மிகச் சிறந்த கல்வியாளர், மிகவும் சிறந்த ஆசிரியர், குடியரசுத் தலைவர் என ஆகச் சிறந்தவராக நாட்டு மக்களின் மனதில் பதிந்து விட்ட சிந்தனையாளர்.
18-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி இந்தியாவின் பெருமையை உலகறியச் செய்த தத்துவ ஞானி. ஆசிரியர் தொழிலுக்கு இலக்கணம் வகுத்தவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்.
அவரது பிறந்தநாளான செப்டம்பர் 5-ம் தேதியைத்தான் நாம் ஆசிரியர் தினமாகக் கொண்டாடி வருகிறோம்.
டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் 1888-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ம் தேதி வீராச்சாமிக்கும், சீதம்மா தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தவர். இவர் பிறந்த ஊர் அப்போதைய ஒருங்கிணைந்த மெட்ராஸ் மாகாணம், இப்போதைய தமிழகத்தில் உள்ள திருத்தணிக்கு அருகே உள்ள சர்வப்பள்ளி என்னும் ஊராகும்.
தெலுங்கை தாய் மொழியாக கொண்ட இவர் ஏழை பிராமண சமயத்தை சார்ந்தவர் ஆவார். இவர் தொடக்க பள்ளியை திருவள்ளூரில் உள்ள கௌடி என்ற பள்ளியில் படித்தார்.
உயர் நிலை கல்வியை திருப்பதியில் உள்ள லூத்தரன் மிஷன் என்னும் உயர் நிலை பள்ளியிலும், கல்லூரியை வேலூரியில் உள்ள ஊரிசு என்ற கல்லூரியில் படித்தார்.
அதன் பிறகு இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பை சென்னையில் கிறிஸ்துவ கல்லூரியில் படித்து முடித்தார். உதவித்தொகை மூலமாகவே இவருடைய கல்வி படிப்பை தொடர்ந்து உச்சம் தொட்டார்.
படிப்பை முடித்த பிறகு டாக்டர் ராதாகிருஷ்ணன் சென்னையில் உள்ள பிரசிடென்சி (மாநிலக் கல்லூரி) கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றினார்.
படிக்கும்போதே ஆசிரியர்களை நேசித்த ராதாகிருஷ்ணன் தான் ஒரு சிறந்த ஆசிரியராக வரவேண்டும் என்று மனதில் திடம் கொண்டார்.இதற்காக மாணவர்களுக்கு எளிய முறையில் பாடங்களை நடத்தி மாணவர்களுடன் ஒருங்கிணைந்தார்.
இந்து மத இலக்கியத் தத்துவங்களான உபநிடதங்கள், பகவத்கீதை, பிரம்மசூத்திரா, மற்றும் சங்கரா, ராமானுஜர், மாதவர், போன்றோரின் வர்ணனைகளையும் கற்றுத் தேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்.
அதன் பின்னர், 1918 ஆம் ஆண்டில் மைசூர் பல்கலைக்கழகத்தின் தத்துவப் பேராசிரியராகத் தேர்வு செய்யப்பட்ட இவர், 1921-ஆம் ஆண்டு கல்கத்தா பல்கலைக்கழகத்தில் தத்துவப் பேராசிரியராகப் பரிந்துரைக்கப்பட்டார்.
அதன் பிறகு 1923-ஆம் ஆண்டு டாக்டர் ராதாகிருஷ்ணன் தனது அற்புதப் படைப்பான "இந்திய தத்துவம்" என்ற புத்தகத்தை வெளியிட்டார். இந்தப் புத்தகமானது ஒரு தலைச்சிறந்த படைப்பாக இன்று வரை போற்றப்பட்டு வருகிறது.
டாக்டர் ராதாகிருஷ்ணன் திருமண வாழ்க்கை
இவர் தனது 16-வது வயதில் தனது உறவினர் மகளான சிவகாமு என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 5 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் இருந்தனர்.
1952-ஆம் ஆண்டு நாட்டின் குடியரசின் துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1962 முதல் 1967 வரை குடியரசு தலைவராக பதவியேற்று சிறப்பாக பணிபுரிந்தார்.இவர் குடியரசுத் தலைவராகஇருந்த காலத்தில் பண்டிட் ஜவாஹர்லால் நேரு, குல்சாரி லால் நந்தா,லால் பகதூர்சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகியோர் பிரதமர்களாகப்பதவி வகித்தனர்.
ஆசிரியர் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது?
