தனியார் பள்ளிகள் இதில் அதிக கவனம் செலுத்தி வரும் நிலையில், அப்படி, குழந்தைகள் விரும்பும் சூழலை கோவை, நீலகிரியில் உள்ள அரசுப் பள்ளிகளிலும் தங்கள் தூரிகை கொண்டு உருவாக்கி வருகின்றனர் கோவையைச் சேர்ந்த ரஞ்சித் குமார் - ஸ்நேகா தம்பதியினர்.
ரஞ்சித் குமார் தன்னார்வ அமைப்பில் திட்ட ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி வருகிறார்.
ஸ்நேகா, தற்போது தூரிகை அறக்கட்டளையை ஒருங்கிணைத்து வருகிறார். ஸ்நேகாவின் சகோதரி ஸ்டெபியும், முழு நேர தன்னார்வலராக ஓவியங்களை வரைய உதவி வருகிறார்.
இது குறித்து ரஞ்சித் குமார், ஸ்நேகா ஆகியோர் கூறியதாவது:
5 ஆண்டுகளுக்கு முன்பு தூரிகை அறக்கட்டளை என்பதை தொடங்கி உதகை, கூடலூர் பகுதியில் மலைவாழ் மக்களுக்கு உதவி வந்தோம். அப்போது அரசுப் பள்ளிகளை பார்வையிட்டபோது அங்கு குழந்தைகள் கற்கும் ஆர்வத்தை அதிகரிக்க கண்கவர் ஓவியங்களை வரைய முடிய செய்தோம்.
அதில் இருந்து தொடர்ந்து கடந்த ஓராண்டாக இந்த பணிகளை செய்து வருகிறோம்.
இதுவரை, கோவை, நீலகிரியில் உள்ள 13 அரசுப் பள்ளிகளில் ஓவியங்களை வரைந்துள்ளோம். இதுதவிர, பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள அங்கன்வாடி, சூலூரில் உள்ள குழந்தைகள் பூங்கா, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள குழந்தைகள் காப்பகம் உள்ளிட்ட வற்றிலும் ஓவியங்கள் வரைந்துள்ளோம்.
ஐ.டி. நிறுவனங்கள் விடுமுறை நாட்களில் தங்கள் பணியாளர்களை அனுப்பி எங்களுக்கு உதவுகின்றன.
வரைவதற்கான பொருட்களை சில பள்ளிகளில் அவர்களே வாங்கி கொடுத்தனர். சில இடங்களில் அந்த ஊரில் உள்ள யாரிடமாவது ஸ்பான்சர் பெற்று பொருட்களை வாங்கிக் கொள்கிறோம்.
வகுப்பறைகளுக்குள் பாடம் சார்ந்த ஓவியங்களையும், வெளிப்புற சுவர்களில் இயற்கை காட்சிகளையும் வரைந்து வருகிறோம்.
எப்போதும் வெள்ளை சுவரை மட்டுமே பார்த்து வந்த குழந்தைகளை, வண்ண ஓவியங்கள் ஈர்க்கின்றன. மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும் இந்த ஓவியங்கள் உதவி வருவது எங்களுக்கு மன நிறைவளிக்கிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment