இதற்கு மிக முக்கிய காரணம் படிப்பு முடித்ததும் உள்நாட்டிலோ, வெளிநாட்டிலோ எளிதில் வேலை கிடைக்கும் என்பதால் செவிலியர் படிப்பை மாணவிகள் அதிகம் விரும்புகின்றனர். பிளஸ் 2 வகுப்பில் உயிரியல், வேதியியல், இயற்பியல் பாடப்பிரிவுகளை படித்தவர்கள், நர்சிங் (செவிலியர்) படிப்பை தேர்ந்தெடுத்து படிக்கலாம். செவிலியர்களின் பணி மன நிறைவை கொடுக்கும் தனித்தன்மை வாய்ந்தது. மருத்துவத்துறையில் மக்களுக்கு சேவை செய்யக்கூடிய மகத்தான பணியாக தான் செவிலியர் பணி பார்க்கப்படுகின்றது.
உலகத்தையே ஆட்டிப்படைத்த கொரோனா தொற்றுக்கு எதிராக செவிலியர்களின் சேவை வியக்க வைக்கும் வகையில் இருந்ததை எல்லோரும் அறிவோம். தற்போது மருத்துவ உலகில் தொடர்ந்து செவியர்களுக்கான தேவையும் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதேபோல அதிகரித்து வரும் மருத்துவமனைகளால் நர்சிங் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்புகளும் அதிகரித்துள்ளன.
ஆரம்பத்தில் நர்சிங் படிப்பை பொதுவான ஒரு பிரிவின் கீழ் மட்டுமே பயின்று வந்தனர். தற்போது, நர்சிங் துறையிலும் பல சிறப்பு பிரிவுகளும் வர ஆரம்பித்துவிட்டன.
மருத்துவத்துறை பல்வேறு வளர்ச்சிகளை எட்டியிருந்தாலும், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் பற்றாக்குறை தொடர்கிறது. உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் செவிலியர்களுக்கான வேலைவாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன.
இந்தியாவிலிருந்து செல்லும் செவிலியர்களுக்கு வெளிநாடுகளில் பெரும் வரவேற்பு உள்ளது. ஊதியமும் ஆயிரங்களில் ஆரம்பித்து லட்சங்களைத் தொடுகிறது. செவிலியர் (நர்ஸிங்) படிப்புகள் பி.எஸ்.சி மற்றும் டிப்ளோமா என இரண்டு வகையாக இருக்கின்றன. பிளஸ் 2 முடித்தவர்கள் இவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துப் படித்து, செவிலியர்களாகப் பணியில் சேரலாம்.
பி.எஸ்.சி நர்சிங் 4 ஆண்டு கால படிப்பாகும். இதில் உடல் கூறியல், இயக்கவியல், உயிர்வேதியல், உணவு வகைகள், மருந்துகள், நுண்ணுயிர் மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சையியல், நோய் கூறியல்,மனஉளவியல், சமூகவியல் ஆகியவை பயிற்றுவிக்கப்படுகிறது. மருத்துவ சேவையில் மருத்துவர்களுக்கு அடுத்த அத்தியாவசியப் பணியில் செவிலியர்கள் உள்ளனர்.
இளநிலை படிப்புக்கு பிறகு முதுநிலை படிப்பான எம்.எஸ்.சி நர்சிங் மற்றும் பி.எச்.டி ஆய்வு படிப்பை முடித்து செவிலியர் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிய வாய்ப்புகள் உள்ளன.
மாணவிகளுக்கு வாய்ப்புகள் அதிகம் உள்ள நர்ஸிங் படிப்பில் மாணவர்களும் சேர்த்துக்கொள்ளப்படுகின்றனர்.