ஆசிரியப்பணியே அறப்பணி, அதற்கு உன்னை அர்ப்பணிஎன்ற சொல்லுக்கேற்ப மிகச் சிறந்த ஆசிரியராக வலம் வந்தவர் ராதாகிருஷ்ணன். இவர் மிகச்சிறந்த தத்துவஞானி, அறிஞர், அரசியல்வாதி என பன்முகம் கொண்டவர்.
தூதர், கல்வியாளர், நல்ல உள்ளம் கொண்ட தூய மனிதர், மாணவர்களிடையே பிடித்த ஒரு சிறந்த ஆசிரியர். அதனால்தான் அவரது பிறந்தநாள், ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
ஒரு மனிதனை அவனுக்கே அவன் யார் என்பதை அடையாளம் காட்டும் நபர்தான் ஆசிரியர். நல்ல மனிதராகவும், சமூகத்தின் சிறந்த உறுப்பினராகவும், நாட்டின் சிறந்த குடிமகனாகவும் மாணவர்கள் மாறுவதற்கு ஆசிரியர்கள் உதவுகின்றனர்.
ஆசிரியர்களுக்கு விருதுகள்...
ஆசிரியர்களை மதித்து கௌரவிக்க வேண்டும். நாட்டில் தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள் மற்றும் இடைநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பாராட்டத்தக்க ஆசிரியர்களுக்கு பொது நன்றியாக ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, அதாவது செப்டம்பர் 5-ஆம் தேதியன்று, தேசிய ஆசிரியர் விருதுகள் நாட்டின் குடியரசுத் தலைவரால் வழங்கப்படுகின்றன.
அதைப் போலவே தமிழகத்திலும் மாநில நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்படுகின்றன.
டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் சமகால இந்தியாவில் மிகவும் புகழ்பெற்ற எழுத்தாளர்களில் ஒருவராக மிளிர்ந்தார்.
உயர்கல்வியில் சாதனை படைத்த அவர், தத்துவம், இறையியல், தார்மீகம், போதனை, வகுப்புவாதம் மற்றும் அறிவூட்டுதல் இருந்து தொடங்கி பல்வேறு பாடங்களில் அவர் குறிப்பிடத்தக்க பங்களிப்பை நமக்குஅளித்து விட்டுச் சென்றுள்ளார். மாணவர்கள் விழிப்புணர்வு பெறும்விதமாக பல பத்திரிகைகளில் அவர் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.
நன்றி செலுத்தும் விதம்...
டாக்டர் ராதாகிருஷ்ணனை அவரது நெருங்கிய நண்பர்களும் மற்றும் மாணவர்கள் சிலரும் பார்த்து பிறந்த நாளைக் (செப்டம்பர் 5-ஆம் தேதி) கொண்டாட அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். அப்போது, "எனது பிறந்த நாளை தனித்தனியாக கொண்டாடுவதற்கு பதிலாக, செப்டம்பர் 5-ஆம் தேதியை இந்தியாவில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் மரியாதை செலுத்தும் விதமாகவும், நன்றி செலுத்தும் விதமாகவும் ஆசிரியர் தினமாக கடைப்பிடித்தால் அது எனது பாக்கியமாகவும், பெருமையாகவும் மற்றும் மரியாதையாகவும் இருக்கும்" என்று வலியுறுத்தினார்.
ஆசிரியர்கள் மீதும், ஆசிரியப் பணி மீதும் அவர் வைத்திருந்த அளப்பரிய அன்பை இதன்மூலம் நாம் புரிந்துகொள்ள முடியும்.
அவர் எழுதியுள்ள "நவீன இந்தியாவின் அரசியல் சிந்தனையாளர்கள்" என்ற புத்தகத்தில், இந்தியா போன்ற ஒரு ஜனநாயக நாட்டில் ஆசிரியர்கள் மற்றும் கல்வியின் முக்கியத்துவம் குறித்து அவர் போற்றியுள்ளார்.
அவர் அரசியலில் இருந்த காலத்தில், தேசத் தலைவர்கள் ஜவாஹர்லால் நேரு, மகாத்மா காந்தி, டாக்டர் ராஜேந்திர பிரசாத் போன்ற தலைவர்களில் பெரும்பாலானோர் அவரது தேச சிந்தனைக்கு ரசிகர்களாக இருந்து அவரது எழுத்துகளைப் பாராட்டினர்.
