இதில் நேற்று நடந்த பெண்களுக்கான காம்பவுண்ட் தனிநபர் பிரிவின் இறுதிச்சுற்றில் 17 வயது இந்திய வீராங்கனை அதிதி ஸ்வாமி 149-147 என்ற புள்ளிக்கணக்கில் மெக்சிகோவின் ஆன்ட்ரியா பிசெர்ராவை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தனதாக்கினார்.
இதன் மூலம் மகாராஷ்டிராவைச் சேர்ந்த அதிதி உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியின் தனிநபர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்தார்.
அத்துடன் சீனியர் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற இளம் வீராங்கனை என்ற பெருமையையும் சொந்தமாக்கினார்.
நடப்பு உலக சாம்பியன்ஷிப் போட்டியில் அதிதி வென்ற 2-வது தங்கப்பதக்கம் இதுவாகும். காம்பவுண்ட் அணிகள் பிரிவிலும் அவருக்கு தங்கம் கிடைத்து இருந்தது.
இதுதொடர்பாக அதிதி கூறுகையில், நமது நாட்டுக்காக முதல் தங்கப்பதக்கத்தை வெல்ல வேண்டும் என்பதில் மட்டுமே கவனம் செலுத்தினேன். மற்றவை எல்லாம் எனது வழியில் அமைந்தது. இது தொடக்கம்தான். அடுத்து ஆசிய விளையாட்டு போட்டி வருகிறது. அதிலும் நாட்டுக்காக பதக்கம் வெல்ல விரும்புகிறேன் என தெரிவித்தார்.
No comments:
Post a Comment