வலி நிவாரணி மருந்துக்களை எடுத்துக்கொண்டால் சற்று பரவாயில்லை, ஆனால் திரும்ப வலி வந்துவிடுகிறது என்கிறவர்கள் மற்றொரு சாரார்.
NSAIDs எனும் வலி மாத்திரைகள் தொடர்ந்து பயன்படுத்துவோருக்கு வயிற்றில் எரிச்சலுடன் வயிற்றுப்புண் சார்ந்த குறிகுணங்கள் ஏற்படும் என்றும், சிறுநீரக குளோமெருளஸ் வடிகட்டும் திறன் குறைந்துவிடும் (eGFR) என்றும், அவற்றை அளவோடு பயன்படுத்த ஆய்வு முடிவுகள் எச்சரிக்கை விடுக்கின்றது.
இவை ஒருபுறமிருக்க, வலி மாத்திரைகள் தொடர்ந்து உட்கொள்ள சிறுநீரக பாதிப்பு ஏற்படும் என்று அக்கம்பக்கத்தினர் மூலம் செவி வழி செய்தியாகக் கேட்டு, ‘அனால்ஜெஸிக் நெப்ரோபதி’ எனும் நோய் நிலையினை மறைபொருளாக உணர்த்தும் இந்த செய்திகளால், வலி மாத்திரைகளை தவிர்த்து மூலிகைகளை நாடுபவர்கள் இன்று ஏராளம்.
இன்னும் எத்தனை காலம் தான் இந்த நிலை தொடரும், என்று தணியும் எங்கள் வலியும் வேதனையும்? என்று கேட்பவர்களுக்கு உதவும் சித்த மருத்துவ மூலிகைகளுள் ஒன்றான ‘நொச்சி’ பயன்பாடுகள் குறித்துதான் இந்த கட்டுரையில் பார்க்க உள்ளோம்.
வாதம், பித்தம்,கபம் இவை மூன்றில் ஏற்படும் மாற்றமே 4448 வியாதிகளுக்கும் காரணமாக சித்த மருத்துவம் கூறுகின்றது. பல்வேறு மூட்டு வியாதிகளுக்கு காரணம், கப வாதமே என்று சித்த மருத்துவம் விவரிக்கின்றது.
மூட்டுகளில் சேரும் இந்த கபமே, வீக்கத்தை உண்டாக்கும் சைட்டோகைன்-களை தூண்டி மூட்டில் வீக்கத்தை உண்டாக்குகிறது. அத்தகைய கப வாதத்தை போக்கும் மூலிகை தான் ‘நொச்சி’.
இதில் வெண்ணொச்சி, கருநொச்சி என்று பல வகைகள் உள்ளன.
எளிமையாக நம் தெருக்களிலும், களிமண்கள் நிறைந்து காணப்படும் இடங்களிலும் காணும் மூலிகை செடி இந்த நொச்சி செடி.
டெங்கு காய்ச்சல் பரவும் காலத்தில் தொடங்கி , இயற்கை கொசுக்களை விரட்டும் தன்மை உடையதாக பல்வேறு வீடுகளிலும் வளர்க்கப்படுகின்றது. இதன் இலைக்கு பல்வேறு மருத்துவ குணங்கள் உண்டு.
இதில் உள்ள பல்வேறு வேதிப்பொருட்கள் அழற்சியை போக்குவதாகவும், வீக்கமுருக்கியாகவும், வலி நிவாரணியாகவும், கிருமிக்கொல்லியாகவும், பூச்சிக்கொல்லியாகவும் கூட செயல்படக்கூடியது.
சீன பாரம்பர்ய மருத்துவத்தில் நாள்பட்ட பிரான்கைட்டிஸ் இருமலுக்கு காலம் காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
‘நிர்குண்டி தைலம்’ என்ற மூட்டு வலிக்கு பிரசித்திப்பெற்ற மருந்து இந்த நொச்சியை சார்ந்ததே.
நொச்சி இலையில் உள்ள மோனோடெர்பீன் வகையான நறுமணம் தரும் எண்ணெய் வேதிப்பொருள்கள் கிருமிகளின் சவ்வினை சிதைத்து, கிருமிக்கொல்லியாக செயல்படும் தன்மையை உடையது.
இலையில் உள்ள வேதிப்பொருள்கள் அரக்கிடானிக் அமில பாதையின் வழியில், காக்ஸ்-2 நொதியினை செயல்பட விடாமல் தடுத்து, வீக்கம் மற்றும் வலிக்கு காரணமான ப்ரோஸ்டாகிளான்டின் உற்பத்தியை தடை செய்கிறது.
மேலும் இது நம் உடலின் ‘வீட்டு பராமரிப்பு நொதிகளான’, காக்ஸ்-1 நொதியின் பாதையில் குறுக்கீடு செய்யாததால் இதனால் வயிற்றுப்புண் சார்ந்த பக்க விளைவுகளும் ஏற்படுவதில்லை என ஆய்வு முடிவுகள் சொல்வது நொச்சி இலையின் பக்கபலம்.
பயன்படுத்தும் முறை:
ஆகவே நாள்பட்ட மூட்டு வியாதி, வீக்கம், வலி உள்ளவர்கள், வெந்நீரில் நன்றாக கழுவிய நொச்சி இலையினை, நான்கு மிளகு சேர்த்து கஷாயமாக்கி காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர நல்ல பலன் தரும்.
ஆஸ்டீயோ ஆர்த்ரைட்டிஸ், முடக்கு வாதம் எனும் ருமட்டாய்டு ஆர்த்ரைட்டிஸ், போன்ற பல மூட்டுகளில் வலி உள்ள நபர்களும், மார்னிங் ஸ்டிப்னஸ் என்று சொல்லக்கூடிய காலையில் விரல் மூட்டுக்களில் விறைப்பு தன்மை உள்ளவர்களும் இதனை எடுக்கலாம்.
பிற மருந்துகளை எடுப்பவர்களும் இந்த கஷாயத்தை சேர்த்து எடுத்து வர நல்ல முன்னேற்றம் தரும். மேலும் மூட்டு வீக்கங்களுக்கு நொச்சியிலையை நீரில் போட்டு காய்ச்சி ஒற்றடமிட வீக்கம் குறையும். அதனுடன் உப்பு சேர்த்தும் ஒற்றடமிடலாம்.
மூட்டு வீக்கங்களுக்கு நொச்சி இலையை அரைத்து பற்றாக போட்டாலும் நன்மை தரும்.
நொச்சி இலை, பூண்டு, மிளகு, இலவங்கம் இவை சேர்ந்த கஷாயம் ஆஸ்துமா நோயால் அவதிப்படுபவர்களுக்கும் நல்ல பலன் தரும். இது மூச்சுகுழல் வீக்கத்தையும் சரிசெய்யும் தன்மை உடையது.
அநேக பாரம்பரிய மருத்துவ முறைகளில் குளிர்ச்சுரம் மற்றும் பல்வேறு காய்ச்சல் நோய்க்கான மருந்துகளில் ‘நொச்சி’ இலை சேருவது குறிப்பிடத்தக்கது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த ‘நொச்சி’ எனும் சித்த மருத்துவ மூலிகையினை பயன்படுத்துவதன் மூலம், முடக்கு வாதத்தால் முடங்கி கிடக்கும் மூட்டுக்களையும், மன உளைச்சலை நீக்கி ஆரோக்கியமான தரமான வாழ்வினை வாழ முடியும். நொச்சி எளிமையான மூலிகை தான், இருப்பினும் நம் மூட்டுகளுக்கு வலிமையானது.
No comments:
Post a Comment