இந்திய அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் அணி வெற்றி - Minnalseithi

Latest

Search This Blog

Sunday, July 30, 2023

இந்திய அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் அணி வெற்றி

இந்திய அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் அணி வெற்றி
இந்திய அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெஸ்ட்இண்டீஸ் அணி வெற்றிபெற்றது.

 வெஸ்ட்இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடந்தது.

 இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா, விராட்கோலி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. அவர்களுக்கு பதிலாக சஞ்சு சாம்சன், அக்ஷர் பட்டேல் ஆகியோர் இடம் பிடித்தனர். ஹர்திக் பாண்ட்யா கேப்டன் பொறுப்பை கவனித்தார்.

 வெஸ்ட்இண்டீஸ் அணியில் ரோமன் பவெல், டொமினிக் டிராக்ஸ் நீக்கப்பட்டு அல்ஜாரி ஜோசப், கேசி கர்டி சேர்க்கப்பட்டனர். 

 இஷான் கிஷன் அரைசதம்

 'டாஸ்' ஜெயித்த வெஸ்ட்இண்டீஸ் அணியின் கேப்டன் ஷாய்ஹோப் பீல்டிங்கை தேர்வு செய்தார்.

 இதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இஷான் கிஷன், சுப்மன் கில் ஆகியோர் களம் இறங்கினர். இருவரும் சிறப்பாக ஆடி நல்ல தொடக்கம் அமைத்தனர். ஸ்கோர் 16.5 ஓவர்களில் 90 ரன்னாக இருந்த போது சுப்மன் கில் (34 ரன், 49 பந்து, 5 பவுண்டரி) சுழற்பந்து வீச்சாளர் குடகேஷ் மோட்டி பந்து வீச்சில் சிக்சருக்கு தூக்க முயற்சித்து அல்ஜாரி ஜோசப்பிடம் பவுண்டரி எல்லையில் கேட்ச் ஆனார். 

 அடுத்த ஓவரிலேயே இஷான் கிஷன் 55 ரன்னில் (55 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்) வேகப்பந்து வீச்சாளர் ரொமாரியா ஷெப்பர்டு பந்து வீச்சில் அடித்து ஆடுகையில் அதானேஸ் அற்புதமாக பிடித்தார். அதன் பிறகு ஆட்டத்தின் போக்கு தலைகீழாக மாறியது. அடுத்து வந்த சஞ்சு சாம்சன் (9 ரன்), அக்ஷர் பட்டேல் (1 ரன்), ஹர்திக் பாண்ட்யா (7 ரன்) ஆகியோர் விரைவில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தனர். 24.1 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட்டுக்கு 113 ரன்கள் எடுத்து இருந்த போது மழை குறுக்கிட்டது.

 மழை காரணமாக சுமார் 40 நிமிடம் பாதிப்புக்கு பிறகு ஆட்டம் தொடர்ந்தது.

 இந்தியா 181 ரன்னில் ஆல்-அவுட்

 அடுத்து களம் கண்ட ரவீந்திர ஜடேஜாவும் (10 ரன்) நிலைக்கவில்லை. சிறிது நேரம் தாக்குப்பிடித்து ஆடிய சூர்யகுமார் யாதவ் 24 ரன்னிலும் ( 25 பந்து, 3 பவுண்டரி), ஷர்துல் தாக்குர் 16 ரன்னிலும் (22 பந்து, 2 பவுண்டரி) ஆட்டமிழந்தனர். 37.3 ஓவர்களில் இந்திய அணி 8 விக்கெட்டுக்கு 167 ரன்கள் எடுத்து தடுமாறி கொண்டிருக்கையில் மீண்டும் மழை பெய்ததால் ஆட்டம் 15 நிமிடம் பாதிக்கப்பட்டு மீண்டும் தொடர்ந்து நடைபெற்றது. 

உம்ரான் மாலிக் ரன் எதுவும் எடுக்காமலும், முகேஷ் குமார் 6 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 40.5 ஓவர்களில் இந்திய அணி 181 ரன்னில் சுருண்டது. குல்தீப் யாதவ் 8 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். வெஸ்ட்இண்டீஸ் தரப்பில் ரொமாரியா ஷெப்பர்டு, குடகேஷ் மோட்டி தலா 3 விக்கெட்டும், அல்ஜாரி ஜோசப் 2 விக்கெட்டும் சாய்த்தனர். பின்னர் 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட்இண்டீஸ் அணியின் சார்பில் பிராண்டன் கிங் மற்றும் மேயர்ஸ் ஆகியோர் களமிறங்கினர்.

 சிறப்பான தொடக்கம் அமைத்த இந்த ஜோடியில் மேயர்ஸ் 36 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து பிராண்டன் கிங் 15 ரன்களும், அதான்ஸே 6 ரன்களும், ஹெட்மயர் 9 ரன்களும் எடுத்து வெளியேறினர். அடுத்ததாக ஷாய் ஹோப்புடன், கார்டி ஜோடி சேர்ந்தார். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடியில் ஷாய் ஹோப் தனது அரை சதத்தை பதிவு செய்தார். 

தொடர்ந்து இந்த இருவரும் சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர். இறுதியில் ஷாய் ஹோப் 63 (80) ரன்களும், கார்டி 48 (65) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 36.4 ஒவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் எடுத்தது. 

இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக ஷர்துல் தாக்கூர் 3 விக்கெட்டுகளும், குல்தீப் யாதல் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் இந்திய அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெஸ்ட்இண்டீஸ் அணி வெற்றிபெற்றது. இதனைத்தொடர்ந்து இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் அணிகளின் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.

No comments:

Post a Comment