கபநோய்கள் நம்மைச் சோர்வுறச் செய்யும்போது நம்முடன் இருக்க வேண்டிய மூலிகை ஊன்றுகோல்!
நுரையீரல் பாதையில் தோன்றும் சளிப் படலத்தை வெளியேற்றும் பசுமைத் துப்புரவாளர் இது.
முன்பெல்லாம் ஆவணி தொடங்கிவிட்டாலே, பானைகள் கவிழ்க்கப்பட்டு, விதவிதமான மூலிகை ‘அடை’ உணவு ரகங்கள் கிராமங்களின் மூலை முடுக்குகளில் எல்லாம் நிரம்பிக் கிடக்கும். குறிப்பாக, மழைக்காலத்தில் ‘முசுமுசுக்கை அடை’ வீட்டுக்கு வீடு மணம் பரப்பியதை, கடந்த தலைமுறையினரால் அவ்வளவு விரைவாக மறந்துவிட முடியாது.
உணவாக
அரிசியோடு இதன் இலைகளைக் கூட்டி மாவாக அரைத்து, ‘முசுமுசுக்கை அடை’யைச் சாப்பிடலாம்.
முன்னறிவிப்பின்றி மூக்கில் நீர் வடியும்போது, முசுமுசுக்கையைக் காரக் குழம்பு ரகத்தில் செய்து சுடு சாதத்தில் பிசைந்து ஆவி பறக்கச் சாப்பிட்டால், மூக்கிலிருந்து நீர் வடிவது குறையும்.
இதன் இலைகளோடு மிளகு, மணத்தக்காளிக் கீரை, கொத்தமல்லி இலைகள், புதினா, கறிவேப்பிலை சேர்த்து தொடு உணவைத் தயாரித்துச் சாப்பிட அஜீரணம், வயிற்றுப்பொருமல் தணியும்.
முசுமுசுக்கை இலை, தூதுவேளை, இஞ்சி, தனியா ஆகியவற்றோடு கூடவே அறுகம்புல்லையும் துணைக்கு அழைத்துத் துவையலாகச் செய்து சாப்பிட, பித்தம் சார்ந்த நோய்கள் அடங்கும்.
முசுமுசுக்கை இலை, கொத்துமல்லிக் கீரை, கொண்டைக் கடலை, சிறிது பெருங்காயம் சேர்த்துத் தயாரிக்கப்படும் முசுமுசுக்கை - கடலைச் சட்னி, நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் உணவு.
மருந்தாக:
குளுக்கோஸ் வளர்ச்சிதையில் சில மாறுதல்களை உண்டாக்கி, ரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த இதன் வேதிப்பொருட்கள் உதவுகின்றன. இதன் இலைகளின் மூலம் தயாரிக்கப்பட்ட நானோ நுண்துகள்களுக்கு, கொசுப்புழுக்களை அழிக்கும் வீரியம் அதிக அளவில் இருப்பதாக ஆய்வு உறுதிப்படுத்துகிறது.
வயிற்றின் மென்படலத்தில் எந்தவிதக் கிருமித் தொற்றும் தாக்காத வகையில், அதன் நோய் எதிர்க்கும் திறனை முசுமுசுக்கையின் சாரங்கள் அதிகரிக்கின்றன.
மூச்சுக் குழாய் மற்றும் நுரையீரல் பகுதியில் ஏற்படும் தொற்றுக்களை அழிக்கும் வல்லமை முசுமுசுக்கைக்கு உண்டு.
வீட்டு மருந்தாக:
முசுமுசுக்கை இலைப் பொடி, கண்டங்கத்திரிப் பொடி, திப்பிலி, மிளகு ஆகியவற்றைத் தேனில் குழைத்துச் சாப்பிட, இரைப்பிருமல் அகலும்.
கப நோய்களைத் தடுக்கும் சித்த மருத்துவக் குடிநீர் வகைகளில், முசுமுசுக்கை இலைகளைச் சேர்த்துக்கொள்ள, மருந்தின் வீரியம் அதிகரிக்கும்.
முசுமுசுக்கை வேர், ஆடாதோடை வேர், கிராம்பு ஆகியவற்றைப் பொடித்து, வெற்றிலையில் வைத்து மென்று சாப்பிட, சுவாசம் எளிமையாய் நடைபெறும்.
இதையே கஷாயமாக்கிக் கொடுத்தால், உடலில் அதிகரித்த கபமும் பித்தமும் குறையும்.
முசுமுசுக்கை, கற்பூரவள்ளி, சின்ன வெங்காயம், சீரகம் ஆகிவற்றைச் சேர்த்தரைத்துச் சாப்பிட, உடலுக்கு உடனடியாகப் பலம் கிடைக்கும்.
வெளுத்த தலைமுடியைக் கருமையாக்கத் தயாரிக்கப்படும் இயற்கை முடிச் சாயங்களில் இதன் இலைகளையும் சேர்த்துக்கொள்ளலாம்.
முசுமுசுக்கை இலைகளிலிருந்து சாறு பிழிந்து, நல்லெண்ணெய் சேர்த்துக் காய்ச்சி, கப நோய்களுக்குத் தலை முழுகும் எண்ணெய்யாகப் பயன்படுத்தலாம்.
இறுகிய கோழையை வெளியேற்ற, இதன் வேரைக் கஷாயமாக்கிப் பருகலாம். கோழையகற்றி செய்கையுடைய இதன் இலைகளைக்கொண்டு இருமலின்
தீவிரத்தை உடனடியாகக் குறைக்க முடியும்
No comments:
Post a Comment