குளிர்காலத்தில் ஏசி அறையில் உறங்குவது சரியா?
குளிர்காலத்திலும் ஏசி வேண்டும் என்போர், ஏசி பயன்படுத்தாத நேரத்தில் அறைகளின் கதவு, ஜன்னல்களைத் திறந்து வைத்து வெளிச்சமும் காற்றோட்டமும் உள்ளே பரவ அனுமதிக்க வேண்டும்.
ஏசி செய்யப்பட்ட சூழல்களால் சில பிரச்னைகள் வரக்கூடும். அதாவது, ஏசியானது அந்தச் சூழலை வறட்சியாக்கி, ஈரப்பதமின்றி மாற்றிவிடும். அதன் விளைவாக நம் உடலிலும் நீர்வறட்சி ஏற்படும்.
ஏசியின் ஃபில்டர்களை குறிப்பிட்ட இடைவெளியில் சரியாகச் சுத்தம் செய்யாவிட்டால் அலர்ஜி பிரச்னைகள் வர வாய்ப்புகள் உண்டு. ஃபில்டரில் படியும் தூசு மற்றும் கிருமிகள் ஒவ்வாமை பாதிப்புகளுக்கு காரணமாகலாம். ஏசி செய்யப்பட்ட அறைகளுக்குள் இருக்கும்போது கதவு மற்றும் ஜன்னல்களைத் திறந்து வெளிச்சமோ, காற்றோட்டமோ உள்ளே வர அனுமதிக்க மாட்டோம். வீடோ, பணியிடமோ... மூடப்பட்ட சூழலில், ஏசியும் இயங்கும்போது பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகளின் பெருக்கமும் பரவலும் அதிகரிக்கும் ஆபத்துகளும் உண்டு.
இந்தக் கிருமிகள் ஏசியின் ஃபில்டர்களில் போய் உட்கார்வது மட்டுமன்றி, அந்தச் சூழலில் இருப்போருக்கு காய்ச்சல், சளி போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தி, அவை மற்றவர்களுக்கும் பரவக் காரணமாகும். வீட்டில் ஒருவர் உடல்நலமின்றி இருக்கும் நிலையில் ஏசி அறையில் அவரிடமிருந்து மற்றவர்களுக்கும் அந்த பாதிப்பு பரவும் வாய்ப்புகள் அதிகம்.
மேற்குறிப்பிட்ட பிரச்னைகள் குளிர்காலத்தில் அதிகம் தாக்கக்கூடும். வெளியிலுள்ள சூழலும் குளிர்ச்சியாக இருக்கும் நிலையில், தொண்டை வறட்சி, சரும வறட்சி, இருமல் போன்றவை அதிகமாகலாம். மழை மற்றும் குளிர்காலங்களில் ஃப்ளூ காய்ச்சல் அதிகம் பரவும். அதனால் தொற்றுப் பரவல் அதிகரிக்கும். ஏசியால் சளி பிடிக்குமா என்ற சந்தேகம் பலருக்கும் உண்டு. முன்னரே குறிப்பிட்டபடி, ஏசியின் ஃபில்டர்களை சரியாகச் சுத்தப்படுத்தாத நிலையில், அவற்றில் பாக்டீரியா, வைரஸ், பூஞ்சைக் கிருமிகள் சேர்ந்து, அவற்றின் மூலம் உடல்நலம் பாதிக்கப்பட வாய்ப்புகள் அதிகம்.
ஏசி உபயோகிக்கும்போதெல்லாம் அதிலிருந்து கிருமிகள் பரவி, அலர்ஜி பாதிப்புக்குள்ளாகும் தன்மை கொண்டவர்களுக்கு சளி பிடிக்கலாம். வெப்பநிலையில் திடீர் மாற்றம் காரணமாக சிலருக்கு சளி பிடிக்கலாம். இது ஏசி அறைக்குள் இருப்பதால் மட்டுமன்றி, வானிலை மாற்றத்தாலும் நிகழலாம். அதனால்தான் வானிலை மாறும்போது சிலருக்கு சளி பிடிப்பது, மூக்கிலிருந்து நீர் வடிதல் போன்ற பிரச்னைகள் வருவதைப் பார்க்கிறோம்.
இது சளியாகக் கருதப்பட வேண்டியதல்ல... தற்காலிக மானதுதான். சில நாள்களில் சரியாகிவிடும். ஆனால், மேற்குறிப்பிட்ட பிரச்னைகள் அடிக்கடி வரும்பட்சத்தில், அவை சளி பாதிப்பின் அறிகுறிகளா, அலர்ஜியா, தற்காலிக பாதிப்பா என்பதையெல்லாம் மருத்துவ ஆலோசனையில் தெரிந்து கொண்டு சிகிச்சை எடுக்கலாம்.
எனவே, குளிர்காலத்திலும் ஏசி வேண்டும் என்போர், ஏசி பயன் படுத்தாத நேரத்தில் அறைகளின் கதவு, ஜன்னல்களைத் திறந்து வைத்து வெளிச்சமும் காற்றோட்டமும் உள்ளே பரவ அனுமதிக்க வேண்டும். அதற்கு வாய்ப்பில்லாதவர்கள், வெளிக்காற்றை உள்ளே இழுக்கக்கூடிய வசதிகள் கொண்ட ஏசியை பொருத்தலாம்.
குறிப்பிட்ட இடைவெளியில் ஏசியை முறையாக சுத்தம் செய்வது, சர்வீஸ் செய்வது போன்றவற்றைச் செய்யத் தவறாதீர்கள். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். சருமம் வறண்டு போகாமலிருக்க மாய்ஸ்ச்சரைசர் உபயோகிக்க வேண்டும். முடிந்த அளவுக்கு குறைவான நேரத்துக்கு மட்டுமே ஏசியை பயன்படுத்தவும்.
ஏசியின் குளிர்நிலையைக் குறைவாக வைத்துக் கொள்வதுதான் சரியானது. ரொம்பவும் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளும்போதுதான் மேற்குறிப்பிட்ட பிரச்னைகள் அதிகமாகும். ஓரளவு குளிர்ச்சியோடு வைத்துக்கொள்ளும்போது, தூக்கத்தில் பிரச்னைகள் இன்றி இருக்கும்.
No comments:
Post a Comment