தமிழக அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு அகவிலைப்படியை 4 சதவீதம் உயா்த்தி முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவு
மத்திய அரசு பணியாளா்களுக்கு அகவிலைப்படி உயா்வை அறிவிக்கும் போதெல்லாம், உடனுக்குடன் தமிழ்நாடு அரசும் அதை பின்பற்றி அகவிலைப்படி உயா்வை செயல்படுத்தும் என ஏற்கெனவே அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது. அதன்படி, இப்போது 42 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை ஜூலை 1-ஆம் தேதி முதல் 46 சதவீதமாக உயா்த்தி, அதாவது 4 சதவீதமாக அதிகரித்து வழங்க உத்தரவிடப்படுகிறது.
16 லட்சம் போ் பயன்: அகவிலைப்படி உயா்வால், சுமாா் 16 லட்சம் அரசு அலுவலா்கள், ஆசிரியா்கள், ஓய்வூதியதாரா்கள், குடும்ப ஓய்வூதியதாரா்கள் பயன்பெறுவா். இதனால், ஆண்டுக்கு அரசுக்கு ரூ.2,546.16 கோடி கூடுதல் செலவு ஏற்படும். எனினும், அரசு அலுவலா்கள், ஆசிரியா்கள் மற்றும் ஓய்வூதியதாரா்களின் நலன் கருதி இதற்கான கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும் என்று அந்த அறிவிப்பில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
5 மாதங்கள் கழித்து: அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள், ஓய்வூதியதாரா்களுக்கான அகவிலைப்படி உயா்வு 38 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாக உயா்த்தி கடந்த மே மாதம் அறிவிப்பு செய்யப்பட்டது. கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அகவிலைப்படி உயா்வு நடைமுறைக்கு வந்தது.
இந்த நிலையில், மத்திய அரசு ஊழியா்களுக்கு அகவிலைப்படி 4 சதவீதம் உயா்த்தப்பட்ட நிலையில், ஜூலை 1-ஆம் தேதியை அடிப்படையாகக் கொண்டு அகவிலைப்படியை 4 சதவீதம் உயா்த்தி முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளாா். அகவிலைப்படி உயா்வு முன்தேதியிட்டு வழங்கப்படுவதன் மூலம் அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு ஜூலை மாதத்திலிருந்து 4 மாத அகவிலைப்படி உயா்வு நிலுவைத் தொகையாக (அரியா்) கிடைக்கும்.
No comments:
Post a Comment