நெல்லை சங்கர்நகரைச் சேர்ந்த லயோலா செல்வகுமார், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த சீராய்வு மனுவில், "நெல்லை குடும்ப நல நீதிமன்றம் ஷெரோன்நிஷா மற்றும் அவரது மகன் ராயன்ஜான் ஆகியோருக்கு மாதம் தலா ரூ.10 ஆயிரம் பராமரிப்பு செலவு தொகையாக வழங்க வேண்டும் என 23.3.2021-ல் உத்தரவிட்டுள்ளது. ஷெரோன்நிஷாவுக்கும் எனக்கும் திருமணம் நடைபெறவில்லை
. அவருடன் எனக்கு எந்த தொடர்பும் கிடையாது.
எனக்கு ஏற்கெனவே திருமணமாகிவிட்டது. ஒரு மகள் உள்ளார். விவகாரத்து வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. நான் மாதம் ரூ.16 ஆயிரம் சம்பளம் பெறுகிறேன். பிடித்தம் போக ரூ.11500 தான் கிடைக்கும். அதில் முதல் மனைவிக்கும், குழந்தைக்கும் மாதம் ரூ.7 ஆயிரம் வழங்க வேண்டியதுள்ளது. எனவே கீழமை நீதிமன்றத்தின் உத்தரவை மறுசீராய்வு செய்ய வேண்டும்" இவ்வாறு கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்து நீதிபதி கே.முரளிசங்கர் பிறப்பித்த உத்தரவில், "மனுதாரர் முதல் மனைவியிடம் இன்னும் சட்டப்படி விவாகரத்து பெறவில்லை. அப்படியிருக்கும் போது ஷெரோன்நிஷாவுடன் நடைபெற்ற திருமணம் சட்டப்படியானது அல்ல.
மனுதாரருக்கும் ஷெரோன்நிஷாவுக்கும் திருமணம் நடைபெற்றதுக்கு ஆதாரமாக திருமண அழைப்பிதழ் மற்றும் புகைப்படங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
ஷெரோன்நிஷாவை திருமணம் செய்யவில்லை என இப்போது கூறும் மனுதாரர், கீழமை நீதிமன்ற விசாரணையில் திருமண புகைப்படங்கள் சித்தரிக்கப்பட்டது எனக் கூறவில்லை. மனுதாரர் மாதம் ரூ.16 ஆயிரம் சம்பளம் பெறுவதாக கூறியுள்ளார்.
அதற்கான சான்றிதழை அவர் தாக்கல் செய்யவில்லை. எனவே சட்டப்படியான திருமணமாக இல்லாவிட்டாலும் குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 125-ன் கீழ் பராமரிப்பு தொகை பெற மனைவிக்கு உரிமை உண்டு. அதன்படி கீழமை நீதிமன்றத்தில் தலையிட முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது" இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment