முகத்திற்கு அற்புதமான அழகைத் தரும் இயற்கையான பொருட்கள்! - Minnalseithi

Latest

Search This Blog

Friday, July 21, 2023

முகத்திற்கு அற்புதமான அழகைத் தரும் இயற்கையான பொருட்கள்!

முகத்திற்கு அற்புதமான அழகைத் தரும் இயற்கையான பொருட்கள்!
எங்கள் கிரீம்களில் பழச்சாறு நிரம்பி இருக்கிறது’ என்று செயற்கை கிரீம் நிறுவனங்களே விளம்பரப்படுத்துவதற்கு இயற்கையின் துணையை நாடும்போது, பயனாளிகளான நாம் இயற்கையை நேரடியாகத் தேர்வு செய்வதுதானே சிறந்தது.

 ‘இயற்கையான நிறத்தை மாற்றி, செயற்கை சிவப்பழகைத் தருவோம்’ என்று நடைமுறையில் சாத்தியமற்ற பிரச்சாரத்தை மேற்கொள்ளும் நிறுவனங்கள், அதே கிரீம்களால் ஏற்படும் பக்கவிளைவுகளைப் பற்றி மூச்சே விடுவதில்லை. 

 செயற்கைக் கலவைகளைத் தொடர்ந்து நீண்ட நாட்களுக்குப் பயன்படுத்தும்போது தோல் சுருக்கம், நிற மாறுபாடு, கருந்திட்டுக்கள் போன்றவை உண்டாக வாய்ப்பிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

கிரீம்களில் இருக்கும் ரசாயனக் கலவைகளுக்கு, இயற்கை தந்த கொடையான நம் சருமத்தை எதற்காகப் பலி கொடுக்க வேண்டும்? 

இயற்கை முகப்பூச்சுகளை நாடுவோம்.

 பப்பாளி

 செலவில்லா ஃபேஷியலைப் பப்பாளி பழம் தரும். பப்பாளிப் பழக் கூழை பத்து முதல் பதினைந்து நிமிடங்கள்வரை முகத்தில் பூசி வைத்து, பிறகு இளஞ்சூடான வெந்நீரில் முகத்தைக் கழுவினால் போதும். பழத்தில் உள்ள பப்பாயின் தோலில் உள்ள இறந்த செல்களை நீக்கி, முகத்தைப் பளிச்சிட வைக்கும். வறண்ட சருமத்தைக் கொண்டவர்கள் பப்பாளித் தோலின் அடிப்பகுதியைத் தோலில் பூசிவர, சருமம் நீரோட்டம் பெற்றுப் பொலிவடையும்.

 வெள்ளரி 

 வெள்ளரிக் காய்களை நறுக்கிக் கண்களில் வைத்துக் கட்டக் கண்கள் பிரகாசம் அடைவதோடு, கண் எரிச்சலும் மட்டுப்படும். கணினி முன்னால் அதிக நேரம் குடியிருக்கும் மென்பொருள் இளைஞர்கள் ‘கண்களின் மேல் வெள்ளரி’யை வைத்துக்கொள்வது சிறந்தது. அதேபோல, வெள்ளரிக்காயை அரைத்துப் பூசினால் தோலில் உள்ள இணைப்பு திசுக்கள் ஊட்டம் பெறுவதோடு, சூரிய வெப்பத்தால் உண்டாகும் எரிச்சலும் குறையும். கண்களின் கீழ் உள்ள கருவளையம் மறைய வெள்ளரிக்காய் வளையத்தை வைப்பதோடு, விளக்கெண்ணெயையும் தடவலாம். நல்ல தூக்கமும் தேவையான அளவு தண்ணீர் குடிப்பதும் கருவளையத்தைப் போக்குவதற்கான சிறந்த ஆயுதங்கள்.

 கற்றாழை 

 முகத்தில் கற்றாழைக் கூழைத் தடவிவந்தால் பருக்கள் வராமல் தடுக்கலாம். கிருமிநாசினி செய்கையும் வீக்கமுறுக்கி செய்கையும் கொண்ட கற்றாழை, தோலில் உண்டாகும் சுருக்கங்களைத் தடுக்கிறது. வணிகச் சந்தையில் உலாவரும் `ஆன்டி-ஏஜிங்’ கிரீம்களில் கற்றாழைக்கு இலவச அனுமதி உண்டு. முகச்சவரம் செய்து முடித்த பிறகு ரசாயனம் கலந்த செயற்கை கிரீம்களுக்குப் பதிலாக, `தேங்காய் எண்ணெய் – கற்றாழைக் கலவையை’(After shave mix) தடவுவதால் சவரம் செய்யும்போது உண்டான சிறு சிராய்ப்புகள் விரைவாகக் குணமடையும், முகமும் பிரகாசமடையும். எண்ணெய்ப் பசை சருமத்தைக் கொண்டவர்களுக்குக் கற்றாழை முகப்பூச்சு சிறந்த தேர்வு. இன்றும் கிராமத்துச் சிறுவர்களின் இயற்கை ஒப்பனைப் பொருள் குளுகுளு கற்றாழைதான்!

