காலை குளியல்-இரவு குளியல்:எந்த நேரத்தில் குளிப்பது சிறந்தது?
தூங்க செல்வதற்கு முன்பு குளிப்பது ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும்.
ஆழ்ந்த தூக்கத்தை பெறுவதற்கு உடலை சுத்தம் செய்ய வேண்டும்.
அலுவலக வேலைக்கு செல்பவர்கள் காலையில் குளித்துவிட்டு புத்துணர்ச்சியோடு வீட்டை விட்டு கிளம்புவார்கள். கடினமான உடல் உழைப்பு கொண்ட வேலைக்குச் செல்பவர்கள் நாள் முழுவதும் உடல் வியர்வை, உடல் சோர்வை போக்கும் விதமாக இரவில் குளிக்கும் வழக்கத்தை பின்பற்றுவார்கள்.
உடல் உழைப்பு சார்ந்த விஷயமாக பார்க்காமல் எந்த நேரத்தில் குளிப்பது சிறந்தது? என்ற கேள்வி பலருக்கும் எழுவதுண்டு. இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில், காலையில் குளிப்பதை விட இரவில் குளிப்பதுதான் அதிக பலன்களை கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.
இரவில் ஏன் குளிக்க வேண்டும்?
சரும நிபுணர்களின் கருத்துப்படி, தூங்க செல்வதற்கு முன்பு குளிப்பது சரும ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும். வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பும்போது சருமத்தில் அழுக்கு, வியர்வை படிவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
சிலருக்கு ஒவ்வாமை பிரச்சினையும் ஏற்படும். இரவில் ஆழ்ந்த தூக்கத்தை பெறுவதற்கு உடலை சுத்தம் செய்ய வேண்டும். இரவுநேர குளியல் அந்த வேலையை செய்துவிடும்.
காலையில் குளிக்கலாமா?
காலையில் குளித்துவிட்டு அந்த நாளை தொடங்குவது உற்சாகத்தைக் கொடுக்கும். காலை குளியல் நம் உணர்வுகளை புத்துணர்ச்சியாக்கும் தன்மை கொண்டது.
பொதுவாக காலையில் எழுந்ததும் மேற்கொள்ளும் அன்றாட வேலைகளின் காரணமாக உடலில் சர்க்காடியன் ரிதத்தின் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டு உடல் வெப்பநிலை அதிகரிக்கும். அதிலும் ஜிம்முக்கு செல்பவராகவோ, தினமும் உடற்பயிற்சி செய்பவராகவோ இருந்தால் பயிற்சியை முடித்துவிட்டு கட்டாயம் குளிக்க வேண்டும். அப்போதுதான் உடல் வெப்பநிலை இயல்புக்கு திரும்பும்.
எப்போதும் காலை குளியல் உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்வையும், உத்வேகத்தையும் கொடுக்கும். அதேவேளையில் இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பும் குளிக்க மறக்காதீர்கள்.
இரவு குளியல் தூக்கத்திற்கு இடையூறாக இருக்குமா?
தூங்குவதற்கு முன்பு குளிப்பது, சர்க்காடியன் ரிதத்தை கட்டுப்படுத்தி உடலின் உட்புற வெப்பநிலையை சீராக்கும். மேலும் இரவில் குளிக்கும்போது பகல் பொழுதில் உடலில் நிலவிய வெப்பநிலை படிப்படியாக குறையத் தொடங்கும். தூங்கும்போது உடலின் வெப்பநிலை குறைந்துவிடும்.
இரவில் குளிக்கும்போது சருமம் சூடாகும், அதனை உலர்த்தும்போது குளிர்ச்சியடைந்துவிடும். அத்தகைய குளிர்ச்சி தன்மை இனிமையான தூக்கத்தை தொடங்குவதற்கு உதவும். அதனால்தான் காலை குளியலை விட இரவு குளியல் அதிக பலனை கொடுப்பதாகச் சொல்கிறார்கள்.
எந்த குளியலில் பலன்கள் அதிகம் கிடைக்கும்?
இரு குளியலையும் ஒப்பிடுகையில் இரவு குளியலில்தான் அதிக பலன் கிடைக்கிறது. சருமம் சார்ந்த பிரச்சினைகளில் இருந்து விடுபடவும், நல்ல தூக்கத்தை பெறவும், அடுத்த நாளை களைப்பின்றி உற்சாகமாகத் தொடங்கவும் இரவு நேர குளியல் உதவும்.
மேலும் மன அழுத்தத்தை தூண்டும் கார்டிசோல் ஹார்மோன் அளவை சம நிலைப்படுத்தவும் இரவு குளியல் உதவுகிறது. இதன் மூலம் தோல் அழற்சி ஏற்படுவதற்கான வாய்ப்பு குறையும்.
No comments:
Post a Comment