வரலட்சுமி விரதம்: பூஜை செய்யும் முறையும், விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகளும் - Minnalseithi

Latest

Search This Blog

Thursday, August 24, 2023

வரலட்சுமி விரதம்: பூஜை செய்யும் முறையும், விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகளும்

வரலட்சுமி விரதம்: பூஜை செய்யும் முறையும், விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகளும்
தீர்க்க சுமங்கலியாக வாழப் பெண்கள் வரலட்சுமி விரதம் அனுஷ்டிக்கின்றனர். செல்வங்களுக்கும் அதிபதியான மகாலட்சுமியின் அருள் வேண்டி செய்யப்படும் விரதம். 

ஒவ்வொரு ஆண்டும் ஆடி அல்லது ஆவணி மாத பௌர்ணமிக்கு முன்பு வரும் வெள்ளிக்கிழமை வரலட்சுமி பூஜை நோன்பு நாளாகும். மகாலட்சுமியை தனலட்சுமி, தான்யலட்சுமி, தைரியலட்சுமி, ஜெயலட்சுமி, வீரலட்சுமி, சந்தானலட்சுமி, கஜலட்சுமி, வித்யாலட்சுமி என அஷ்டலட்சுமிகளாகப் பிரித்துள்ளனர். 

எட்டு வகை செல்வங்களை வாரி வழங்குபவள். திருமாலின் மார்பில் குடியிருப்பவள். பெண்களுக்கே உரித்தான கருணை உள்ளம், அழகு, வெட்கம், அன்பு, புத்தி ஆகியவற்றிற்கு அதிபதியும் அவளே. வரலட்சுமி விரதம் இருப்பதால் பல நன்மைகள் கிடைக்கும். 

 புராணக் கதைகள் 

 சித்திரநேமி என்ற தேவகுலப் பெண் நீதிபதியாக இருந்தாள். அவள் தேவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு நடுவராக இருந்து தீர்ப்பு வழங்குவாள். ஒருமுறை அவள் பாரபட்சமாக நடந்துகொண்டதால் அன்னை பார்வதி அவளை குஷ்டரோகியாகும்படி சாபம் கொடுத்தாள். சித்திரநேமி சாபவிமோசனம் கேட்டு பார்வதியில் காலில் விழுந்தாள். வரலட்சுமி விரதத்தை கடைப்பிடித்தால் நோய் நீங்கும் என பார்வதி அருள் செய்தாள். அவள் பூலோகம் வந்து, ஒரு குளக்கரையில் அமர்ந்து வரலட்சுமி பூஜை செய்து சாபம் நீங்கப் பெற்றாள். 

 மகத நாட்டில் வசித்த ராணி சுசந்திரா, செல்வ வளத்தின் மமதையால், மகாலட்சுமியை அவமதித்தாள். அதனால், அனைத்து செல்வங்களையும் இழந்து வருந்தினாள். சுசந்திராவின் மகள் சாருமதி, தெய்வ அனுகூலத்தால் வரலட்சுமி விரதம் பற்றி அறிந்து, அதைக் கடைப்பிடித்தாள். அதனால் மகிழ்ந்த மகாலட்சுமித் தாய், அவளுக்கு சகல நலன்களையும் அருளினாள். சுசந்திராவும் தன் மகளைப் பார்த்து வரலட்சுமி விரதம் கடைப்பிடித்து, இழந்த செல்வத்தை மீண்டும் பெற்று வளமோடு வாழ்ந்தாள்.

 எப்படி பூஜை செய்வது? 

 அவரவர் குடும்ப வழக்கப்படி பூஜை செய்யலாம். பூஜைக்குத் தேவையானவற்றை அருகில் வைத்துக்கொண்டு பூஜையைத் தொடங்கவும். 

 தேவையான பொருட்கள் 

 மஞ்சள் பொடி (பிள்ளையார் பிடிக்க), நுனிவாழை இலை, அரிசி, தேங்காய், எலுமிச்சம்பழம், குங்குமம், சந்தனம், புஷ்ப வகைகள், வெற்றிலை, பாக்கு, பழம், கற்பூரம், ஊதுபத்தி, சாம்பிராணி, அட்சதை, வஸ்திரம், மஞ்சள் சரடுகள், பஞ்சாமிர்தம், குத்துவிளக்கு, திரிநூல், நல்லெண்ணெய், தீப்பெட்டி, தாம்பாளம், பஞ்சபாத்ரம், கிண்ணம், கற்பூரத் தட்டு, தூபக்கால், தீபக்கால், மணி ஆகியவை. 

 நிவேதனப் பொருள்கள் 

 வசதிக்கேற்ப அப்பம், வடை, பொங்கல், கேசரி போன்ற நைவேத்யங்கள் படைத்து கும்பத்தில் மஞ்சள் நோன்பு கயிறுகள் வைத்து பூஜை செய்ய வேண்டும். 

பழ வகைகளில் ஆரஞ்சு, மாதுளை, விளாம்பழம், மாம்பழம், வாழை, திராட்சை

 பூஜைக்கான முன்னேற்பாடுகள்

 வீட்டின் கிழக்கு திசையில் ஈசான்ய மூலையில், பூஜைக்கான இடத்தை அமைத்து, நன்றாக மெழுகி, கோலமிட்டு, மண்டபம் அமைத்து, அலங்கரிக்கவும். 

