பர்சனல் லோன் (தனிநபர் கடன்)கோரும் முன் இந்த 5 கேள்விகளை எதிர் கொள்ளுங்கள்!
ஒரு அவசிய அல்லது தேவைக்காக தனிநபர் கடன் பெற திட்டமிட்டிருக்கிறீர்கள் என்றால்.. இந்த ஐந்து கேள்விகளை எதிர்கொள்ளுங்கள்.
1. கிரெடிட் ஸ்கோர் எப்படி இருக்கிறது?
ஒருவருக்கு வங்கியில் கடன் கிடைக்க வேண்டும் என்றால் முதல் அடிப்படை கிரெடிட் ஸ்கோர் எப்படி இருக்கிறது என்பதை ஆராய வேண்டும். உங்களுக்கு ஏற்கனவே கடன் வழங்கியவர்கள் உங்களுக்கு அளித்திருக்கும் மதிப்பெண்ணின் மூன்று இலக்கக் கூட்டுத் தொகையே கிரெடிட் ஸ்கோர். நல்ல கிரெடிட் ஸ்கோர் இருப்பவர்களுக்கு விரைவாக குறைந்த வட்டியில் கடன் கிடைக்கும். இல்லையெனில் அது இதுவென கட்டணங்களை வசூலித்த நல்ல வட்டியில் கடனை உங்கள் தலையில் கட்டிவிடும் நிதிநிறுவனங்கள். எனவே முதலில் இதனை ஆராயுங்கள்.
2. அவசியம் கடன் வேண்டுமா?
ஒரு தனிநபர் கடனை கோரும் முன் அது அவசியமா? தள்ளிப்போட முடியுமா? மாற்று வழிகள் இருக்கின்றதா? உங்களால் சேமித்து அந்தத் தொகையை கடன் இல்லாமல் செலவிட முடியுமா? நண்பர்கள், உறவினர்களிடம் கேட்டுப் பெற்று திரும்ப செலுத்தும் வழிமுறை இருக்கிறதா? உங்களிடம் இருக்கும் சேமிப்பிலிருந்து எடுக்க இயலுமா போன்ற வழிமுறைகளை ஆராயலாம்.
3. எவ்வளவு வேண்டும்?
ஒரு குறிப்பிட்டத் தொகையை கோரும் போது, அது சரியான தொகைதானா? அதனைக் குறைக்க முடியுமா? என ஆராயுங்கள். ஒரு குறிப்பிட்ட தொகை குறைந்தாலும் வட்டியும் மாதத் தவணைக் காலமும் குறையலாம்.
4. எவ்வளவு சீக்கிரம் திரும்ப செலுத்துவீர்கள்?
எவ்வளவு மாதத் தவணையில் அதனை திரும்ப செலுத்த முடியும். மிகக் குறைந்த தவணையில் செலுத்துவதென்றால் அதற்கான வழிமுறைகள் உங்களிடம் இருக்கிறதா? வட்டியுடன் எவ்வளவு கடன் தொகை மாதந்தோறும் கழிக்கப்படுகிறது என்ற தகவல்களையும் சேகரித்து இதனை அலசுங்கள்.
5. நிச்சயம் திரும்ப செலுத்த முடியுமா?
மாதச் செலவு, இதர கட்டணங்கள் எல்லாவற்றையும் செலுத்திவிட்டு, இந்த மாதத் தவணையையும் செலுத்த முடியுமா? இதனால் உங்களின் மாதச் செலவுக் கணக்கில் துண்டு விழுமா என்பதையும் ஒரு முறைக்கு இரு முறை கணக்கிட்டுவிட்டு வங்கியை நாடலாம்.
No comments:
Post a Comment