கூட்டும் சிதறி இருப்பதைப் பார்த்தார். பிறகு உண்மையை உணர்ந்தார். சேந்தனாரின் பக்தியை உலகுக்குத் தெரியப்படுத்த ஆண்டவனே பிட்சாடனர் ரூபத்தில் வந்தார் என்பதைக் கூறவும் வேண்டுமோ?
பஞ்சபூத ஸ்தலங்களுக்கு யாத்திரை செல்பவர்கள், முதலில் சிதம்பரம், அடுத்து காளஹஸ்தி, அடுத்து திருவண்ணாமலை, அடுத்து திருவானைக்காவல், அடுத்து காஞ்சிபுரம் அல்லது திருவாரூர் என்கிற கிராமத்தில் முடிக்க வேண்டும். ஸ்ரீ நடராஜப் பெருமானின் ஆடல் கலையைத் தரிசித்தாலே புண்ணியம் என்று கூறப்படுகிறது.
ஆருத்ரா தரிசனம் அன்று களி, கூட்டு செய்து ஸ்ரீ நடராஜப் பெருமானுக்கு நைவேத்தியம் செய்து சமர்ப்பித்து, முடிந்தவரை சிவ ஸ்தோத்திரங்களைக் கூற வேண்டும். நோன்பு மேற்கொள்கிறவர்கள் , மார்கழி திருவாதிரையில் நோன்பைத் தொடக்கி, ஒவ்வொரு திருவாதிரை நட்சத்திரம் அன்றும் நோன்பு மேற்கொண்டு ஒரு வருட காலத்தில் பூர்த்தி செய்ய வேண்டும். எல்லாம்வல்ல ஸ்ரீ சிவகாமசுந்தரி உடனுறை ஸ்ரீ நடராஜப் பெருமான் எல்லா வளங்களையும் அனைவருக்கும் அருளட்டும்.
No comments:
Post a Comment