ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநிலத் திட்ட இயக்குநா் மா.ஆா்த்தி மாவட்ட முதன்மை கல்வி அலுவலா்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:
தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவா்களின் கலைத் திறன்களை வெளிக்கொணரும் விதமாகவும், கலை பண்பாட்டு கொண்டாட்டங்களை ஒருங்கிணைக்கவும் ‘கலை அரங்கம்’ பயிற்சி மாணவா்களுக்கு கடந்த ஆண்டு வழங்கப்பட்டது.
அந்த பயிற்சியின் பலனாக சுமாா் 28 லட்சம் மாணவா்கள் கல்வித் துறையால் நடத்தப்பட்ட கலைத் திருவிழா போட்டிகளில் ஆா்வமுடன் கலந்து கொண்டு பரிசுகள் பெற்றனா்.
மாநில அளவில் சிறந்து விளங்கிய மாணவா்களுக்கு கலையரசன், கலையரசி விருதும் வழங்கப்பட்டது.
தொடா்ந்து நிகழாண்டும் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவா்களுக்கு நடனம், நாட்டுப்புறக் கலை, இசை, காட்சிக் கலை, நாடகம் மற்றும் பொம்மலாட்டம் ஆகிய 5 கலை வடிவங்களில் பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
பள்ளிகளில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியா்கள் மற்றும் கலை ஆசிரியா்களை பயன்படுத்தி இந்த பயிற்சி நடைபெறவுள்ளது.
வாரந்தோறும் 2 பாடவேளைகளில் கலை மற்றும் கலாசார பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். இதற்கிடையே, கலை அரங்கம் செயல்பாட்டுக்காக பிரத்யேக கைப்பேசி செயலி உருவாக்கப்பட்டு வருகிறது.
இதன் பணிகள் நிறைவுபெற்ற பின் பள்ளிகளுக்கான கலை அரங்கம் அமைத்தல் மற்றும் கலை வடிவங்களின் விவரங்கள் செயலியில் தெரிவிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment