ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கு: உயர் நீதிமன்றம் கூறியது என்ன?(முழு விவரம்) - Minnalseithi

Latest

Search This Blog

Sunday, November 5, 2023

ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கு: உயர் நீதிமன்றம் கூறியது என்ன?(முழு விவரம்)

 ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கு: உயர் நீதிமன்றம் கூறியது என்ன?(முழு விவரம்)


ஆசிரியர்கள் தேர்வில், 400 இடங்களை காலியாக வைப்பது குறித்தும், 400 பேரை தனிப்பிரிவாக பரிசீலிப்பது குறித்தும், அரசு பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


கிருஷ்ணகிரி மாவட்டம், நொச்சிப்பட்டியைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் தாக்கல் செய்த மனு:


கடந்த 2014க்கு பின், ஆசிரியர்கள் பணிக்கு, நேரடித் தேர்வு நடத்தப்படவில்லை.


2013ல் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றேன். 2014 ஜனவரியில் நடந்த சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டேன். என்னுடன், 16,910 பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. இந்த நடைமுறையை முடித்ததால், எனக்கு பணி நியமனம் வரும் என எதிர்பார்த்திருந்தேன்.



இந்நிலையில், 2018ல் பள்ளிக் கல்வித்துறை ஒரு உத்தரவை பிறப்பித்தது. அதில், தகுதியானவர்கள் மத்தியில் இருந்து, போட்டித் தேர்வு வாயிலாக தேர்ந்தெடுப்பதாக தெரிவிக்கப்பட்டது.


ஏற்கனவே பின்பற்றிய நடைமுறையை கைவிட்டு, புதிதாக போட்டித் தேர்வு என்ற முறையை அறிமுகப்படுத்தியது. 10 ஆண்டுகளுக்கும் மேலாக, பணி நியமனத்துக்காக நாங்கள் காத்திருக்கிறோம்.


சமீபத்தில் படிப்பை முடித்தவர்களுடன், நாங்கள் போட்டியிட வேண்டும் என்பது, சரிசமமான போட்டியாக இருக்காது.


எனவே, எங்களுக்கு முன்னுரிமை அளித்து, பணியில் நியமிக்க வேண்டும். 2018ல் பிறப்பித்த உத்தரவை, எங்களுக்கு அமல்படுத்தக் கூடாது.


இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


மனுதாரரைப் போன்று பலரும், மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். இம்மனுக்கள், நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபீக் அடங்கிய அமர்வில், மீண்டும் விசாரணைக்கு வந்தன.


மனுதாரர்கள் சார்பில், வழக்கறிஞர் என்.கவிதா ராமேஷ்வர் ஆஜராகி, ''கடந்த மாதம், 2,200 இடங்களுக்காக புதிதாக தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


இதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், வழக்கு தொடர்ந்த 400 பேரையும் தேர்வு எழுதும்படி வற்புறுத்தாமல், அவர்களை தனிப் பிரிவாக கருதி நியமனம் செய்ய வேண்டும்,'' என்றார்.


அரசு தரப்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் சிலம்பண்ணன், ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் நீலகண்டன் ஆஜராகி, ''இந்த வழக்கின் இறுதி முடிவுக்கு கட்டுப்பட்டது என, கடந்த அக்டோபரில் வெளியிட்ட தேர்வு அறிவிப்பில் கூறியுள்ளோம்.


''அந்த தேர்வு அறிவிப்பை எதிர்த்தும், வழக்கு தொடரப்பட்டுள்ளது. தனி நீதிபதி முன், விசாரணைக்கு வர உள்ளது,'' என்றார்.


விசாரணையின் போது, அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரலிடம், நீதிபதிகள் கூறியதாவது:


கடந்த மாதம் புதிதாக தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 2,200 இடங்களில், 400 இடங்களை காலியாக ஒதுக்கி வையுங்கள். இவர்கள் ஏற்கனவே வழக்கு தொடர்ந்து, நியமனத்துக்காக பல ஆண்டுகள் காத்திருக்கின்றனர். அரசு, அவ்வப்போது புதிது புதிதாக திட்டங்களை அறிமுகம் செய்கிறது.


தற்போது அறிமுகம் செய்துள்ள புதிய முறையை, இந்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்திக் கொள்ளுங்கள். 400 இடங்களை ஒதுக்கி வைத்து விட்டு, மற்ற இடங்களுக்கு தேர்வை நடத்திக் கொள்ளுங்கள். அவர்களை தனிப் பிரிவாக பரிசீலிப்பது குறித்து, அரசுக்கு அறிவுரை கூறுங்கள்.


பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலரையும், நீதிமன்றத்தில் இருக்க சொல்லுங்கள். அரசின் நிலைப்பாட்டை, அடுத்த விசாரணையின் போது தெரிவிக்க வேண்டும்.


இவ்வாறு அவர்கள் கூறினர்.


விசாரணையை, அடுத்த வாரத்துக்கு, நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

No comments:

Post a Comment