டாக்டர் ராதாகிருஷ்ணன் குறித்து அவரது நெருங்கிய நண்பரும் நாட்டின்முதல் பிரதமருமான பண்டிட் ஜவஹர்லால் நேரு கூறும்போது, "டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் நாட்டுக்கு பல வழிகளில் சேவை செய்துள்ளார். ஆனால் எல்லாவற்றுக்கும் மேலாக, அவர் ஒரு சிறந்த ஆசிரியர் என்பதுஅனைவருக்குமே தெரியும். அவரிடமிருந்து நாம் அனைவரும் கற்றுக்கொண்டவையும், கண்டுகொண்டவையும் அதிகம், தொடர்ந்து கற்றுக்கொள்வோம். அவர் ஒரு பெரிய தத்துவஞானி, ஒரு சிறந்த கல்வியாளர் மற்றும் சிறந்த மனிதநேயவாதி என பன்முகம் கொண்ட ஒருவரை குடியரசுத் தலைவராகக் கொண்டிருப்பது இந்தியாவின் தனித்துவமான பாக்கியம். இது நாம் மதிக்கும் மரியாதைக்குரிய மனிதர்களைக் காட்டுகிறது.அவரை நாம் என்றென்றும் போற்ற வேண்டும்" என்று பெருமை பொங்க பேசியுள்ளார்.
தீவிர படிப்பாளி
தமிழ், தெலுங்கு,ஆங்கிலம் மட்டுமல்லாமல் உலகின் பிரபலமாக இருந்த பல புத்தகங்களைப் படித்து தன்னை மெருகேற்றிக் கொண்டவர் டாக்டர் ராதாகிருஷ்ணன். எப்போதும், புத்தகமும் கையுமாகத்தான் இருப்பார்.நண்பர்கள் இவரை புத்தகப் புழு என்று அழைப்பார். ஆனால் அதையெல்லாம் இவர் எப்போதும் பொருட்படுத்தியதில்லை. ஒரு புத்தகத்தை எடுத்தால் அதை விரைவில் படித்து முடித்துவிடுவார். மிகவும் வேகமாக வாசிக்கக்கூடிய ஆற்றலைப் பெற்ற அவர் தாள்களை புரட்டிக் கொண்டே இருப்பது போல் இருக்கும்.ஆனால் புத்தகத்தில் உள்ள அனைத்தையும் அவர் படித்து விடுவார். அதில் இருந்து எந்தப் பகுதியைக் கேட்டாலும் சொல்லும் ஆற்றலைப் பெற்றிருந்த தீவிர படிப்பாளி அவர்.
சொற்பொழிவு
இந்துமதத் தத்துவங்கள் பற்றி விரிவுரைகள் வழங்க, இங்கிலாந்தில் உள்ள பிரபலமான ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம், டாக்டர் ராதாகிருஷ்ணனுக்கு அழைப்பு விடுத்தது. அங்கு சென்று சொற்பொழிவாற்றி அனைவரது பாராட்டுகளையும் பெற்றார்.
பல மேடைகளில், அவரது சொற்பொழிவுகளை இந்தியா சுதந்திரம் அடைவதற்கு ஒரு ஆயுதமாக பயன்படுத்தினார் என்றால் அதுமிகையல்ல.
அவர் வகித்த பல்வேறு பதவிகள்
1931 முதல் 1936 வரை ஆந்திரப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக இருந்தார்.
1933 முதல் 1937 வரை 5 முறை தத்துவத்திற்கான நோபல் பரிசுக்கு இவரது பெயர் பரிந்துரை செய்யப்பட்டது.
1939 ஆம் ஆண்டு, பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக பதவி வகித்தார்.
1946-ஆம் ஆண்டில் யுனெஸ்கோவின் தூதுவராக நியமிக்கப்பட்டார்.
சுதந்திரத்திற்குப்பின், 1948-ஆம் ஆண்டில் டாக்டர் ராதாகிருஷ்ணனை, பல்கலைக்கழகக் கல்வி ஆணையத் தலைவராகுமாறு மத்தியஅரசுகேட்டுக்கொண்டது.
இந்தியக் கல்வி முறையின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், சிறப்பான கல்வித் திட்டத்தை வடிவமைக்கவும், ராதாகிருஷ்ணன் குழுவின் பரிந்துரைகள் பெரிதும் உதவின.
1952-ஆம்ஆண்டில் இந்திய குடியரசின் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1954-ஆம் ஆண்டு இந்திய அரசின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
1962 முதல் 1967 வரை இந்திய குடியரசுத் தலைவராக பதவி வகித்தார். இவர் சுதந்திர இந்தியாவின் இரண்டாவது குடியரசு தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
1975-ம் ஆண்டு தனது 86-வது வயதில் சென்னையில் மறைந்தார்.
No comments:
Post a Comment