ஹோட்டலில் சாப்பிடுபவரா நீங்கள்? டிபிஎம் பற்றி உங்களுக்குத் தெரியுமா? எச்சரிக்கை விடுக்கும் நிபுணர்கள் - Minnalseithi

Latest

Search This Blog

Friday, August 18, 2023

ஹோட்டலில் சாப்பிடுபவரா நீங்கள்? டிபிஎம் பற்றி உங்களுக்குத் தெரியுமா? எச்சரிக்கை விடுக்கும் நிபுணர்கள்

ஹோட்டலில் சாப்பிடுபவரா நீங்கள்? டிபிஎம் பற்றி உங்களுக்குத் தெரியுமா? எச்சரிக்கை விடுக்கும் நிபுணர்கள்
ஹோட்டல் உள்ளிட்ட வெளி உணவுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எண்ணெய் பல்வேறு உடல்நலப் பிரச்னைகளுக்கு காரணமாக இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர். 

 நகரங்களுக்கு இடம்பெயர்தல், பணிச்சூழல் உள்ளிட்ட காரணங்களால் இன்று வெளியில் அதாவது ஹோட்டலில் சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. ஏன், நகரங்களில் வீட்டில் ஆண், பெண் இருவரும் வேலைக்குச் செல்வதனால் வார இறுதி நாளைக் கொண்டாட வாரம் ஒருமுறை ஹோட்டலில் சாப்பிடுவது வழக்கமான நடைமுறையாக மாறிக் கொண்டிருக்கிறது.

 ஆனால் ஹோட்டல்களில் சமையல் எண்ணெய் மீண்டும் பயன்படுத்தப்படும்போது அல்லது சூடுபடுத்தப்படும்போது அதில் 'ட்ரான்ஸ் ஃபேட்' எனும் நிறைவுறா கொழுப்பு அமிலங்கள் உருவாகி, அவை இதய நோய், நீரிழிவு நோய் போன்ற நோய்களை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர். 

 வீட்டிலுமே, பயன்படுத்திய சமையல் எண்ணெய்களை மீண்டும் பயன்படுத்துவது உடலுக்கு நல்லதல்ல என்றும் அறிவுறுத்துகின்றனர். குறிப்பாக வெளியில் வறுத்த உணவுகள் சாப்பிடும்போது அதில் எந்த எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது, எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும். 

ஏனெனில் எண்ணெய் மீண்டும் மீண்டும் சூடுபடுத்தப்படும்போது அதில் ட்ரான்ஸ் கொழுப்புகள் அதிகளவில் உருவாகின்றன. இந்த எண்ணெய்கள் உடலுக்கு நன்மை தரக்கூடிய அதிக அடர்த்தி கொழுப்புப் புரதத்தை (HDL) குறைத்து, தீங்கு விளைவிக்கக்கூடிய குறைந்த அடர்த்தி கொழுப்புப் புரதம் (LDL) மற்றும் ட்ரைகிளிசரைடுகளை அதிகரிக்கின்றன.

 இது நீரிழிவு நோய் மற்றும் டைப் 2 நீரிழிவு நோயுடன் நெருங்கிய தொடர்புடையது என்று கூறுகின்றனர். இதில் அதிர்ச்சியான செய்தி என்னவென்றால், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம்(FSSAI) மீண்டும் பயன்படுத்தப்படும் சமையல் எண்ணெய்களுக்கு எந்தவித கட்டுப்பாடோ அல்லது வரையறையோ விதிக்கவில்லை.

 மாறாக, எண்ணெயின் நிறம் அல்லது அதன் பார்வை தரத்தைக் கொண்டு உணவு பாதுகாப்பு அதிகாரிகளால் புகார் பதிவு செய்யப்படுகிறது. சமையல் எண்ணெய் பாதுகாப்பு குறித்து அளவிட 'மொத்த துருவ கலவைகள்' (TPM - Total Polar Material) என்ற ஒரு அளவீடு உள்ளது. சமையல் எண்ணெய் சிதைவின் சர்வதேச அளவீடு இது. இதனை அளவிடும் இயந்திரத்தின் விலை சுமார் ரூ.45,000 என்று கூறப்படுகிறது. 

 சமையல் எண்ணெய்யில் இந்த டிபிஎம் அளவு 24-25க்கு கீழ் இருந்தால் அது பாதுகாப்பானது. உடல் அந்த அளவு எண்ணெய்யை ஏற்றுக்கொள்ளும். அதற்கு மேல் இருந்தால் உடலில் பிரச்னைகள் ஏற்படும். ஒவ்வொரு தயாரிப்புக்கும் டிபிஎம் உள்ளது, நல்ல தரமான எண்ணெய்களை 3-4 முறை மீண்டும் பயன்படுத்திய பிறகும் டிபிஎம் குறையாது என்பதும் கூடுதல் தகவல். 

 எனவே, ஆரோக்கியமான வாழ்வுக்கு முடிந்தவரை தரமான எண்ணெய்களை பயன்படுத்துவதையும், பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும் உறுதி செய்துகொள்ளுங்கள்.

No comments:

Post a Comment