கிறிஸ்துமஸ் விழாவில் ஏன் மரம் மற்றும் குடில் வைத்து கொண்டாடப்படுகிறது? - Minnalseithi

Latest

Search This Blog

Monday, December 25, 2023

கிறிஸ்துமஸ் விழாவில் ஏன் மரம் மற்றும் குடில் வைத்து கொண்டாடப்படுகிறது?

 கிறிஸ்துமஸ் விழாவில்  ஏன் மரம் மற்றும் குடில்  வைத்து கொண்டாடப்படுகிறது?


முதலில் இயேசு யார் என்று நாம் அறிந்து கொள்ள வேண்டும். மனிதர்களுடைய பாவங்களிலிருந்து அவர்களை மீட்க மனிதனாகவே அவதரித்தவர்தான் இயேசு. அவர் ஆடம்பரமாக மாடமாளிகைகளில் பிறக்கவில்லை. மாறாக, ஏழ்மையாக மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார். அவரின் பிறப்பு விழாதான் கிறிஸ்துமஸ். கிறிஸ்துவத்தின் முதல் இரண்டு நூற்றாண்டுகளில் இயேசுவின் பிறந்த நாளை அங்கீகரிப்பதற்குப் பல எதிர்ப்புகள் வந்துகொண்டு இருந்தது. அதையெல்லாம் கடந்து 2-ம் நூற்றாண்டில் டிசம்பர் 25-ம் தேதி கிறிஸ்து பிறப்பு விழாவாக வருடந்தோறும் கொண்டாடப்பட்டது.


ஆனால், 2-ம் நூற்றாண்டு முதல் 11-ம் நூற்றாண்டு வரை கிறிஸ்து பிறப்பு நாள் பொது விடுமுறையாக மட்டுமே கொண்டாடப்பட்டது. அந்தச் சூழலில், புனித பிரான்சிஸ் அசிசியார்தான் முதன்முதலில் குடிலை வடிவமைத்துத் தந்தவர். இவர் பெரிய செல்வரின் மகனாய் இருந்தும் அனைத்தையும் விட்டு விட்டு கடவுளைப் பின்பற்றத் துறவறம் மேற்கொண்டவர்.


இவர் இறப்பதற்கு முன் கிறிஸ்துவின் பிறப்பை மிகச் சிறந்த முறையில் கொண்டாட வேண்டும் என்று எண்ணினார். அதனைத் தொடர்ந்து போப்பின் அனுமதி பெற்று 1223-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரான்சிஸில் நிஜ விலங்குகளான எருது, கழுதை, வற்றும் வைக்கோல் எல்லாம் வரிசையாக வைத்து உயிருள்ள குடிலை உருவாக்கினார். அந்த விழாவில் கொண்டாடப் பிற மக்கள் அனைவருக்கும் அழைப்பு விடப்பட்டிருந்தது. அன்று இரவின் இருளைப் போக்க மெழுகுவர்த்திகளும், தீப்பந்தங்களும் ஏற்றப்பட்டன.


அன்று இரவு மூன்று மணி நேரம் ஆடம்பர திருப்பலி கொண்டாடப்பட்டது. அதில் அதிசயம் என்னவென்றால் குடிலில் உயிரோடு இருந்த குழந்தை, திருப்பலி நடைபெற்ற மூன்று மணி நேரமும் அழாமல் அமைதியாக இருந்ததாகக் கூறப்படுகிறது. 14-ம் நூற்றாண்டில் அந்தக் குடில் வைக்கப்பட்ட இடத்தில் புதிய தேவாலயம் அமைக்கப்பட்டது. முதல் குடிலில் வைக்கப்பட்ட வைக்கோல்கள் 'குணமாக்கும் வைக்கோல்' என்று போற்றப்பட்டன. ஆம், அவற்றைத் தொட்டவர்கள் அனைவரும் பல உடல், மனநோய்கள் தீர்ந்து பலன் பெற்றனர் என்று கூறப்படுகிறது.


கிறிஸ்துமஸ் விழாவில் ஏன் மரம் வைத்துக் கொண்டாட வேண்டும்?


கிபி 10-ம் நூற்றாண்டில் ஜெர்மன் நாட்டில் வாழ்ந்த போனிபோஸ் என்ற பாதிரியார், ஒருமுறை ஜெபக்கூடத்திற்குச் சென்று திரும்பியபோது, பழங்குடி மக்கள் சிலர் ஓக் மரத்தை வழிபடுவதைக் கண்டார். இயேசுவை வணங்காது ஓக் மரத்தை வழிபடுவதைக் கண்டு கோபம் கொண்ட போனிபோஸ் கோபத்தோடு பிடுங்கி எறிந்தார். பிடுங்கி எறியப்பட்ட மரம் சில நாள்களிலேயே அதே இடத்தில் மீண்டும் வளர ஆரம்பித்துவிட்டது.


 இதைக் கண்டதும் உயிர்தெழுத்த இறைமகன் இயேசுவின் அற்புத செயலாகக் கருதி எல்லோரும் அதை கிறிஸ்துமஸ் மரம் என்று எண்ணி வழிபடத் தொடங்கினார்களாம்.


அன்றிலிருந்து கிறிஸ்துமஸ் விழாவில் மரம், குடில் போடும் வழக்கம் தொடங்கியது. இது வெறும் வழக்கம் மட்டும் அல்ல. அடுத்த தலைமுறைக்குக் கிறிஸ்து எப்படிப் பிறந்தார் என்று காண்பிக்கவும் அவசியமான ஒன்று. கடவுள் நமக்கு எவ்வளவு செல்வத்தைக் கொடுத்து இருந்தாலும் அதை நினைத்து அகந்தையுடன் வாழாமல் கடவுளே மாட்டுத் தொழுவத்தில்தான் பிறந்தார், எனவே, நாமும் எவ்வளவு உயரத்திற்குச் சென்றாலும் எப்பொழுதும் அகந்தையின்றி வாழ வேண்டும் என்று நினைவுபடுத்தவும். அது மட்டுமின்றி, பிறக்கவிருக்கும் பாலன் இயேசு நம் வீட்டிலும் பிறக்க வேண்டும் என்ற எதிர்நோக்குடனும்தான் அனைவரது வீட்டிலும் குடில் வைக்கப்படுகிறது.

No comments:

Post a Comment