கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. ஆட்சியர் கே.எம்.சரயு, எம்.எல்.ஏ-க்கள் ஓசூர் ஒய்.பிரகாஷ், பர்கூர் டி.மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் தமிழக உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சரும், கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சருமான அர.சக்கரபாணி கலந்து கொண்டு, 3 ஆயிரத்து 730 பயனாளிகளுக்கு ரூ.6 கோடியே 50 லட்சத்து 22 ஆயிரத்து 273 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இவ்விழாவில் அமைச்சர் பேசியதாவது:
"திமுக அரசு தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதிகளில் 80 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப் பட்டுள்ளன. தமிழக முதல்வர் எண்ணற்ற திட்டங்களை அறிவித்ததுடன், அந்த திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்டந்தோறும் களப்பயணம் மேற்கொண்டு ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
இன்றைய தினம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தற்போது கலைஞரின் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. மாதம் ரூ.1000 பெறுவதற்கான விண்ணப்பங்கள் ஜூலை 20-ம் தேதி முதல் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் நியாயவிலைக் கடை பணியாளர்கள் மூலம் வினியோகிக்கப்பட உள்ளது. அந்த விண்ணப்பங்களை அனைவரும் பூர்த்தி செய்து வழங்க வேண்டும்.
குழந்தைகள் திருமணத்தை முற்றிலும் தடுக்க தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி, தகுதியானவர்களுக்கு பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15ம் தேதி அன்று முதல் வழங்கப்படும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குழந்தை திருமணத்தை முற்றிலும் தடுக்கும் வகையில் துறை சார்ந்த அலுவலர்கள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், வரும் கல்வி ஆண்டில் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி விகிதம் 100 சதவிகிதத்தை எய்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டத்தை அனைத்து துறைகளிலும் முன்னோடி மாவட்டமாக மாற்ற அனைத்து துறை அலுவலர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்" என்று அமைச்சர் பேசினார்.
No comments:
Post a Comment