வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கிரிக்கெட்: இந்தியா வெற்றி - Minnalseithi

Latest

Search This Blog

Friday, July 28, 2023

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கிரிக்கெட்: இந்தியா வெற்றி

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கிரிக்கெட்: இந்தியா வெற்றி
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது. வெஸ்ட் இண்டீசுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் வென்றது. 

 அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடுகிறது. இதன்படி இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி பிரிட்ஜ்டவுனில் நேற்று நடந்தது. இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமார் அறிமுக வீரராக இடம் பிடித்தார்.

 'டாஸ்' ஜெயித்த இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலில் வெஸ்ட் இண்டீசை பேட்டிங் செய்ய அழைத்தார். இரு தினங்களுக்கு முன்பு மரணம் அடைந்த வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரபிக் ஜூமாதீனின் மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து இருந்தனர். 

 முதலில் பேட்டிங்கை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்கள் இந்திய பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திண்டாடினர். டாப்-3 வீரர்களான கைல் மேயர்ஸ் (2 ரன்), பிரன்டன் கிங் (17 ரன்), ஆலிக் அதானேஸ் (22 ரன்) ஆகியோர் வேகப்பந்து வீச்சுக்கு இரையானார்கள். அதன் பிறகு ரவீந்திர ஜடேஜாவும், குல்தீப் யாதவும் சுழல் ஜாலத்தில் வெஸ்ட் இண்டீசை முழுமையாக மூழ்கடித்தனர். கேப்டன் ஷாய் ஹோப் (43 ரன், 45 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) தவிர வேறு யாரும் சோபிக்கவில்லை. எதிர்பார்க்கப்பட்ட ஹெட்மயர் 11 ரன்னில் போல்டு ஆனார். 23 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த வெஸ்ட் இண்டீஸ் 114 ரன்னில் சுருண்டது.

 இந்தியாவுக்கு எதிராக வெஸ்ட் இண்டீசின் 2-வது குறைந்த ஸ்கோர் இதுவாகும். 2018-ம் ஆண்டு திருவனந்தபுரத்தில் அந்த அணி 104 ரன்னில் அடங்கியதே இந்த வகையில் மோசமான ஸ்கோராக நீடிக்கிறது. இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் 3 ஓவர்களில் 2 மெய்டனுடன் 6 ரன் மட்டுமே வழங்கி 4 விக்கெட்டும், ஜடேஜா 3 விக்கெட்டும் சாய்த்தனர். ஹர்திக் பாண்ட்யா, முகேஷ்குமார், ஷர்துல் தாக்குர் தங்கள் பங்குக்கு தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

 பின்னர் 115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி ஆடியது. சிறிய இலக்கு என்பதால் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் வரிசையில் சில மாற்றங்களை செய்தார். சுப்மன் கில்லுடன், இஷான் கிஷன் களம் புகுந்தார். கில் 7 ரன்னில் ஏமாற்றினார்.

 அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 19 ரன்னிலும், ஹர்திக் பாண்ட்யா 5 ரன்னிலும், ஷர்துல் தாக்குர் 1 ரன்னிலும் வெளியேறினர். மறுமுனையில் தனது 4-வது அரைசதத்தை பூர்த்தி செய்த இஷான் கிஷன் 52 ரன்னில் (46 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) கேட்ச் ஆனார். இந்தியா வெற்றி இந்திய அணி 22.5 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 118 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 ரவீந்திர ஜடேஜா 16 ரன்னுடனும், கேப்டன் ரோகித் சர்மா 12 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். ஒரு நாள் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியாக பெற்ற 9-வது வெற்றி இதவாகும். இந்த வெற்றியின் மூலம் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 2-வது ஒரு நாள் போட்டி இதே மைதானத்தில் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது.

 ஜடேஜா, குல்தீப் ஜோடி சாதனை வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய இடக்கை சுழற்பந்து வீச்சாளர்களான குல்தீப் யாதவும், ஜடேஜாவும் இணைந்து 7 விக்கெட்டுகளை கபளீகரம் செய்தனர். இந்திய இடக்கை சுழற்பந்து வீச்சாளர்கள் ஒரு ஆட்டத்தில் 7 மற்றும் அதற்கு மேல் விக்கெட்டுகளை வீழ்த்தியது இதுவே முதல்முறையாகும்.

 இந்த ஆட்டத்தில் இந்திய விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சனுக்கு இடம் கிடைக்கவில்லை. ஆனால் சூர்யகுமார் யாதவ், சாம்சனின் பனியனை அணிந்து களம் கண்டதால் சிறிது நேரம் குழப்பம் நிலவியது. இறுதியில் ஆடுவது சூர்யகுமார் தான், சாம்சன் இல்லை என்று தெரிந்த பிறகே பெயர் குழப்பம் தீர்ந்தது.

No comments:

Post a Comment