ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? ஹைகோர்ட் பிறப்பித்த உத்தரவு - Minnalseithi

Latest

Search This Blog

Friday, July 21, 2023

ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? ஹைகோர்ட் பிறப்பித்த உத்தரவு

ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? ஹைகோர்ட் பிறப்பித்த உத்தரவு
'சென்னை மாநகராட்சி பள்ளிகளில் காலியாக உள்ள 400 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, 10 ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை' என, உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. 'விளக்கம் அளிக்கவில்லை என்றால், மாநகராட்சி ஆணையர், துணை ஆணையர் ஆஜராக வேண்டும்' எனவும் எச்சரித்துள்ளது.

 சென்னை புளியந்தோப்பில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியின் இடைநிலை ஆசிரியர் செல்வகுமார் என்பவர், காலியாக உள்ள பட்டதாரி கணித ஆசிரியர் பணிக்கு, தனக்கு பதவி உயர்வு வழங்க கோரி, உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இம்மனு, நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், கே.குமரேஷ் பாபு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மாநகராட்சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.கோபிநாதன், ''பதவி உயர்வு பட்டியலில் 31வது வரிசையில் மனுதாரர் இடம் பெற்றுள்ளார். 22 வது வரிசை வரை பதவி உயர்வு வழங்கப்பட்டிருக்கிறது,'' என, தெரிவித்தார்.

 இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: கடந்த 2013 முதல் இதுவரை, சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 400 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், இதில் கணித ஆசிரியர் பணியிடங்கள் எவ்வளவு என்பது தெரியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. இதுதான் உண்மை நிலை என்றால், அதிர்ச்சி அளிக்கிறது. தகுதியுள்ளவர்கள் இருந்தும், காலியிடங்களை நிரப்பாமல் அப்படியே காலியாக வைத்திருப்பது, மாநகராட்சியின் மெத்தனத்தை காட்டுகிறது. இவ்வளவு காலியிடங்களை நிரப்பாமல் வைத்திருந்தால், கண்டிப்பாக ஆயிரக்கணக்கான மாணவர்களின் கல்விக்கு இடையூறு ஏற்படும். 

எனவே, மாநகராட்சி அதிகாரிகள் கீழ்கண்ட விபரங்களை அளிக்க வேண்டும். சென்னை மாநகராட்சியின் கீழ் எத்தனை தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர் நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன; வெவ்வேறு பாடங்களில் எத்தனை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது; அவற்றில், எத்தனை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன? * கடந்த 10 ஆண்டுகளில் 400 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருந்தால், தகுதியானவர்களுக்கு பதவி உயர்வு அளிப்பது அல்லது இதர வழிகளில் நியமிப்பதன் வாயிலாக, அவற்றை நிரப்ப மாநகராட்சி தரப்பில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? * பள்ளி வாரியாக, மண்டல வாரியாக என, ஒட்டுமொத்த பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்கள் விபரங்களையும், 2013 முதல் ஒவ்வொரு ஆண்டிலும் உருவான காலியிட விபரங்களையும், அளிக்க வேண்டும். வழக்கு விசாரணை, வரும் 26க்கு தள்ளி வைக்கப்படுகிறது. அறிக்கை அளிக்க மேலும் அவகாசம் வழங்கப்படாது.

 அறிக்கை தாக்கல் செய்யவில்லை என்றால், மாநகராட்சி ஆணையர், துணை ஆணையர், நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment