கூகுள் கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு முக்கிய அறிவிப்பு!பயனர்கள் உடனடியாக செய்ய வேண்டிய விஷயங்கள்
பயன்பாட்டில் இல்லாத கணக்குகளை நீக்கும் பணியை கூகுள் நிறுவனம் வருகிற டிசம்பர் 1 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.
கூகுளின் ஜி-மெயில் மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தி கூகுள் கணக்குகளில் உள்ளீடு செய்துகொண்டு, யூடியூப், கூகுள் போட்டோஸ், கூகுள் மேப்ஸ், காலண்டர், கூகுள் ஸ்லைட்ஸ், கூகுள் ஷீட்ஸ் உள்ளிட்ட கூகுளின் பல்வேறு தளங்கள் மற்றும் செயலிகளை பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில், கூகுள் நிறுவனம் கடந்த மே மாதம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. கூகுளின் மேம்படுத்தப்பட்ட பயனர்கள் கணக்குகள் கொள்கையின்படி, 2 வருடங்களுக்கும் மேலாக பயன்படுத்தப்படாமல் உள்ள கூகுள் கணக்குகள் நிரந்தமாக நீக்கப்படும் என்று அறிவித்தது.
பயன்பாட்டில் அல்லாத, செயலற்ற நிலையில் உள்ள கணக்குகள், பயனர்களால் பயன்படுத்தப்படாமல் உள்ள அல்லது கடவுச்சொல் மறந்த கூகுள் கணக்குகள், சைபர் கிரைம் குற்றங்கள் உள்ளிட்ட தவறான முறையில் கையாளப்பட வாய்ப்புள்ளதாக கூகுள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த கணக்குகளை நிரந்தரமாக நீக்கவுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
டிச.1 ஆம் தேதி முதல் இந்த நடவடிக்கை தொடங்கவுள்ளதாகவும், ஆகவே கூகுள் பயனர்கள் இந்த வார இறுதிக்குள் தங்கள் கணக்குகளில் கடவுச்சொல் உள்ளிட்ட விவரங்களை அளித்து உள்ளீடு செய்து பயன்படுத்திக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பயன்படுத்தப்படாத கணக்கு வைத்திருக்கும் பயனர்களின் மின்னஞ்சல் முகவரிக்கும் மாற்று(Recovery) மின்னஞ்சல் முகவரிக்கும் கூகுள் இது தொடர்பாக எச்சரிக்கை செய்தி அனுப்பி வருகிறது.
பயனர்கள் செய்ய வேண்டிய விஷயங்கள்:
பயனர்கள் கூகுள் டிரைவ், கூகுள் டாக்ஸ், ஜி-மெயில் உள்ளிட்ட கூகுள் நிறுவனத்தின் பல்வேறு தளங்களில் சேமித்து வைத்துள்ள தங்கள் தகவல்களை பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்துகொள்ள என்ன செய்ய வேண்டும்?
முதலில், கூகுள் கணக்கு நிரந்தரமாக நீக்கம் செய்யப்படாமல் இருப்பதைத் தவிர்க்க விரும்பும் பயனர்கள், குறைந்தது 2 வருடங்களுக்கு ஒருமுறையாவது தங்கள் கூகுள் கணக்கை பயன்படுத்துவது அவசியம்.
மேலும், தங்கள் கூகுள் கணக்கில் உள்ளீடு செய்த பின், கூகுள் தேடலை பயன்படுத்துவது, மின்னஞ்சலில் வந்துள்ள தகவல்களை படிப்பது, யூடியூப் தளத்தில் விடியோக்களை பார்ப்பது உள்ளிட்டவற்றை செய்வதை மூலம் பயனர்களின் கூகுள் கணக்கு செயல்பாட்டில் இருப்பது உறுதிசெய்யப்படும்.
இதை தவிர்த்து, கூகுள் போட்டோஸ் தளத்தை பயன்படுத்திக்கொள்ள தனியாக உள்ளீடு செய்துகொள்ள வேண்டும். இல்லையென்றால் கூகுள் போட்டோஸ் தளத்திலுள்ள படங்கள் நிரந்தரமாக நீக்கப்படும் அபாயம் உள்ளது. இதை தவிர்க்க, அவ்வப்போது கூகுள் போட்டோஸ் தளத்திலும் உள்ளீடு செய்து பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
எந்தெந்த கூகுள் கணக்குகள் நீக்கப்படும்?
பாதுகாப்புக் காரணங்களுக்காக செயலற்ற நிலையில், பயனர்களால் பயன்படுத்தப்படாமல் அல்லது கடவுச்சொல் மறந்த தனிப்பட்ட கூகுள் கணக்குகள் உள்ளிட்டவை நீக்கப்பட்டாலும், பள்ளிகள், நிறுவனங்கள் உள்ளிட்ட அமைப்புகளால் உருவாக்கப்பட்ட கணக்குகள் மற்றும் யூட்யூப் விடியோக்கள் உள்ள கணக்குகளும் நீக்கப்படாது என்றும் கூகுள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயனர்கள் தாங்கள் பயன்படுத்தும் கூகுள் கணக்குகளில் மாற்று மின்னஞ்சல் முகவரி விவரத்தை அளித்து வைத்துக்கொள்ளுமாறும் கூகுள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூகுள் கணக்கிலுள்ள தரவுகளை என்ன செய்வது?
‘Inactive Account Manager’ மூலம், பயனர்கள் தாங்கள் பயன்படுத்தாத கூகுள் கணக்கு மற்றும் அதிலுள்ள தரவுகளை என்ன செய்ய வேண்டுமென்பதை முடிவு செய்துகொள்ளும் வசதியும், அதன் தரவுகளை பிற கூகுள் கணக்குகளுக்கு அனுப்பும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. பயனர்கள் விரும்பினால் தங்கள் கூகுள் கணக்கை முழுமையாக நீக்கும் வசதியும் அதில் உள்ளது.
No comments:
Post a Comment