தீபாவளி கொண்டாட காரணம் என்ன? தீபாவளி பிறந்த கதை! - Minnalseithi

Latest

Search This Blog

Sunday, November 12, 2023

தீபாவளி கொண்டாட காரணம் என்ன? தீபாவளி பிறந்த கதை!

 தீபாவளி கொண்டாட காரணம் என்ன? தீபாவளி பிறந்த கதை!


இந்திய கலாச்சாரம் என்பது பண்டிகைகள் நிறைந்த கலாச்சாரம். ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒவ்வொரு கதை வழங்கப்படுகிறது. தீபாவளிக்கும் நிறையக் கதைகள் உள்ளன. தீபாவளியை தீ ஒளி என முன்னோர் குறிப்பிடுகிறார்கள். தீமை அகன்று நன்மை பிறக்கும் நன்னாள் என்கின்றனர். ஒளி என்பது வெற்றியின் அடையாளம். இருள் என்பது தோல்வியின் பொருள். 


தீபாவளி பண்டிகை தீமையின் வடிவான அசுரர்களை கடவுளின் அவதாரம் அளித்ததால் உருவானது என்கின்றன இந்துப் புராணங்கள். நம்மில் பெரும்பாலானோருக்குத் தெரியும் நராகாசுரன் கதை. நரகாசுரனின் உண்மைப் பெயர் பவுமன். திருமால் வராக அவதாரம் எடுத்து பூமியை துளைத்து அசுரர்களை அழிக்கச்சென்ற போது, அவரின் ஸ்பரிசத்தால் பூமாதேவிக்குப் பிறந்தவன் நரகாசுரன். அசுரவதத்தின் போது பிறந்தவன் என்பதால் அசுரசுபாவம் இவனுக்கு இயல்பாக அமைந்துவிட்டது. நரன் என்றால் மனிதன். மனிதனாக இருந்தாலும், துர்க்குணங்கள் நிரம்பியவனாக இருந்ததால் நரகஅசுரன் எனப்பட்டான். அப்பெயரே நரகாசுரன் என்றானது. 


இவன் தேவர்களுக்கும் மக்களுக்கும் பல்வேறு துன்பங்களை கொடுத்து வந்தான். இதை அறிந்த மகாவிஷ்ணு அவனை கொல்ல நினைத்தார். ஆனால் அவன் பூமி தாய்க்கு பிறந்தவன். அவன் தன் தாயை தவிர வேறு யாராலும் கொல்லப்பட முடியாத வரம் பெற்றிருந்தான். எனவே மகாவிஷ்ணு ஒரு தந்திரம் செய்தார். நரகாசுரனுடன் போரிட்டார். அவன் மகாவிஷ்ணு மீது அம்பு எய்தினான். இந்த அம்பு பட்டு அவர் மயக்கம் அடைவது போல் கீழே விழுந்தார். இதை பார்த்த சத்திய பாமா கோபம் அடைந்து நரகாசுரனை போருக்கு அழைத்தார்.


 சத்திய பாமா பூமியின் அவதாரம் என்று உணராமல் அவரோடு நரகாசுரன் போர் செய்தான். அன்னையின் அம்புக்கு பலியாகி சரிந்தான். அப்போதுதான் அவனுக்கு சத்யபாமா தனது தாய் என்று தெரிந்தது. 


அவரிடம் அம்மா, நான் மறைந்த இந்நாள் மக்கள் மனதில் நிற்க வேண்டும். என்னுடைய பிடியிலிருந்து விடுபட்ட தேவர்களும் மக்களும் இந்த நாளை இனிப்பு வழங்கி, ஒளிமயமாக கொண்டாட வேண்டும் என்று வேண்டினான். மகாவிஷ்ணுவும் சத்யபாமாவும் அவனுக்கு வரம் கொடுத்தார்கள். இதையொட்டி நரகாசுரன் மறைந்து மகிழ்ச்சி பொங்கிய நாள் தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இதை கிருஷ்ண லீலை என்கிறது புராணம்.


வால்மீகி இராமாயணத்தில் இராமன் கொடியவனான இராவணனை அழித்துவிட்டு தனது வனவாசத்தை முடித்து கொண்டு மனைவி சீதையுடன் சகோதரன் லட்சுமணன் உடன் அயோத்திக்கு திரும்பிய நாளை மக்கள் விளக்கேற்றி வரவேற்றனர். அதன் தொடர்ச்சியாக தீபாவளி பிறந்தது என்று சொல்லப்படுகிறது.


பொதுவாக தீபாவளி ஐப்பசி மாதங்களில் வரும். ஆனால் ஒருசில வருடங்களில் இந்த மாதத்தில் மாற்றம் நடப்பது உண்டு. ஐப்பசி இல்லை என்றால் புரட்டாசி. இந்தியாவிலுள்ள எல்லா மாநிலங்களிலும் இந்தப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. வாத்ஸ்யாயனர் எழுதிய நூல் யட்ஷ் ராத்திரி என்று தீபாவளி பண்டிகையை குறிப்பிடுகிறது. இது கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தன்று இரவில் கொண்டாடப்படுகிறது. இதனை சுகராத்திரி என்று மக்கள் குறிப்பிடுகிறார்கள். விஷ்ணுபுராணம் தீபாவளி அன்று அதிகாலையில் நீராடி மகாலட்சுமி பூஜையை அனுஷ்டித்து தீபங்களை ஏற்றி வீடு நிறைய வைத்தால் லட்சுமி கடாட்சம் கைவர கிடைக்கும் என்கிறது. 


இன்னொரு கதையும் உண்டு. ஸ்கந்த புராணத்தின் படி, சக்தியின் 21 நாள் கேதாரகௌரி விரதம் முடிந்து இந்த தினத்தில்தான். விரதம் முடிவடைந்த பின்னர் சிவன், சக்தியை தன்னில் ஒரு பாதியாக ஏற்று 'அர்த்தநாரீஸ்வரர்' உருவமெடுத்தார். இறைவன் ஜோதிவடிவாக நம்முள் இருக்கிறான். இந்த ஜோதி வடிவான இறைவனை வழிபடுவதற்கான சிறப்பு நாளே தீபாவளியாகும். தீப வழிபாடு தீபாவளி என நாம் கொள்ளலாம். மேலும் ஆணில் பெண் சரிபாதியாக இணையும் நன்நாளினை நினைவுபடுத்துவதாக தீபாவளி அமைந்ததாகக் கூறுகிறது ஸ்கந்தபுராணம். 


புராணங்கள் இப்படிச் சொல்ல, தீபாவளிப் பண்டிகை எப்போதிருந்து கடைப்பிடிக்கப்பட்டது? ஏன் கொண்டாடப்படுகிறது என்பது பற்றி வேறு சில விளக்கங்களும் சொல்லப்படுகின்றன. 


கி.பி.ஆயிரத்து நூறாம் ஆண்டிலேயே தீபாவளி கொண்டாடும் பழக்கம் இந்தியாவில் இருந்திருப்பதாக சில வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. கி.பி. 1117ல் வாழ்ந்த சாளுக்கிய திரும்புவன மன்னன் ஆண்டு தோறும் சாத்யாயர் எனும் அறிஞருக்கு தீபாவளிப் பரிசு வழங்கியதாக கன்னடத்தில் எழுதப்பட்ட கல்வெட்டு ஒன்று கிடைத்துள்ளது. கி.பி.1250ல் எழுதப்பட்ட லீலாவதி எனும் மராத்தி நூலில் எண்ணெய் தேய்த்து நீராடுவதை பற்றிய குறிப்புக்கள் இடம் பெற்றுள்ளன.


பொதுவாக ஐப்பசி மாதம் பனி நிறைந்த மாதம். இல்லம் தோறும் குளிர் அதிகமாக அண்டும் காலம். இருள் கூடும் காலம் என்றும் இதைக் கூறலாம். அந்தக் காலகட்டத்தில் ஒளியை பெருக்கி உஷ்ணத்தை வீடுகளில் உருவாக்க இந்தப் பண்டிகையை மக்கள் கடைப்பிடிக்க தொடங்கி இருக்கலாம் என்பது கரிசல் இலக்கிய எழுத்தாளர் கி.ராஜநாராயணன் கருத்து.


எல்லோரும் கொண்டாடிய தீபாவளி


தீபாவளிப் பண்டிகையை இந்தியர்கள் மற்றும் இந்துக்களைத் தவிர பிற நாட்டவரும் பிற மதத்தவரும் கூடக் கொண்டாடும் பழக்கம் இருந்துள்ளது. 


பழங்கால இந்திய மன்னர்கள் இந்துக்களாக இருந்தாலும் முகலாயர்களாக இருந்தாலும் தீபாவளி போன்ற பண்டிகைக் காலங்களில் மக்களுக்கு பல சலுகைகளையும் பரிசுப் பொருட்களையும் அளிப்பதை வழக்கமாக வைத்திருந்தனர். அரசனின் தர்பாருக்குள் மக்கள் அனுமதிக்கப்பட்டு அடிப்படை தேவைகளுக்கு அடித்தளம் போட்டு தரும் நாளாக பண்டிகைகள் திகழ்ந்துள்ளன. முகாலய மன்னர்களில் சிலர் தீபாவளி போன்ற இந்துக்களின் பண்டிகைகளை ஆதரித்தாகவும், பசியாக வந்தவர்களுக்கு விருந்து அளித்ததாகவும் வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன.


தமிழ் மன்னர்கள் பண்டைய காலத்தில் ரோம், எகிப்து, பாபிலோன், கிரேக்கம், பாரசீகம் என பல உலக நாடுகளுடன் வர்த்தக தொடர்புகள் இருந்துள்ளன. இந்தியாவிலிருந்து வாசனை திரவியங்கள், மூலிகைகள், யானை தந்ததங்கள் எடுத்து சென்றதாக வரலாற்று கூறுகிறது. அந்த வணிக தொடர்பின் போது இந்தியாவிலிருந்து சென்ற பல வாணிகர்கள் இடம்பெயர்ந்த நாட்டில் தீபாவளி பண்டிகையை கொண்டாடி உள்ளனர். ஆகவே பல தேசங்களுக்கும் பரவி உள்ளது தீபாவளி. சீக்கியர்களும்,சமணர்களும் கூட இப்பண்டிகையை வெவ்வேறு காரணங்களுக்காக கொண்டாடுகின்றனர்.


1577ம் ஆண்டு பொற்கோவில் கட்டுமானப் பணிகள் துவங்கிய தினம் என சீக்கியர்கள் தீபாவளியைக் கொண்டாடகின்றனர். சமணர்கள், மகாவீரர் முக்தி அடைந்த நாள் என தீபாவளியைக் கொண்டாடுகின்றனர்.


இப்போது கூட இந்தியா மட்டுமின்றி, இலங்கை, நேபாளம், மியான்மர்,சிங்கப்பூர், மலேசியா,பிஜி, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளிலும் இந்தப் பண்டிகையை மக்கள் கொண்டாடுகிறார்கள்.

No comments:

Post a Comment