4 மாவட்டங்களுக்கு நாளை (திங்கள்கிழமை) பொதுவிடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு
வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘மிக்ஜம்’ புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு நாளை திங்கள்கிழமை பொதுவிடுமுறை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘மிக்ஜம்’ புயல் காரணமாக ஞாயிறு, திங்கள்கிழமை (டிச. 3, 4) சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட வடதமிழக மாவட்டங்களில் மிக கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவிக்கப்பட்டிருப்பதால், நான்கு மாவட்டங்களுக்கு நாளை பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் இன்று காலை புயலாக மாறியது. இதற்கு மிக்ஜம் என்று பெயரிடப்பட்டுள்ளது. தற்போது இது சென்னையிலிருந்து தென்கிழக்காக 310 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது.
இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து, மேலும் தீவிரமடைந்து, வங்கக் கடலின் மேற்கு மற்றும் மத்தியப் பகுதியில் ஆந்திரம் மற்றம் தமிழகத்தை ஒட்டி டிசம்பர் 4ஆம் தேதி வந்தடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்த புயல் காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அதிவேகக் காற்றுடன் அதி கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, தமிழக அரசு, சிறப்பு நிகழ்வாக டிசம்பர் 4ஆம் தேதி திங்கள்கிழமையை பொது விடுமுறை நாளாக அறிவித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவா் பாலச்சந்திரன் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிக கனமழையும், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிகக் கனமழையும், வேலூர், ராணிப்பேட்டை, புதுவை டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யும்.
நாளை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அதி கனமழையும், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment