அழகுப் பராமரிப்புக்குப் பயன்படும் அரிசி கலந்த தண்ணீர்!ரைஸ் வாட்டர் தயாரிக்கும் முறை மற்றும் பயன்படுத்தும் முறை
சாதம் வடிப்பதற்காக அரிசியைக் கழுவுவோம் இல்லையா? அந்த அரிசி களைந்த தண்ணீரையும்கூட அழகுப் பராமரிப்புக்குப் பயன்படுத்தலாம்.
இந்த ரைஸ் வாட்டர், நம்முடைய சருமத்திற்கு மட்டுமல்லாமல் கூந்தலுக்கும் மிகவும் நல்லது’’ .
``ஒருநாள் முழுக்க தண்ணீரில் அரிசி ஊறும்போது, அதில் சில பாக்டீரியாக்கள் உருவாகின்றன. அந்த நீரைத் தலைக்குப் பயன்படுத்தும்போது பொடுகிலிருந்து நிவாரணம் கிடைக்கும். அதை முகத்திற்குப் பயன்படுத்தும்போது சருமம் மென்மையாகவும் பளிச்சென்றும் மாறும். அப்படி, மிகக் குறைந்த செலவில் ஒரு சிறப்பான ரைஸ் வாட்டர் ஃபேஸ் பேக் மற்றும் ஒரு ஹேர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி என்று பார்ப்போம்.
ரைஸ் வாட்டர் தயாரிப்பு முறை
நான்கைந்து டீஸ்பூன் அரிசியில் (புழுங்கல் அரிசி என்றில்லை, எந்த அரிசியும் எடுத்துக்கொள்ளலாம்) தண்ணீர் ஊற்றி இரவு முழுக்க ஊற
வைத்து, தண்ணீரை வடித்து எடுத்துக்கொள்ளுங்கள். இதுதான் ரைஸ் வாட்டர். 2 முதல் 3 மணிநேரம் வரைகூட ஊறவைக்கலாம். ஆனால், இரவு முழுக்க ஊறும்போது கூடுதல் பலன் தரும்.
முகத்திற்கான ரைஸ் வாட்டர் பேக்
கார்ன் ஃப்ளார் ஒரு டீஸ்பூன் அல்லது இரண்டு டீஸ்பூன் எடுத்துக்கொள்ளவும். கார்ன் ஃப்ளார் இல்லையென்றால் அரிசி மாவு எடுத்துக்கொள்ளலாம். இந்த மாவில் கொஞ்சம் ரைஸ் வாட்டர் சேர்த்து நன்கு கலக்கவும். இந்தக் கலவையை இன்னும் மெருகேற்ற, ஒரு டீஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்க்கவும். இந்த ஃபேஸ் பேக், முக தசைகளை இறுக்கமாக்கி (tightens), பொலிவாக்குவதுடன் வயது மூப்பைத் தள்ளிப் போடும் ஆன்ட்டி ஏஜிங்காகவும் செயல்படுகிறது. முகத்தில் கரும்புள்ளிகள் இருப்பவர்கள் மற்றும் கழுத்து கறுப்பாக இருப்பவர்களுக்கு இந்த ஃபேஸ் பேக் நல்ல பலனைக் கொடுக்கும். கழுத்து மிகவும் கறுப்பாக இருப்பவர்கள், தினமுமே பயன்படுத்தலாம். முகம் மற்றும் கழுத்தில் அப்ளை செய்து, 15 - 30 நிமிடங்களுக்குப் பிறகு, தண்ணீர் தொட்டுத் தொட்டு மென்மையாகத் துடைத்து எடுக்கவும்.
கேசத்துக்கான ரைஸ் வாட்டர் மிக்ஸ்
கேசத்தின் அளவுக்குத் தேவையான ரைஸ் வாட்டர் எடுத்து, வைட்டமின் ஈ காப்சூல் ஒன்றை எடுத்து அதிலுள்ள எண்ணெயை இதனுடன் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். ரைஸ் வாட்டர் கேசத்துக்கு மிகவும் நல்லது என்றாலும் அதை அப்படியே பயன்படுத்தும்போது சிலருக்கு வறண்டுபோகலாம். எனவே, இந்த வைட்டமின் ஈ எண்ணெயைச் சேர்க்கிறோம்.
பின்னர், ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி, தலையில் ஸ்பிரே செய்ய, நல்ல சீரம் போலச் செயல்படும்.
வெளியில் செல்லும்போது இதனைப் பயன்படுத்தினால் தலைமுடி கலையாமல் அப்படியே நன்கு படிந்திருக்கும். சில சமயங்களில் தலையில் சின்னச் சின்ன முடிகள் தூக்கிக்கொண்டிருக்கும். அதைக் கட்டுப்படுத்தவும் இது உதவும். இதனை ஸ்கால்ப்பில் பயன்படுத்தினால் முடி நன்றாக வளரும். முடி மென்மையாகவும் பளபளப்புடனும் இருக்கும். கூந்தலின் நுனி உடைந்துபோகாமல் இருக்கவும் இதனை அப்பகுதியில் ஸ்பிரே செய்யலாம். முகத்திலும் இதனை ஸ்பிரே செய்துகொள்ளலாம். ஒரு புத்துணர்ச்சியான லுக் கிடைக்கும்.
ஒரு சிறிய பஞ்சு உருண்டையை எடுத்து அதனை இந்த ரைஸ் வாட்டரில் முக்கி எடுத்து முகத்தில் நன்கு தடவி, அப்படியே விடவும். இப்படி இதை ரெகுலராகப் பயன்படுத்தினால் முகத்தில் இருக்கும் சிறிய சிறிய புள்ளிகள் மறையத்தொடங்கும்.''
No comments:
Post a Comment