கனமழை எச்சரிக்கை காரணமாக நாளை 14.11.2023 விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள 2 மாவட்டங்கள்
வடகிழக்கு பருவமழை தொடங்கி இருக்கும் நிலையில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த சூழலில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மேலும், 24 மணி நேரத்தில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும். மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, வரும் 16 ஆம் தேதி மத்திய மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக்கடலில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனையொட்டி டெல்டா மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை உள்ளிட்ட 7 டெல்டா மாவட்டங்களில் இன்று மிகக் கன மழை பெய்யும் என வானிலை மையம் ஆரஞ்சு நிற அலர்ட் கொடுத்திருக்கிறது. சென்னை, செங்கல்பட்டு, தூத்துக்குடி, உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை (14.11.2023) விழுப்புரம் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர் போன்ற மாவட்டங்களில் மிகக் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், அரியலூர், நாகை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கனமழை எச்சரிக்கை காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (14.11.2023) ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் உத்தரவிட்டுள்ளார். இதற்கு முன்னதாக, மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (14.11.2023) ஒரு நாள் மட்டும் கனமழை எச்சரிக்கை காரணமாக விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment