ஆருத்ரா தரிசனம் 2023 : நேரம், சிறப்பு, விரத முறை மற்றும் பூஜை செய்யும் முறை - Minnalseithi

Latest

Search This Blog

Tuesday, December 26, 2023

ஆருத்ரா தரிசனம் 2023 : நேரம், சிறப்பு, விரத முறை மற்றும் பூஜை செய்யும் முறை

 ஆருத்ரா தரிசனம் 2023 : நேரம், சிறப்பு, விரத முறை மற்றும் பூஜை செய்யும் முறை


மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரத்தன்று கடைபிடிக்கப்படும் சிவனுக்குரிய முக்கியமான விரதம் திருவாதிரை விரதம். இது தமிழகம் மட்டுமின்றி கேரளாவிலும் அதிகமான பெண்களால் படைபிடிக்கப்படும் விரதமாகும். இந்த நாளில் சிதம்பரம், திருவாரூர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கையில் உள்ள நடராஜ பெருமானுக்கு நடத்தப்படும் அபிஷேகம் மிகவும் புகழ்பெற்றதாகும். சிதம்பரத்தில் ஆருத்ரா தரிசனத்தன்றே தேரோட்டம் நடத்தப்படும்.


திருவாதிரை நாளன்று களி செய்து சிவ பெருமானுக்கு படைக்கும் வழக்கமும் உண்டு. திருவாதிரை விழா பத்து நாள் உற்சவமாக சிதம்பரத்தில் நடத்தப்படும். உத்திரகோச மங்கையில் மரகத நடராஜர் சிலை மீது இருக்கும் சந்தன காப்பு களையப்பட்டு, சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்படும். இந்த நாளில் மட்டுமே நடராஜ பெருமானின் மரகத திருமேனியை தரிசிக்க முடியும். வருடத்தின் மற்ற அனைத்து நாட்களும் இந்த சிலை சந்தன காப்பால் மூடப்பட்டிருக்கும்.


திருவாதிரை சிறப்பு :


சிவ பெருமானுக்குரிய முக்கிய விரத நாட்களில் ஒன்று ஆருத்ரா தரிசன நாளாகும். மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரமும், பெளர்ணமி திதியும் இணைந்து வரும் நாளையே ஆருத்ரா தரிசன நாளாக கொண்டாடுகிறோம். 27 நட்சத்திரங்களில் சிவனுக்குரிய திருவாதிரை மற்றும் பெருமாளுக்குரிய திருவோணம் ஆகிய இரண்டு நட்சத்திரங்களுக்கு மட்டுமே 'திரு' என்ற அடைமொழி உண்டு. ஆருத்ரா என்பது சமஸ்கிருத சொல்லாகும். இதற்கு ஆதிரை என்று பொருள். திருவாதிரை நட்சத்திரத்தன்று சிவ பெருமானுக்கு நடத்தப்படும் உற்சவத்தையே ஆருத்ரா தரிசனம் என்கிறோம்.


ஆருத்ரா தரிசனம் :


சிவ பெருமான் அபிஷேகப் பிரியர் என்பது அனைவருக்கும் தெரியும். சிவபெருமானின் லிங்க திருமேனிக்கு தினமும் 16 முதல் 32 வகையான அபிஷேகங்கள் நடத்தப்படும். ஆனால் நடராஜருக்கு அப்படி கிடையாது. நடராஜருக்கு வருடத்திற்கு 6 குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே அபிஷேகம் நடத்தப்படும். சித்திரை திருவோணம், ஆனி உத்திரம், ஆவணி சதுர்த்தசி, புரட்டாசி சதுர்த்தசி, மார்கழி திருவாதிரை, மாசி சதுர்த்தசி என ஆறுமுறை அபிஷேகம் நடத்தப்படும். இதில் மற்ற 5 அபிஷேகங்களும் மாலையில் நடத்தப்படும். மார்கழி திருவாதிரை நட்சத்திரத்தன்று மட்டும் அதிகாலை 4 மணிக்கு முன்பாக, அதாவது சூரிய உதய காலத்திற்கு முன் நடத்தப்படும்.


ஆருத்ரா தரிசன வரலாறு :


ஆருத்ரா தரிசனம் என்பது பல்வேறு சம்பவங்களுடன் தொடர்புடைய ஒன்றாகும். தண்டகாருண்ய வன மகரிஷிகள், சிவ பெருமானுக்கு எதிராக பலவிதமான பொருட்களை ஆயுதமாக ஏவி விட்டனர். ஆனால் அவற்றை எல்லாம் தனது அணிகலன்களாக ஏற்று, ஆனந்த நடனம் ஆடி, அவர்களின் ஆணவத்தை அடக்கியது இந்த ஆருத்ரா தரிசன நாளில் தான். சேந்தனார் என்னும் பக்தரின் வீட்டிற்கு சென்று களி சாப்பிட்டு, அவரின் பக்தியை உலகத்திற்கு எடுத்துக் காட்டியதும் இதே நாளில் தான். வியாக்ரபாதர் மற்றும் பதஞ்சலி முனிவருக்கு சிதம்பரத்தில் ஆனந்த தாண்டவம் ஆடி காட்டியதும் இதே நாளில் தான். அம்பிகை தனது பக்கைக்காக இறந்து போன கணவரின் உயிரை மீட்டு அவளுடன் சேர்த்து வைத்ததும் இதே நாளில் தான். அதனால் தான் இது பெண்களுக்குரிய விரத நாளான மாங்கல்ய நோம்பி என்றும் அழைக்கப்படுகிறது.


