இதயத்தை பாதுகாக்க உதவும் ஊட்டச்சத்துக்களும், உணவுமுறைகளும்!
நம் உடலில் மிக முக்கியமாக இருப்பது இதயம். இதயத்தை ஆரோக்கியத்தை நல்லமுறையில் வைத்திருக்க நமக்கும் சரியான உணவு முறை அவசியமாக உள்ளது. இதய ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்துகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
இதயம் என்பது நமது உடலின் மிக முக்கியமான உறுப்பாகும். நம் இதயம் ஆரோக்கியமாக இருந்தால் தான் வாழ்வை இனிமையாக அனுபவிக்க முடியும். ஆரோக்கியமான இதயம் என்பது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் அவசியமானது.
உடல் செயல்பாடுகள் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றினால் இதய நோய்கள் அல்லது மாரடைப்பு ஏற்படுவதை தவிர்த்து கொள்ள முடியும். இதயம் ஆரோக்கியமாக இருந்தால் பக்கவாதம் ஏற்படும் அபாயமும் குறைவாக இருக்கும். இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த உறுப்பாக இருக்கும் இதயத்திற்கு சில ஊட்டச்சத்து குறைபாடுகள் கூட ஆபத்தை விளைவிக்கலாம்.
பலரும் நாம் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுகிறோம். அதனால் நமக்கு ஊட்டச்சத்து குறைபாடுகள் இருக்காது என்று நினைத்து கொள்கிறார்கள். ஆனால் சுத்தான பழங்கள், காய்க்கறிகள் மற்றும் தானியங்களை டயட்டில் சேர்த்தாலும் கூட, உடலின் சிறந்த செயல்திறனுக்கு தேவைப்படும் சில முக்கிய வைட்டமின்ஸ் மற்றும் மினரல்ஸ் போன்ற ஊட்டச்சத்துக்களில் குறைபாடு ஏற்படுவதற்கான சாத்தியம் இருப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். இங்கே நம் இதய ஆரோக்கியத்திற்கு பாதிப்பை எற்படுத்த கூடிய 5 ஊட்டச்சத்துக்கள் பற்றி பார்க்கலாம்.
மெக்னீசியம் : அழற்சி, மனச்சோர்வு மற்றும் ஒற்றை தலைவலி என பல சிக்கல்களை தடுப்பதில் மெக்னீசியத்திற்கு முக்கிய பங்கு உண்டு. இதய நோய் ஏற்படுவதற்கான முக்கிய காரணியாக ஹை பிளட் பிரஷர் அதாவது உயர் ரத்த அழுத்தம் இருக்கிறது. மெக்னீசியம் நம்முடைய ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், இதயத் துடிப்பை சீராக பராமரிக்கவும் உதவுகிறது. மெக்னீசியம் குறைபாடு இருப்பது இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும். காலே, கீரைகள், collard greens, பச்சை இலை காய்கறிகள், சால்மன், அவகேடோ, வாழைப்பழங்கள், லோ-ஃபேட் யோகர்ட், நட்ஸ் மற்றும் சீட்ஸ்களில் மெக்னீசியம் அதிகம் நிறைந்திருக்கிறது. மெக்னீசியம் சப்ளிமெண்ட் எடுக்க திட்டமிட்டால் நீங்கள் உரிய நிபுணரை அணுகுங்கள்.
பொட்டாசியம் : கார்டியாக் ரிதம்-ல் (cardiac rhythm) அசாதாரண நிலை மற்றும் தசை பலவீனத்தை பொட்டாசியம் குறைபாடு ஏற்படுத்த கூடும் என ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. பொட்டாசியம் அதிகம் காணப்படும் உணவுகளில் உருளைக்கிழங்கு, கிட்னி பீன்ஸ், வாழைப்பழங்கள், அவகேடோ, சன்-ட்ரைட் டோமேட்டோஸ் (சூரிய ஒளியில் உலர்த்தப்பட்ட தக்காளிகள்), பால், சால்மன் மற்றும் டுனா போன்றவை அடக்கம். பொட்டாசியம் சப்ளிமெண்ட்ஸ் எடுக்க நீங்கள் முடிவு செய்தால் தகுந்த நிபுணரை கலந்தாலோசிப்பது நல்லது. ஏனென்றால் அதிக பொட்டாசியம் எடுத்து கொள்வதால் சீரற்ற இதய துடிப்பு (irregular heartbeat) ஏற்படலாம்.
வைட்டமின் டி : நாள்பட்ட இதய செயலிழப்பு பெரும்பாலும் வைட்டமின் டி குறைபாட்டுடன் தொடர்புடையது என்பதை பல ஆய்வு முடிவுகள் வெளிப்படுத்தி உள்ளன. போதுமான அளவு வைட்டமின் டி இல்லாதது நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். நம் உடல் கால்சியத்தை பயன்படுத்துவதில் வைட்டமின் டி குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. வைட்டமின் டி நிறைந்துள்ள உணவுகளில் முட்டை மஞ்சள் கரு, சால்மன், டுனா மற்றும் ஃபோர்ட்டிஃபைட் ஆரஞ்சு ஜூஸ் உள்ளிட்டவை அடக்கம். வைட்டமின் டி சப்ளிமெண்ட்ஸ் எடுக்க முடிவு செய்தால் நீங்கள் ஒரு நாளைக்கு எவ்வளவு டோஸேஜ் எடுக்க வேண்டும் என்பதை உரிய மருத்துவரிடம் கலந்தாலோசித்து கொள்ளுங்கள்.
கால்சியம்: ரத்த அழுத்தம் கட்டுப்பாடில்லாமல் இருந்தால் அது இதய நோய் மற்றும் பக்கவாதம் போன்ற பாதிப்புக்கள் ஏற்படுவதற்கான அபாயத்தை விரைவுபடுத்தும். ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதில் கால்சியம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒருவரது உடலில் கால்சியம் அளவு தொடர்ந்து குறைவாக இருப்பது அவரது ரத்த அழுத்தத்தை அதிகரிக்க செய்யலாம். தயிர், யோகர்ட், பால், செறிவூட்டப்பட்ட தானியங்கள் மற்றும் சோயாபீன்ஸ் உள்ளிட்டவற்றில் அதிக கால்சியம் உள்ளது. இது போன்ற கால்சியம் அதிகம் அடங்கிய உணவுகளை தொடர்ந்து எடுத்து கொள்வது இதயம் மற்றும் எலும்புகளை ஆரோக்கியமாக வைத்து கொள்ள உதவும்.
பி வைட்டமின்கள்: ஃபோலேட் மற்றும் வைட்டமின் பி-6 நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்து கொண்டவர்களுக்கு பக்கவாதம் மற்றும் இதய செயலிழப்பு தொடர்பான இறப்பு அபாயம் கணிசமாக குறைந்துள்ளதை ஆய்வு ஒன்று வெளிப்படுத்தி இருக்கிறது. நுரையீரலில் இருந்து ஆக்ஸிஜனை எடுத்து சென்று நம் உடல் முழுவதும் உள்ள திசுக்கள் மற்றும் உறுப்புகளுக்கு விநியோகிக்கும் பணியை ரத்த சிவப்பணுக்கள் செய்கின்றன. நம் உடலில் புதிய ரத்த சிவப்பணுக்களை உருவாக்க பி வைட்டமின்ஸ் உதவுகின்றன. வைட்டமின் B12 உடன் சேர்ந்து B6 மற்றும் B9 இதயத்தை ஆரோக்கியமாக வைக்கின்றன.
No comments:
Post a Comment