 சந்தனம் 

 சந்தனச் சாந்தை நெற்றியில் தடவும் (‘தொய்யில் எழுதுதல்’) வழக்கம், சங்க கால மக்களிடம் இருந்துள்ளது என்னும் செய்தியைப் பரிபாடல் நமக்குத் தெரிவிக்கிறது. முகத்தை மெருகேற்ற நம் மரபோடு பயணித்த சந்தனத்தை மிஞ்ச, எந்த சிந்தடிக் கிரீம்களாலும் முடியாது. பாக்டீரியாவை அழிக்கும் தன்மையுடைய சந்தனத்தை நீருடன் கலந்து முகப்பருக்களில் தடவிவந்தால், விரைவில் குணம் கிடைக்கும். தோலுக்கு அடியில் உள்ள ரத்தத் தந்துகிகளில் செயல்புரிந்து தோலை மென்மையாக்குகிறது சந்தனம்.

 தக்காளி 

 முகத்தில் உள்ள சுருக்கங்களைக் குறைக்கவும் தடுக்கவும் தக்காளி ஃபேஷியல் உதவுகிறது. இதிலுள்ள ஆன்டி-ஆக்சிடன்ட் தோலுக்கு ஊட்டம் தருகிறது. விளம்பரங்களில் வரும் ஆறு வாரச் சிவப்பழகைத் தர முடியாவிட்டாலும், வாரத்துக்கு இரண்டு முறை தக்காளியை மசித்துத் தயிரோடு சேர்த்துத் தடவிவந்தால், விரைவில் முகப்பருக்கள் நீங்கி முகத்தில் களிப்பு உண்டாகும்.

 சத்தான உணவு 

 செயற்கை முகச்சாயங்களும் பியூட்டி பார்லர்களும் இல்லாத அந்தக் காலத்திலேயே கிளியோபட்ரா போன்ற பேரழகிகளை நமக்குப் பரிசளித்தது, இயற்கையின் கிளைகளான பழங்களும், காய்கறிகளும், உற்சாக வாழ்க்கை முறையுமே!நிறைய தண்ணீர் அருந்துவது மேனியை அழகாக்கும் என்பது காலம்காலமாகத் தொடர்ந்துவரும் அழகுக் குறிப்பு. முகத்தை நிரந்தரமாக அழகுபடுத்த வெளிப்பூச்சோடு சேர்த்துப் பச்சை காய்கறிகள், கொய்யா, நெல்லி, மாதுளை, அத்தி, சாத்துக்குடி, திராட்சை போன்ற பழவகைகளை உட்கொள்ள வேண்டும்.

 அதிகரிக்கும் மன அழுத்தம் முகப் பொலிவைப் பெருமளவு பாதிக்கும். மனதை உற்சாகமாக வைத்துக்கொள்வதும், அழகை மேம்படுத்துவதற்கான முக்கிய உத்தி. அத்துடன் செயற்கைப் பொருட்களை ஓரங்கட்டி வைத்துவிட்டு, வாழ்க்கையோடு இயற்கையை இணைத்துக்கொண்டு பொலிவோடு பயணிப்போம்! 

 அழகூட்டும் இயற்கைப் பொருட்கள்

 முல்தானிமட்டியை தயிரில் கலந்து பூச, சருமத் துவாரங்களில் உள்ள அழுக்கு நீங்கி முகம் புத்துணர்வு பெறும்.

தேனீக்களின் கடின உழைப்பால் உருவான தேன் சிறந்ததொரு ஒப்பனைப் பொருள். புண்ணாற்றும் செய்கையும் கிருமிகளை அழிக்கும் செய்கையும் இனிப்பான தேனுக்கு உண்டு.

அரிசி மாவை முகத்தில் தடவ `பளிச்’ வெண்மை முகத்துக்குக் கிடைக்கும். ஜப்பானியக் கலைஞர்கள் தங்கள் சருமத்தை மென்மையாக்க அரிசி மாவையே பயன்படுத்துகின்றனர்.அவ்வப்போது தயிரைக் கொண்டு முகத்தில் லேசாக மசாஜ் செய்துவந்தால் சருமத்தில் உள்ள கரும்புள்ளிகளின் தீவிரம் குறையும்.

 நன்றாகக் கனிந்த வாழைப்பழத்தை மசித்துப் பாலோடு கலந்து முகத்தில் தடவி, அரை மணி நேரம் கழித்துக் கழுவினால் முகம் வசீகரம் பெறும். சித்த மருந்தான திரிபலா பொடியை வெதுவெதுப்பான நீரில் கலந்து, முகம் கழுவிவந்தால் கிருமிகள் அழியும்.அதேபோல, மற்றொரு சித்த மருந்தான சங்கு பற்பத்தைப் பன்னீரில் குழைத்து முகப்பருக்களின் மேல் தடவலாம்.

No comments:

Post a Comment