இயேசு கிறிஸ்துவின் பிறப்பு...! - Minnalseithi

Latest

Search This Blog

Sunday, December 24, 2023

இயேசு கிறிஸ்துவின் பிறப்பு...!

 இயேசு கிறிஸ்துவின் பிறப்பு...!

இதோ… கன்னி கரு தாங்கி ஒரு மகனைப் பெறுவார்; அவர் இம்மானுவேல் என்னும் பெயர் பெறுவார்; மேன்மைமிக்கவராய் இருப்பார் என்பது இறைவாக்கினர் எசாயாவின் இறைவாக்கு. அந்த வாக்கு நிறைவேறும்படி ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பெத்லகேம் என்னும் சிற்றூரில் தாவீது அரசரின் வழிமரபை சேர்ந்த யோசேப்பு என்பவருக்கு மண ஒப்பந்தமான மரியாளுக்கு மகனாகப் பிறந்தார். இயேசு கிறிஸ்து.


அப்போது வானத்தில் புதியதொரு விண்மீன் எழுந்தது. அந்த விண்மீனைப் பின்தொடர்ந்து ஞானிகளும் அவரைப் பணிந்துகொள்ள வந்தனர். பாவத்தால் பழுதடைந்த மனுக்குலத்தை மீட்க ஏழையாக அவதரித்த இயேசுவின் பிறப்புச் செய்தி முதன்முதலில் இடையர்களுக்கு அறிவிக்கப்பட்டது. அப்போது வானதூதர்கள் இடையர்கள் முன்தோன்றி, ‘‘அஞ்சாதீர்கள்! இதோ மாபெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தி யை உங்களுக்கு அறிவிக்கிறேன்.


இன்று தாவீதின் ஊரில் உங்களுக்காக மீட்பர் பிறந்துள்ளார். அவரே ஆண்டவராகிய மெசியா! குழந்தையைத் துணிகளில் சுற்றி முன்னட்டியில் கிடத்தி இருப்பதைக் காண்பீர்கள். இதுவே உங்களுக்கு அடையாளம்’’ என்று சொன்னார்கள். அந்தச் சூழலில், ‘உன்னதங்களிலே கடவுளுக்கு மகிமை உண்டாகுக! பூவுலகில் நல் மனத்தோருக்கு அமைதியும் ஆகுக. உம்மைப் புகழ்கின்றோம். உம்மை வாழ்த்து கின்றோம்’ என்று பாட வானத்தில் விண்மீன்கள் ஒளிர்ந்தன. இயேசுகிறிஸ்துவின் பிறப்பின் முதல் அடையாளமாக இருந்தது வால் நட்சத்திரம்.


அது பெத்லகேமின் விண்மீன் என்றும் ஆண்டவரின் விண்மீன் என்றும் சொல்லப்பட்டது. இயேசு பிறப்பதற்கு முன்பே முன் அடையாளமான இந்த நட்சத்திரம் வானத்தில் தோன்றியதாம். மேசியாவின் பிறப்பை அறிவிக்கும் வண்ணமாகவும் அவரை வரவேற்கும் விதமாகவும் கிறிஸ்து பிறப்பின் கொண்டாட்டத்தின் அழைப்பு மணியாகவும் மகிழ்ச்சியின் அடையாளமாகவும் விளங்கும் இந்த வால்நட்சத்திரத்தை ‘மீயொளிர் விண்மீன்’ என்றும் ‘வால்வெளி வியாழன்’ என்றும் சொல்வார்கள். கிறிஸ்து பிறந்த செய்தி முதலில் யூதர்களுக்குத் தெரியாமல் இருந்தது.


ஆனால், கிழக்குத் தேச நாடுகளைச் சேர்ந்த அறிவில் சிறந்த ஞானிகளில் ஒரு சிலருக்கு இயேசுவின் பிறப்பு பற்றி தெரிந்திருக்கிறது. எருசலேம் வந்த அவர்கள் விண்மீன் வழிகாட்டிய இடத்துக்குச் செல்லாமல் நேராக அரண்மனைக்குச் சென்று ‘யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே?’ என்று கேட்டிருக்கிறார்கள். இது யூதர்களின் ராஜாவான ஏரோதின் அரண்மனையில் சலசலப்பை ஏற்படுத்தியது. அவர்களுக்கு இயேசுவைப் பற்றிய தகவல்கள் எதுவும் தெரியவில்லை.


இதையெடுத்து விண்மீன் வழிகாட்டிய பெத்லகேம் நோக்கிச் சென்றார்கள், அந்த ஞானிகள். நட்சத்திரத்தைக் கண்டு அகமகிழ்ந்த அவர்கள் கடவுள் மனிதனாக அவதரித்த மாட்டுக் கொட்டகையைச் சென்றடைந்தனர். அங்கே அவர்கள் இயேசுவைக் கண்டதும் மண்டியிட்டு விழுந்து அவரை வணங்கினார்கள். அத்துடன் தாங்கள் கொண்டு வந்த காணிக்கைகளை பாலன் இயேசுவுக்கு படைத்துவிட்டு தங்கள் நாடுகளுக்குத் திரும்பினர்.


வானதூதர்களும் கடவுள் மனிதனாக அவதரித்திருக்கிறார் என்ற செய்தியை அறிவிக்க, முதலில் வசதி படைத்தவர்களைத் தேடிச் செல்லாமல் இரவில் மந்தைகளைக் காத்துக் கொண்டிருந்த மேய்ப்பர்களிடம் சென்று சொன்னார்கள். இந்த அறிவிப்பைக் கேட்டதும் மேய்ப்பர்கள் ஆர்வத்துடன் இயேசுவைக் காணச் சென்றார்கள். அங்கே சென்று அவரை கண்டு மகிழ்ச்சியடைந்தார்கள். அந்த மகிழ்ச்சி இன்றும் கிறிஸ்து பிறப்பின் பண்டிகையில் நிறைவாய் பெருகட்டும்.

No comments:

Post a Comment