மிகவும் பயனுள்ள சமையலறை குறிப்புகள்!
*உளுந்து வடை தட்டும்போது அரிசி மாவை லேசாகத் தொட்டு தட்டினால் வடை மேலே மொறு மொறுப்பாகவும், உள்ளே மிருதுவாகவும் இருக்கும்.
* அடை செய்யும் போது ஒரு கப் கேரட் துருவலை சேர்த்துக் கொண்டால் அதன் ருசியே தனி.
* தோசை மாவு அளவுக்கு அதிகமாக புளித்துவிட்டால் சிறிது சர்க்கரை கலந்தால் சரியாகிவிடும்.
* கீரை வேகவைத்த தண்ணீரோடு சோறு வடித்த தண்ணீரையும் சிறிது உப்பு, மிளகையும் கலந்து குடிக்க சத்தான சூப் தயார்.
*மதியம் வைத்த கீரை மீதம் இருந்தால் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து, வடிகட்டி அதன் மேல் கார்ன் சிப்ஸ், மிளகுத் தூள் சேர்த்துக் குழந்தைகளுக்கு கொடுத்தால் சுவையான
சூப் ரெடி.
* மதியம் வைத்த பொரியல் மீதி இருந்தால் அதனுடன் பன்னீர் சேர்த்து இரண்டு பிரட் துண்டுகளுக்கு இடையில் வைத்து சாண்ட்விச் போல தயார் செய்து கொடுக்கலாம்.
* மஞ்சள் முள்ளங்கியை வேகவைக்கும் போது ஒரு சிட்டிகை சர்க்கரை சேர்த்து வேகவைத்தால் முள்ளங்கி வாசனையாகவும் சுவையாகவும் இருக்கும்.
*சமோசாவிற்கு மாவு பிசையும் போது மைதாவை சலித்து, மெல்லிய துணியில் கட்டி, இட்லி தட்டின் மீது வைத்து, ஐந்து நிமிடம் ஆவிபிடித்து உப்பு, சீரகம், டால்டா போட்டு பிசைந்தால் சமோசா மொறுமொறுவென்று, மிருதுவாக இருக்கும்.
*சப்பாத்திக்கு குருமா செய்யும் போது கேரட், பீட்ரூட்டுடன் பப்பாளிக் காயையும் நறுக்கி போட்டு, பட்டை, சோம்பு, தேங்காய் துருவல் சேர்த்து அரைத்து சேர்த்து குருமா செய்தால் சுவையாகவும், மணமாகவும் இருக்கும்.
*கொத்தமல்லி சட்னி மீந்து போனால் மோரில் சட்னியைப்போட்டு கரைத்து விட்டால் மசாலா மோர் போல சுவையாக இருக்கும்.
* புளியோதரை செய்யும் போது, இரண்டு தேக்கரண்டி வெள்ளை எள், கால் தேக்கரண்டி வெந்தயம் இவைகளை வறுத்து, பொடி செய்து போட்டு கலந்து விட்டால் சுவை அதிகமாக இருக்கும்.
*சப்பாத்தி, பூரி இவைகள் செய்வதற்காகப் பிசைந்த மாவு மீந்து போய்விட்டால், மாவில் எண்ணெயோ, நெய்யையோ தடவி, காற்றுபுகாத டப்பாவில் வைத்து மூடி, ஃபிரிட்ஜில் வைத்து விட்டால் மாவு இறுகாமலும், கெட்டியாகவும் இருக்கும். இரண்டு நாட்கள் கழித்து சப்பாத்தி செய்யலாம்.
*பாலை உரையூற்றிய பின் அந்த பாத்திரத்தை கொஞ்சம் கூட அசைக்கக் கூடாது. அசைக்காமல் இருந்தால்தான் கெட்டி தயிர் கிடைக்கும்.
* பலகாரங்கள் செய்வதற்கான மாவில் சூடான எண்ணெய் கலந்து கொண்டால் எண்ணெய் குடிக்காது, சுவையும் கூடும்.
*கடலை மாவைக் குறைத்து, பொட்டுக்கடலை மாவை சேர்த்தால் முறுக்கு மொறுமொறுப்பாக இருக்கும்.
*முறுக்கு மாவில் வேர்க்கடலைப் பொடி கலந்தால் கரகரவென்று ருசியாகவும் இருக்கும்.
*பொட்டுக் கடலை மாவில் இனிப்புகள் செய்தால் சுவையாக இருக்கும். வாயு பிரச்னை ஏற்படாது. நெய்யும், சர்க்கரையும் குறைவாக செலவாகும்.
* ப்ரவுன் கலர் பேப்பரில் செய்யப்பட்ட கவர்களில் வாழைப்பழத்தை போட்டு வைத்தால் கெடாமல் இருக்கும்.
*இனிப்பு பலகாரங்கள் உலர்ந்து கெட்டுப் போகாமல் இருக்க, அதன் மீது சிறிதளவு தேன் பூசி வைத்தால் போதும்.
* இட்லிக்கு மாவு அரைத்தவுடன் அதில் ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்த்தால் இட்லி வெண்மையாகவும், மென்மையாகவும் இருக்கும்.
*அதிரச மாவு மீதமாகி விட்டால் அத்துடன் தேங்காய்ப்பால் சேர்த்து கரைத்து பணியாரம் செய்தால் சுவையாக இருக்கும்.
* காய்கறி மற்றும் பழங்களை சிறிதளவு வினிகர் கலந்த குளிர்ந்த நீரில் ஒரு சில நிமிடங்கள் போட்டு எடுத்தால் கிருமிகள் இறந்து விடும். நோய் ஏற்படுவது தவிர்க்கப்படும்.
* கடலை எண்ணெய் கெடாமல் நீண்ட நாட்கள் இருக்க, சிறிதளவு புளியை போட்டு வைத்தால் போதும்.
* உணவை பொட்டலமாக வாழை இலையில் கட்டும் போது வென்னீரில் நனைத்துவிட்டு கட்ட வேண்டும். கிழியாமல் கட்ட முடியும்.
No comments:
Post a Comment