இன்று (25.12.2023)இராணி வேலுநாச்சியார் நினைவு தினம்:வேலு நாச்சியாரின் வாழ்க்கை வரலாறு - Minnalseithi

Latest

Search This Blog

Monday, December 25, 2023

இன்று (25.12.2023)இராணி வேலுநாச்சியார் நினைவு தினம்:வேலு நாச்சியாரின் வாழ்க்கை வரலாறு

 இன்று (25.12.2023)இராணி வேலுநாச்சியார் நினைவு தினம்:வேலு நாச்சியாரின் வாழ்க்கை வரலாறு


வீரமங்கை இராணி வேலுநாச்சியார் இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனை ஆவார். இவர் கி.பி. 1730ஆம் ஆண்டு, இராமநாதபுரம் மன்னர் செல்லமுத்து விஜயரகுநாத சேதுபதி - சக்கந்தி முத்தாத்தாள் தம்பதியினருக்கு ஒரே பெண் மகளாக பிறந்தார். வேலுநாச்சியார் ஆண் வாரிசு போலவே வளர்க்கப்பட்டார். மேலும் இவர் பல மொழிகள் கற்றார். வாள் வீச்சு, களரி வீச்சு உள்ளிட்ட ஆயுதப் பயிற்சிகளையும் அவர் பெற்றார்.


இராணி வேலு நாச்சியார் கி.பி. 1746 இல் சிவகங்கைச் சீமை மன்னர் முத்துவடுகநாதத்தேவரை மணமுடித்தார். கி.பி.1772 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25 ஆம் தேதி சிவகங்கைப் படைகளை பிரிட்டிஷ் ராணுவதளபதி பெஞ்சர் முற்றுகையிட்டார். ராஜா முத்து வடுகநாதர் அவரது வீரர்களுடன் பிரிட்டிஷ் படைகளுக்கு எதிரான யுத்தத்தில் வீரமரணம் அடைந்து விட்டார். வேலுநாச்சியார், முத்து வடுக நாதரை அடக்கம் செய்து விட்டு திண்டுக்கல் அருகே விருப்பாட்சி விரைந்தார்.


தண்டவராயன் பிள்ளை உடன் ராணி வேலுநாச்சியார் மற்றும் மகள் வெள்ளச்சிநாச்சியார் திண்டுக்கல் அருகே விருப்பாட்சி பாளையத்தில் கோபால் நாயக்கரிடம் அடைக்கலமானார். பின்னர் ராணி வேலுநாச்சியாரின் பாதுகாவலர்கள் வெள்ளைமருது மற்றும் சின்னமருது ஆகியோரும் அவருடன் இணைந்து கொண்டனர். இராணி வேலு நாச்சியார், தளபதிகள் மருது சகோதரர்களுடன் இணைந்து புதிய படையணியை கட்டி எழுப்பினார்.


மைசூரை ஆண்ட ஹைதர் அலி உதவியுடன் திண்டுக்கல் மலைக்கோட்டையில் சிறிது காலம் வேலுநாச்சியார் தங்கி இருந்தார். வேலுநாச்சியார் படையணியை கட்டமைக்க ஹைதர் அலி, கோபால் நாயக்கர் உள்ளிட்ட பலரும் உதவிக்கரம் நீட்டினர். இதனால் வேலுநாச்சியார் 7 ஆண்டுகள் இடைவிடாமல் ஆங்கிலேயருடன் யுத்தம் நடத்தி இழந்த சிவகங்கை சீமையை மீட்டெடுத்தார்.


வேலுநாச்சியாரின் படை தளபதிகளில் ஒருவரான குயிலி, பிரிட்டிஷ் படைகளின் வெடிமருந்து கிடங்கை தற்கொலை படை தாக்குதல் மூலம் சிதறடித்தார். உலகின் முதலாவது தற்கொலைப் படை போராளி என்ற சரித்திரத்தைப் படைத்தார் தளபதி குயிலி. வேலு நாச்சியார் சிவகங்கையை மீட்டு ஆட்சிபுரிந்த போது சின்னமருதுவை நாட்டின் முதல்அமைச்சராக பணிபுரிவதற்கும் வெள்ளைமருது நாட்டின் தலைமைத்தளபதியாக பணிபுரிவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. ராணி வேலு நாச்சியார் தனது கணவரைத் தொடர்ந்து கி.பி.1789 வரை சிவகங்கையை ஆட்சிபுரிந்தார். இவர் நாட்டை நிர்வகிப்பதற்காக மருதுசகோதரர்களுக்கு அதிகாரங்களை வழங்கினார். அதன் பின்னர் சில ஆண்டுகளில் ராணி வேலு நாச்சியார் மரணம் அடைந்தார்.


இயற்கை எய்தினார்:


ஆங்கிலேயருக்கு எதிராக பெரும் படை திரட்டி இழந்த சிவகங்கை சீமையை மீட்டெடுத்த ராணி வேலு நாச்சியார் 1796 ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் தேதி இயற்கை எய்தினார்..

ராணி வேலு நாச்சியாரின் புகழை பரவச் செய்யும் நோக்கில் சிவகங்கை மாவட்டம் சூரக்குளம் கிராமத்தில் 60 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் அவருக்கு நினைவு மண்டபம் கட்டப்பட்டது. 2014 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா இந்த மணிமண்டபத்தை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்த மணிமண்டபத்தில் ராணி வேலுநாச்சியார் பயன்படுத்திய வால் ஈட்டி முதலான பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன..

இந்திய சரித்திரத்தில் வீரத்துக்கு பாலின வேறுபாடு கிடையாது என நிரூபிக்கும் வகையில் வாழ்ந்து மறைந்த வீரமங்கை வேலுநாச்சியாரின் நினைவு நாளில் அவரை நினைவுகூர்வோம்.


வட இந்தியாவில் ஜான்சி ராணி லட்சுமிபாய், சுதந்திரப் போராட்டத்தின் முதல் முகமாக முன்னிறுத்தப்படுகிறார். ஆனால் அவருக்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே தமிழர் நிலத்தில் ஆங்கிலேயருக்கு எதிராக வீரம் செறிந்த யுத்தம் நடத்திய வரலாற்றுப் பெருமைக்குரியவர் நமது ராணி வேலுநாச்சியார்- பெருமிதம் கொள்வோம்... பெருமைகளைப் போற்றுவோம்!

No comments:

Post a Comment