அறுசுவை உணவில் நாம் எந்த சுவை உணவை முதலில் உண்ண வேண்டும்? அடுத்தடுத்து எந்தெந்த சுவை உணவுகளை உட்கொள்ள வேண்டும்? - Minnalseithi

Latest

Search This Blog

Friday, November 10, 2023

அறுசுவை உணவில் நாம் எந்த சுவை உணவை முதலில் உண்ண வேண்டும்? அடுத்தடுத்து எந்தெந்த சுவை உணவுகளை உட்கொள்ள வேண்டும்?

 அறுசுவை உணவில் நாம் எந்த சுவை உணவை முதலில் உண்ண வேண்டும்? அடுத்தடுத்து எந்தெந்த சுவை உணவுகளை உட்கொள்ள வேண்டும்?


நம் முன்னோர்கள் ‘விருந்து’ படைப்பதில் மிகவும் நேர்த்தியான உடல்நலத்தையும் பேணி இருக்கிறார்கள். விருந்தில் அறுசுவைகளான ‘இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, காரம், கசப்பு, துவர்ப்பு’ போன்ற உணவு வகைகளை சாப்பிட்டு மகிழ்ந்தனர். உடலில் இயங்குகின்ற முக்கியமான தாதுக்களுடன் இந்த ஆறு சுவைகளும் ஒன்று கூடி உடலை வளர்க்கப் பயன்படுகிறது.உடல் தாதுக்கள் பெருக்கவும் அவற்றை உடலுக்கு ஏற்றவாறு சமன் செய்வதும் ஆறு சுவைகள் கொண்ட உணவுகளாகும். இலையில் உணவு பரிமாறப்பட்டால்… நாம் எந்தச் சுவையை முதலில் உண்ண வேண்டும்? எந்தச் சுவையை இறுதியில் உண்ண வேண்டும் என்பது தெரிந்திருக்க வேண்டும்.


முதலில் உண்ண வேண்டிய உணவு இனிப்பு. அதற்கு அடுத்தடுத்து புளிப்பு, உப்பு, காரம், கசப்பு, துவர்ப்புச் சுவையை உண்ண வேண்டும். இந்த அறுசுவை உணவுகளும்

எந்தெந்த பொருட்களில் கிடைக்கிறது? அவை நம் உடலுக்கு என்னென்ன நன்மைகள் செய்கிறது என பார்ப்போம்!இனிப்பு: மனத்துக்கும், உடலுக்கும் உற்சாகத்தைத் தரக்கூடியது. இது அதிகமானால் எடை கூடும். உடல் தளரும். சோர்வும், தூக்கமும் உண்டாகும். பழங்கள், உருளை, கேரட், அரிசி, கோதுமை, கரும்பு போன்ற பொருட்களில் இனிப்புச் சுவை உள்ளது.


புளிப்பு: பசியைத் தூண்டும். நரம்புகளை வலுவடையச் செய்யும். இது அளவுக்கு அதிகமானால், பற்களை பாதிக்கும். நெஞ்செரிச்சல், ரத்தக் கொதிப்பு, அரிப்பு போன்றவற்றை உண்டாக்கும். எலுமிச்சை, இட்லி, தோசை, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர் இவைகளில் புளிப்பு சுவை உள்ளது.


உவர்ப்பு: அனைவரும் விரும்புகின்ற சுவை. உமிழ் நீரைச் சுரக்கச் செய்யும். மற்ற சுவைகளைச் சமன் செய்யும். உண்ட உணவைச் செரிக்க வைக்கும். கீரைத்தண்டு, வாழைத் தண்டு, முள்ளங்கி, பூசணி, சுரைக்காய், பீர்க்கங்காய் போன்றவற்றில் உவர்ப்புச் சுவை உள்ளது.


காரம்: பசியைத் தூண்டும். செரிமானத்தைத் தூண்டும். உடலை இளைக்க வைக்கும். உடலில் சேர்ந்துள்ள நீர்ப்பொருளை வெளியேற்றும். ரத்தத்தை தூய்மையாக்கும். வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு போன்றவற்றில் காரச்சுவை உள்ளது.


கசப்பு: பெரும்பாலும் இந்தச் சுவையை பலரும் வெறுப்பர். ஆனால், உடலுக்கு மிகுந்த நன்மையைத் தரக்கூடிய சுவை இது. நோய் எதிர்ப்புச் சக்தியாகச் செயல்படும். தாகம், உடல் எரிச்சல், அரிப்பு, காய்ச்சல் ஆகியவற்றைத் தணிக்கக்கூடியது. பாகற்காய், சுண்டை, வெந்தயம், பூண்டு, எள், வேப்பம் பூ, ஓமம் போன்றவற்றில் கசப்புச் சுவை உள்ளது.


துவர்ப்பு: உடல் நலத்துக்கு மிகவும் நல்லது. விருப்பு, வெறுப்பு இல்லாதது. வியர்வை, ரத்தப் போக்கு, வயிற்றுப் போக்கை சரிசெய்யும். வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அவரை, அத்திக்காய் போன்றவற்றில் துவர்ப்பு சுவை உள்ளது.பண்டிகை மற்றும் சுப நிகழ்வுகளில் இந்த அறுசுவை உணவுகளை நாமும் உண்டு உடல் நலம் காப்போம்..

No comments:

Post a Comment