நோயாளிகள் மற்றும் மருத்துவர்களுடன் எந்தவிதமான சுணக்கமும் இல்லாமல் பணியாற்றுவதற்கான அர்ப்பணிப்பு, இரக்கம் மற்றும் சிறந்த தகவல் தொடர்பு திறன் போன்றவை செவிலியர் (நர்சிங்) பட்டப்படிப்பு படிப்பவர்களுக்கு அவசியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
நான்கு ஆண்டு நர்சிங் படித்து முடித்தவர்கள், ஒரு வருட பயிற்சி முடித்து, தங்களுடைய பெயரை நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்து கொள்ள வேண்டும். பிஎஸ்சி நர்சிங் முடிப்பவர்கள் ,எம்.எஸ்.சி,நர்சிங் முதுகலை படிப்பை முடித்தால் பிரகாசமான வேலை வாய்ப்புகள் உள்ளன. இளநிலை நர்சிங் படிப்பு முடித்தவர்கள், குழந்தை மருத்துவ நர்சிங், அவசர கால பிரிவு நர்சிங், கார்டியோ தெரபிக் நர்சிங், நியூரோ சயின்ஸ் நர்சிங், நெப்ரோ யூரோலஜி நர்சிங், மகளிர் மருத்துவ நர்சிங் என ஏராளமான சிறப்பு பயிற்சிகளும் படிப்புகளும் உள்ளன.
தமிழகத்தைப் பொறுத்தவரை நான்காண்டு கால இளநிலை செவிலியர் பி.எஸ்.சி நர்சிங் படிப்பு, மூன்றாண்டு டிப்ளமோ நர்சிங் (ஜி. என்.எம்)படிப்பு மற்றும் சான்றிதழ் படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.சென்னை,மதுரை,சேலம்,தேனி, செங்கல்பட்டு மருத்துவ கல்லூரிகள் மற்றும் கடலூர் அரசு செவிலியர் கல்லூரி என பல்வேறு அரசு மருத்துவ கல்லூரிகளில் பி.எஸ்.சி நர்சிங் இடங்கள் உள்ளன.
மேலும் ஏராளமான தனியார் கல்லூரிகளில் பி.எஸ்.சி நர்சிங் படிப்பு நடத்தப்பட்டுவருகிறது. பிளஸ் 2 தேர்வில் குறைந்தது 45 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருந்தால் நர்சிங் படிப்புகளை படிக்கலாம். பிளஸ் 2வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்த மாணவர்கள் கலந்தாய்வு மூலமாக அரசு மருத்துவக் கல்லூரிகளில் நர்சிங் படிப்பை குறைந்த கட்டணத்தில் படிக்கலாம்.
போஸ்ட் பேசிக் எனப்படும் இரண்டாம் ஆண்டிலிருந்து பி.எஸ்.சி நர்சிங் படிப்பில் சேர்வதற்கு பிளஸ் 2 தேர்ச்சிக்குப் பிறகு ஜி.என்.எம் படிப்பினை நிறைவு செய்திருத்தல் அவசியம். இந்த படிப்புகள் அனைத்துக்கும் பிரகாசமான எதிர்காலம் உள்ளது. தமிழக மருத்துவத்துறை தாண்டி தேசிய அளவில் எய்ம்ஸ், ஜிப்மர் மருத்துவமனைகளிலும், ராணுவம், ரயில்வே, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் உள்ளிட்ட பல இடங்களிலும் செவிலியருக்கான படிப்புகளும், வேலைவாய்ப்புகளும் உள்ளன. இந்தியாவில் நோயாளிகளுக்கும் செவிலியர்களுக்கும் உள்ள விகிதம் மிகக் குறைவாகவே உள்ளது.
இதைச் சரி செய்ய வேண்டுமானால் அடுத்த சில ஆண்டுகளில் 6 லட்சத்திற்கும் அதிகமான செவிலியர்கள் தேவைப்படுபவர் என கணிக்கப்படுகிறது. தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள், நர்சிங் ஹோம்கள், கிளினிக், குழந்தைகள் காப்பகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், முதியோர் இல்லங்கள், என்.ஜி.ஒ,மற்றும் நிறுவனங்கள் என எண்ணற்ற வாய்ப்புகள் செவிலியர் படிப்பை முடித்தவர்களுக்கு காத்திருக்கின்றன.
அதுமட்டுமல்ல அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, வளைகுடா நாடுகள் உள்ளிட்ட பல நாடுகளில் தமிழக செவிலியர் படிப்பை முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்புகளில் மிகச்சிறந்த வரவேற்பு உள்ளது.
No comments:
Post a Comment