மார்கழி திருவாதிரை 2023 :


இந்த ஆண்டு தனிச்சிறப்பாக இரண்டு வைகுண்ட ஏகாதசிகள் வந்தது போல், இரண்டு ஆருத்ரா தரிசனம் அமைந்துள்ளது. 2023ம் ஆண்டின் துவக்கத்தில் ஒரு ஆருத்ரா தரிசனம் அமைந்தது. இதைத் தொடர்ந்து தற்போது டிசம்பர் மாதத்தில் டிசம்பர் 27ம் தேதி ஆருத்ரா தரிசன திருநாள் அமைகிறது. டிசம்பர் 26ம் தேதி காலை 05.56 மணி துவங்கி, டிசம்பர் 27ம் தேதி காலை 06.07 வரை மட்டும் பெளர்ணமி திதி அமைந்துள்ளது. அதே சமயம் திருவாதிரை நட்சத்திரம் டிசம்பர் 26ம் தேதி இரவு 10.58 மணி துவங்கி, டிசம்பர் 27 ம் தேதி நாள் முழுவதும் உள்ளது.


​திருவாதிரை விரதம் :


திருவாதிரை விரதத்தை இரண்டு வகையாக எடுத்துக் கொள்வார்கள். ஈரோடு, கரூர், கோவை போன்ற கொங்கு மண்டல பகுதிகளில் இருப்பவர்கள் ஆருத்ரா அபிஷேகம் பார்த்த பிறகு விரதத்தை நிறைவு செய்து விடுவார்கள். அதே சமயம் மற்ற பகுதிகளில் இருப்பவர்கள் சிதம்பரத்தில் நடைபெறும் ஆருத்ரா அபிஷேகத்தை பார்த்த பிறகு தான் திருவாதிரை விரதத்தை துவக்குவார்கள். இதில் அவரவருக்கு வழக்கமான முறையில் விரதத்தை இருந்து கொள்ளலாம். சிதம்பரத்தில் டிசம்பர் 27ம் தேதி அதிகாலை 3 மணிக்கு நடராஜ பெருமானுக்கு ஆருத்ரா அபிஷேகம் நடைபெறும். இதை மகா அபிஷேகம் என்பார்கள்.


திருவாதிரை விரதம் இருக்கும் முறை :


டிசம்பர் 27ம் தேதி அதிகாலையில் எழுந்து, குளிக்க வேண்டும். குளிக்கும் போதும் மஞ்சள், எண்ணெய், சீயக்காய் ஆகியவற்றை நடுவீட்டில் வைத்து, வீட்டில் பெரியவர்கள் இருந்தால் அவர்கள் கையால் வைத்து விடச் சொல்லி குளிக்கலாம். குளித்து முடித்து விட்டு, குலதெய்வத்தையும், இஷ்ட தெய்வத்தையும் வேண்டிக் கொண்டு, விரதத்தை துவக்கலாம். அன்று காலை 6 மணி வரை மட்டுமே பெளர்ணமி திதி உள்ளதால் அதற்கு முன்பாக விரதத்தை துவக்கி விட வேண்டும். வீட்டில் உள்ள சுவாமி படங்களுக்கு பூ போட்டு, நடராஜர் உருவம் இருந்தால் அதற்கு அபிஷேகம் செய்யலாம். நடராஜர் உருவம் இல்லை, லிங்க உருவம் இருந்தால் அதற்கு அபிஷேகம் செய்யலாம். மாலையில் நைவேத்தியம் செய்யும் போது 21 என்ற எண்ணிக்கையில் வைத்து படைக்க வேண்டும். அதிசரம், அப்பம், வடை, சுசியம் என எது செய்தாலும் 21 என்ற எண்ணிக்கையில் படைக்க வேண்டும். அதே போல் அன்றைய தினம் 21 வகையான காய்கறிகளை கொண்டு சமைத்து, இறைவனுக்கு படைத்து, நாமும் சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்து கொள்ளலாம். மாலை சந்திர தரிசனத்தை பார்த்த பிறகே விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.


​மாங்கல்ய நோம்பி :


மாங்கல்ய நோன்பி விரதம் இருப்பவர்கள், காலையிலேயே கணவரின் காலில் விழுந்து ஆசி பெற்று விட்டு, காலை 06.30 முதல் 07.20 மணிக்குள்ளான நேரத்திலோ அல்லது காலை 09.30 மணி முதல் 10.30 மணி வரையிலான நேரத்திலோ தாலி சரடினை மாற்றிக் கொள்ளலாம். தாலி கயிறு சமீபத்தில் தான் மாற்றினோம் என்பவர்கள் மாற்ற தேவையில்லை. கணவரிடம் ஆசி பெற்று விரதம் கடைபிடிக்கலாம். 21 காய்கறிகள் படைக்க முடியாது, 21 பலகாரங்கள் வைக்க முடியாது என்பவர்கள் எத்தனை வகை முடிகிறது அத்தனை வகை படைத்து வழிபடலாம். எதுவும் முடியாதவர்கள் வெற்றிலை, பாக்கு, பழம் வைத்து படைத்து வழிபடலாம். மாலை 6 மணிக்கு மேல் வீட்டில் விளக்கேற்றி, தலைவாழை இலையிட்டு, அனைத்து பொருட்களையும் படைத்து சிவபுராணம் படிக்க வேண்டும். சிவனுக்குரிய மந்திரங்களையும், அம்பிகைக்கு உரிய மந்திரங்களையும் படித்து வழிபட வேண்டும். கணவர் வீட்டில் இருந்தால் முதலில் அவருக்கு உணவு பரிமாறி விட்டு, பிறகு சாப்பிடலாம். அப்படி இல்லை என்றால் வீட்டில் உள்ள பெரியவர்களை முதலில் சாப்பிட சொல்லி விட்டு, பிறகு நாமும் சாப்பிட்டு, விரதத்தை நிறைவு செய்யலாம்.

No comments:

Post a Comment