கிருஷ்ணர், ஆவணி மாதம் அஷ்டமி திதியும், ரோகிணி நட்சத்திரமும் இணைந்த நாளில் அவதரித்தார். உலகத்தை காப்பதற்காக கிருஷ்ணர் அவதரித்த இந்த நாளை அனைவரும் கோலாகலமாக கொண்டாடுவது வழக்கம்.
கிருஷ்ண ஜெயந்தி அன்று, உரியடி உள்ளிட்ட பலவிதமான விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்படும்.
கிருஷ்ண ஜெயந்தி அன்று வீட்டில் ஆண் குழந்தைகள் இருந்தால் கிருஷ்ணர் வேடமும், பெண் குழந்தைகளாக இருந்தால் ராதை வேடமும் போட்டு அலங்கரித்து மகிழ்வது வழக்கம்.
இப்படி செய்வதால் கிருஷ்ணரே குழந்தை வடிவில் நம்முடைய வீட்டிற்கு எழுந்தருளி அருள்வதாக ஐதீகம். ஸ்ரீ ஜெயந்தி அன்று வழிபடுபவர்கள் கோவிலுக்கு சென்று வழிபடலாம். அன்று கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.
கிருஷ்ண ஜெயந்தி 2023
மகாவிஷ்ணுவின் தசாவதாரங்களில் மிகவும் தனித்துவமான அவதாரமாக போற்றப்படுவது ராம அவதாரமும், கிருஷ்ண அவதாரமும் தான். இதில் ராம அவதாரம் ஒரு மன்னனுக்குரிய நெறிமுறைகளை, வாழ்க்கை வழிமுறைகளை எடுத்துக் காட்டுவதாகவும். ஆனால் ராம அவதாரத்தை விடவும், கிருஷ்ண அவதாரமே மிகவும் சிறப்பானதாக போற்றப்படுகிறது. இதற்கு காரணம், அந்த பரமாத்மா சாதாரண மனித ரூபத்தில் பிறந்து, வளர்ந்து, புல், மரம், செடி, கொடி துவங்கி, மனிதர்கள் வரை அனைவருக்கும் தனது அருட் கருணையை வாரி வழங்கிய அவதாரம் கிருஷ்ண அவதாரமாகும்.
கிருஷ்ண அவதாரம் சிறப்பு ஏன்?
அந்த தெய்வம் நம்மில் ஒருவராக நம்முடன் இந்த மண்ணில் வந்து வாழ்ந்ததை மக்கள் கொண்டாடுவதால் தான் கிருஷ்ணர் அவதரித்த தினம் இந்த அளவிற்கு கோலாகலமாக கொண்டாடப்படுவதற்கு காரணம். தற்போதும் கூட கிருஷ்ணர் வளர்ந்து, விளையாடிய பிருந்தாவனத்திற்கு செல்லும் பக்தர்கள் பலர் தரையில் புரண்டும், அங்குள்ள பொருட்களை கட்டி அணைத்துக் கொள்வதையும் காண முடியும்.
அப்படி ஏதாவது ஒருவகையில் கிருஷ்ணரின் அருள் தங்களுக்கும் கிடைத்து விடாதா என்ற பரவசம் அவர்களுக்குள் ஏற்படுவதை உணர முடியும்.
அத்தகைய கிருஷ்ணர் அவதாரம் எடுத்த நாள் கிருஷ்ண ஜெயந்தி ஆகும். கிருஷ்ணர் நம்மை காக்க வந்து விட்டார் என மக்கள் மகிழ்ச்சியுடன் நாடு முழுவதும் கொண்டாடும் ஒரு நாள் கிருஷ்ண ஜெயந்தி ஆகும்.
இந்த கிருஷ்ண ஜெயந்தியை எப்படி கொண்டாட வேண்டும், வீடுகளில் எப்படி பூஜை செய்ய வேண்டும், எந்த நாளில், எந்த நேரத்தில் கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாட வேண்டும் என்ற சந்தேகம் பலருக்கும் ஏற்படும்.
கிருஷ்ண ஜெயந்தியை எப்படி கொண்டாட வேண்டும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
கிருஷ்ண ஜெயந்தி 2023 தேதி :
அஷ்டமி திதியும், ரோகிணி நட்சத்திரமும் இணையும் நாளே கிருஷ்ண ஜெயந்தி ஆகும். இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா செப்டம்பர் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் கொண்டாடப்படுகிறது. இதில் எந்த நாளை கிருஷ்ண ஜெயந்தியாக கணக்கில் எடுத்துக் கொள்ளவது என பலருக்கும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
அஷ்டமி திதி துவங்கி விட்டாலே கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாட துவங்கி விடலாம். பொதுவாக வைணவர்களில் வைகானச ஆகமம், பாஞ்சராத்ர ஆகமம் என இரண்டு ஆகமங்கள் உண்டு. வைகாசன ஆகமப்படி அஷ்டமி திதி துவங்கி விட்டாலே கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாட துவங்கி விடுவார்கள். பாஞ்சராத்ர ஆகமத்தை பின்பற்றுபவர்கள் ரோகிணி நட்சத்திலேயே கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடுவார்கள். இதை ஸ்ரீ ஜெயந்தி என்றும் சொல்வார்கள்.
கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடும் நேரம் :
பொதுவாக கிருஷ்ண ஜெயந்தியை இரவு நேரத்தில் தான் கொண்டாட வேண்டும். செப்டம்பர் 06 ம் தேதி இரவு 09.15 மணிக்கு தான் அஷ்டமி திதி துவங்குகிறது. ஆனால் மாலை 03.24 மணிக்கே ரோகிணி நட்சத்திரமும் துவங்கி விடுகிறது. இதனால் வைகாசன ஆகமப்படி கொண்டாடுபவர்கள் செப்டம்பர் 06 ம் தேதி மாலை 6 மணிக்கு மேல் கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடலாம்.
பாஞ்சராத்ர ஆகமப்படி கொண்டாடுபவர்கள் செப்டம்பர் 07 ம் தேதி காலையிலேயே கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும். மாலையில் செல்லக் கூடாது. செப்டம்பர் 07 ம் தேதி இரவு 09.14 வரை அஷ்டமி திதி இருந்தாலும், மாலை 03.39 மணி வரை மட்டுமே ரோகிணி நட்சத்திரமும் உள்ளது. அஷ்டமியும், ரோகிணி நட்சத்திரமும் இணைந்து வரும் நாளிலேயே கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட வேண்டும்.
கிருஷ்ண ஜெயந்தி வீட்டில் கொண்டாடும் முறை :
செப்டம்பர் 06 ம் தேதியன்று மாலை 6 மணிக்கு மேல் வீட்டில் கிருஷ்ண படம் அல்லது குழந்தை கிருஷ்ணரின் விக்ரஹம் இருந்தால் அதை சுத்தம் செய்து அழகாக அலங்கரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அரிசி மாவினால் கிருஷ்ணரின் பாதங்களை வரைந்து, நைவேத்தியமாக கிருஷ்ணருக்கு பிடித்த அவல், முறுக்கு, சீடை, லட்டு என என்ன பலகாரங்கள் வேண்டுமானாலும் வைத்து படைக்கலாம். எதுவும் முடியவில்லை என்றால் எளிமையாக அவல் மட்டும் வைத்து படைக்கலாம். ஆனால் கண்டிப்பாக கிருஷ்ணருக்கு மிகவும் பிரியமான பால், நெய், வெண்ணெய், தயிர், மோர் ஆகிய 5 பொருட்களை வைத்து படைப்பது சிறப்பானதாகும்.
குழந்தை வரம் வேண்டுபவர்கள் கணவன் - மனைவி இருவரும் சேர்ந்து இந்த நாளில் உபவாசமாக இருந்து கண்ணனை வழிபட்டால் அடுத்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்திக்குள் அந்த கண்ணனே குழந்தையாக வந்து பிறப்பான் என்பது ஐதீகம். மற்றவர்கள் உபவாசமாக இல்லாமல், குழந்தைகளுக்கு கிருஷ்ணன் வேடமிட்டு, பஜனை வைத்து மகிழ்ச்சியாக இந்த நாளை கொண்டாடலாம்.
No comments:
Post a Comment