மண்டபத்தின் கீழ் நுனி வாழை இலையில் நெல்லைப் பரப்பி, அதன் மீது ஒரு தட்டில் அரிசியை வைக்க வேண்டும். அதன் மேல் கலச கும்பத்தை வைக்க வேண்டும். அரிசி, தங்கம், ரத்தினம் ஆகியவற்றை கும்பத்தில் நிரப்பவும் (தீர்த்தத்தையும் நிரப்பலாம்). மேலே மாவிலைக் கொத்தும் தேங்காயும் வைத்து அலங்கரித்து, 

புதிய வஸ்திரம் சாற்றி, தங்கம் அல்லது வெள்ளியால் செய்யப்பட்ட நான்கு கரங்கள் கொண்ட மகாலட்சுமியின் பிரதிமை பிம்பத்தை (முக பிம்பத்தையும் வைக்கலாம்) மேலே வைத்து பூக்கள் சூட்டி அலங்கரிக்கவும். பூஜையின் முடிவில் மஞ்சள் கயிற்றைக் கையில் கட்டிக் கொள்கிறார்கள். 

மஞ்சள் கயிறு மங்கலத்தின் அறிகுறி. அஷ்ட லட்சுமிகளுடன் வரலட்சுமியையும் சேர்த்து ஒன்பது லட்சுமிகள் என்று சாஸ்திரம் சொல்கிறது. எனவே, ஒன்பது நூல் இழைகளால் ஆன, ஒன்பது முடிச்சுகள் போடப்பட்ட நோன்புக் கயிற்றை (சரடை) பூஜையில் வைக்க வேண்டும். 

 விரதம் மேற்கொள்ளும் வெள்ளிக்கிழமை காலை 10.30க்கு முன் ராகு காலத்துக்கு முன் (சிலர் மாலை வேளையிலும் செய்வர்) ஒரு தாம்பாளத்தில் அரிசி பரப்பி, அதன் மேல் கலசம் வைத்து, பழம் வெற்றிலை பாக்கு நிவேதனம் வைத்து, வாசலின் உள் நிலைப்படி அருகே நின்று கற்பூரம் காட்டி, ஆரத்தி எடுத்து மகாலட்சுமித் தாயை வீட்டுக்கு அழைத்து வருவதாகப் பாவனை செய்து, பயபக்தியுடனும் அழைத்து வந்து, அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில் உள்ள கலசத்தில் வைத்திருக்கும் மகாலட்சுமி பிரதிமை பிம்பத்திலிருந்து விரத பூஜையை ஏற்று அருள் புரியுமாறு மகாலட்சுமியை வேண்டிக் கொண்டு, ஆவாஹணம் செய்ய வேண்டும். 

அப்போது, மங்களகரமான தோத்திரங்களைச் சொல்லி, பாடல்களைப் பாட வேண்டும். விரத பூஜை எந்தவித இடையூறுகளும் இல்லாமல் நன்கு நடைபெற வேண்டும் என்பதற்காக, விக்னங்களைக் களையும் விநாயகரை பூஜித்து, பிறகு வரலட்சுமி பூஜையைத் தொடங்க வேண்டும்.

 அஷ்டலட்சுமிகளுக்கும் விருப்பமான அருகம்புல்லை சிலையின் மீது தூவி பூஜை செய்வது நல்லது. பூஜையின்போது அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி ஸ்தோத்திரம் ஆகியவற்றை படிக்கலாம். 

வீட்டிற்கு வந்திருக்கும் பெண்களுக்கு தேங்காய், மஞ்சள்கயிறு, குங்குமம் கொடுக்க வேண்டும். 

 பலன்கள் 

 வேதம் படிப்பதால் கிடைக்கும் பலன்கள் இவ்விரதத்தால் கிடைக்கும். 

புண்ணிய நதிகளில் தீர்த்தமாடுவது, வரலட்சுமி விரதம் இருந்ததற்கு ஒப்பானதாகும். குறிப்பாக கங்கை, சரஸ்வதி, நர்மதை, கோதாவரி, காவிரி, தாமிரபரணி ஆகிய புண்ணிய தீர்த்தங்களில் நீராடினால் காலம் முழுவதும் வரலட்சுமி விரதம் இருந்த பலன் கிடைக்கும். 

இந்த நன்னாளில் வீடுகளுக்கு அருகில் இருக்கும் அம்மன் கோயில்களுக்குச் சென்று நெய்தீபம் ஏற்றி வணங்கி, பக்தர்களுக்கு தயிர்ச்சாதம், சர்க்கரைப் பொங்கல் பிரசாதம் தரலாம். பக்தி, ஸ்லோக புத்தகங்கள் வாங்கி தரலாம். இல்லாதோர், இயலாதோருக்கு ஆடை, போர்வைகள் தானம் செய்ய, புண்ணிய பலன்கள் அதிகரிக்கும். 

 குழந்தை பாக்கிய தடைகள் நீங்கி சற்புத்திர யோகம் உண்டாகும். 

 ஜாதகத்தில் சுக்கிர தோஷம், களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம் நீங்கும்.

 மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும். 

செல்வ வளம் சேரும். மங்கள வாழ்க்கை அமையும். 

 கன்னிப் பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும். 

 கணவன் - மனைவி இடையே மனக் கசப்புகள், கருத்து வேறுபாடுகள் மறைந்து நெருக்கம் அதிகரிக்கும். 

 பிரிந்திருக்கும் தம்பதிகள் ஒன்று சேர்வார்கள். அனைத்து வளங்களையும் அள்ளி வழங்குஊம் வரலட்சுமியை வழிபட்டு நலம் பெறுவோம். 2023-ம் ஆண்டுக்கான வரலட்சுமி விரதம் ஆகஸ்ட் 25-ம் தேதி அனுஷ்டிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment