வைகுண்ட ஏகாதசி புராண வரலாறு - Minnalseithi

Latest

Search This Blog

Saturday, December 23, 2023

வைகுண்ட ஏகாதசி புராண வரலாறு

 வைகுண்ட ஏகாதசி புராண வரலாறு


'மாதங்களில் நான் மார்கழி' என்பது கீதாசார்யனின் அமுதமொழி. வைகுண்ட ஏகாதசி வருவதால் வைஷ்ணவர்களுக்கும், ஆருத்ரா வருவதால் சைவர்களுக்கும் உகந்த மாதம் மார்கழி. ஏகாதசி திதி தோன்றியதும் இந்த மாதத்தில்தான். அந்தப் புராணச் சம்பவம்...


கிருதயுகத்தில் முரன் என்ற ஓர் அசுரன் இருந்தான். தேவர்கள் உட்பட அனைவரையும் துன்புறுத்தினான். தேவர்களின் பிரார்த்தனைக்கு இரங்கி, மகா விஷ்ணு முரனை சம்ஹாரம் செய்யப் புறப்பட்டார். முரனின் படைக்கலன்களை எல்லாம் அழித்த பகவான், அவன் திருந்துவதற்கு ஒரு சந்தர்ப்பம் கொடுக்கலாம் என்று திருவுள்ளம் கொண்டார். அதன்படி போர்க்களத்திலிருந்து விலகி, பத்ரிகாசிரமத்தில் இருந்த ஒரு குகையில் போய் உறங்குவது போல் படுத்துக்கொண்டார். பகவானைத் தேடிக்கொண்டு அந்தக் குகைக்கு வந்த முரன், பகவான் உறங்குவதாக நினைத்துக்கொண்டு, அவரைக் கொல்ல வாளை ஓங்கினான்.


அப்போது மகாவிஷ்ணுவின் திருமேனியிலிருந்து ஓர் அழகான பெண் தோன்றினாள். ஆயுதங்களுடன் காட்சி தந்த அந்தப் பெண், முரனை போருக்கு அழைத்தாள். பெண்ணென்று அலட்சியமாக நினைத்த முரன், 'பெண்ணே! உன்னைக் கொல்ல ஓர் அம்பே போதும்' என்று அம்பை எடுக்க முனைந்தபோது, அந்தப் பெண், 'ஹூம்' என்று ஓர் ஒலி எழுப்பினாள். அவ்வளவில் முரன் பிடி சாம்பலாகிப் போனான்.


அதே நேரத்தில் ஏதுமறியாதவர்போல் கண்விழித்த பகவான், தன் திருமேனியிலிருந்து வெளிப்பட்ட சக்தியைப் பாராட்டியதுடன், அவளுக்கு ஏகாதசி என்ற பெயரையும் சூட்டி, ''ஏகாதசியே, நீ தோன்றிய இந்நாளில் விரதமிருந்து என்னை வழிபடுபவர்களுக்கு, சகல செல்வங்களையும் அருள்வதுடன், முடிவில் வைகுண்ட பதவியையும் அருள்வேன்'' என்று அருளினார். மார்கழி மாதத் தேய்பிறையில் தோன்றிய ஏகாதசி 'உற்பத்தி ஏகாதசி' ஆகும்.


மார்கழி மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசி வைகுண்ட ஏகாதசி ஆகும். அதுவே மோட்ச ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது. இரண்டு அசுரர்களை முன்னிட்டு தோன்றியது வைகுண்ட ஏகாதசி. அந்த வரலாறு...


முற்காலத்தில் பிரம்மாவுக்கு ஏற்பட்ட அகங்காரத்தை ஒடுக்க நினைத்த மகா விஷ்ணு, தன் காதுகளிலிருந்து மது, கைடபர்கள் என்ற இரண்டு அசுரர்கள் வெளிப்படச் செய்தார். அவர்கள் பிரம்மாவைக் கொல்ல முயன்றபோது, அவர்களைத் தடுத்த மகா விஷ்ணு, பிரம்மாவை விட்டுவிடும்படியும், அவர்கள் கேட்கும் வரத்தைத் தருவதாகவும் கூறினார். அந்த அசுரர்கள் மகா விஷ்ணுவிற்கு வேண்டுமானால் தாங்கள் வரம் தருவதாகக் கூறினர்.


மகா விஷ்ணுவும் தன்னால் அவர்கள் வதம் செய்யப்பட வேண்டும் என்ற வரத்தைக் கேட்டார். அசுரர்களானாலும் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற நினைத்த அசுரர்கள், தங்களை சமாளித்துக்கொண்டு, ''பகவானே, ஒரு விண்ணப்பம். தாங்கள் ஒரு மாதம் எங்களுடன் யுத்தம் செய்ய வேண்டும். அதன் பிறகே நாங்கள் ஸித்தி அடைய வேண்டும்'' என்று வேண்டினார்கள். பகவானும் அப்படியே வரம் தந்தார். யுத்தத்தின் முடிவில் பகவான் அவர்களை வீழ்த்தினார். பகவானின் மகிமைகளை உணர்ந்த அசுரர்கள், பகவானின் பரமபதத்தில் தாங்கள் நித்தியவாசம் செய்ய வேண்டும் என்ற வரத்தினைக் கேட்டனர்.


மார்கழி மாத வளர்பிறை ஏகாதசியன்று பரமபதத்தின் வடக்கு வாசலைத் (சொர்க்க வாசல்) திறந்து, அதன் வழியாக அசுரர்களை பரமபதத்தில் சேர்த்துக்கொண்டார். அசுரர்கள் தாங்கள் பெற்ற பேரின்பம் அனைவரும் பெற வேண்டும் என்று விரும்பி, ''பகவானே! தங்களை ஆலயங்களில் விக்கிரக வடிவில் பிரதிஷ்டை செய்து, மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசியன்று, தாங்கள் எங்களுக்குச் செய்த அனுக்கிரகத்தை ஓர் உற்சவமாகக் கடைப்பிடிக்க வேண்டும். அன்று ஆலயத்தின் சொர்க்க வாசல் வழியாக எழுந்தருளும் தங்களை தரிசிப்பவர்களும், தங்களுடன் சொர்க்க வாசல் வழியாக வெளியே வருபவர்களும் மோட்சம் அடைய வேண்டும்'' என்று வரம் கேட்டனர். பரம தயாளனாகிய பகவானும் அவர்கள் கேட்டபடியே வரம் அருளினார்.


ஏகாதசி என்றால் பதினொன்று என்று பொருள். ஞானேந்திரியம் ஐந்து; கர்மேந்திரியம் ஐந்து; மனம் ஒன்று என்னும் பதினொன்றும் பகவானிடம் ஈடுபடுவதே ஏகாதசி விரதம். அந்நாளில் பகவானை மட்டுமே நினைத்து, அவன் புகழ் பாடி விரதமிருந்தால், மனக் கவலைகள் விலகி மகிழ்ச்சியான வாழ்க்கை ஏற்படும்.

No comments:

Post a Comment