நம்மில் பலருக்கும் ஏசியை எப்படி பாதுகாப்பது என்பது பற்றிய விழிப்புணர்வு இல்லாத நிலை உள்ளது. குறிப்பாக வீடு, கடைகளில் பயன்படுத்தப்படும் ஏசிகள் தீப்பிடித்து எரிந்து பெரும் விபத்தை ஏற்படுத்துகின்றன.
சில சமயங்களில் உயிரிழப்புகள் கூட ஏற்படுகின்றன.
அமெரிக்காவை எடுத்து கொண்டால் ஆண்டுக்கு ஏசி தீவிபத்தில் 29 பேர் வரை பலியாவதாகவும், 200 மில்லியன் டாலருக்கு அதிக மதிப்பில் இழப்புகள் ஏற்படுவதாகவும் ஒரு புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. இதற்கு நம் மாநிலமான தமிழ்நாடும் விதிவிலக்கல்ல.
தமிழ்நாட்டிலும் சில இடங்களில் ஏசி தீப்பிடித்து வீடுகள் எரிந்தது மற்றும் உயிர் பலி ஏற்பட்டுள்ள வரலாறு உள்ளது. இதனால் ஏசி பராமரிப்பில் நாம் அலட்சியம் காட்டுவது என்பது உயிருக்கே ஆபத்தை விளைவிக்கலாம்.
சரி, நிலைமை இப்படி இருக்க ஏசி எப்படி தீப்பிடிக்கிறது? அதனை தடுப்பது எப்படி? என்பது பற்றி இந்த செய்தியில் பார்க்கலாம்.
பொதுவாக ஏசி தீவிபத்துக்கு சரியான பராமரிப்பு இல்லாதது தான் காரணமாகும். அதாவது ஏசியில் காற்றுக்காக இருக்கும் இடைவெளியில் தூசிகள் அதிகமாக படியலாம். மேலும் ஏசி இயங்கும்போது அதிகப்படியான வெப்பம் உள்ளே உருவாகும். இந்த வெப்பத்தின் காரணமாக தூசிகள் பற்ற வாய்ப்புள்ளது. இதன்மூலம் தான் ஏசி தீவிபத்து ஏற்படுகிறது.
இன்னொரு காரணம் என்னவென்றால் பராமரிக்காமல் இருக்கும்போது தூசிகள் ஏசியில் காற்று வெளியேறும் இடங்களில் படியும். இது காற்றோட்டத்தை தடுத்து வெப்பத்தை உள்ளேயே தங்க வழிவகுக்கும். இந்த தடை என்பது ஏசியை செயலிழக்க செய்வதுடன் தீப்பிடித்து எரியவும் செய்யலாம்.
மற்றொரு காரணம் என்னவெனில் குறைந்த விலைக்கு கிடைக்கும் உதிரி பாகங்களை வாங்கி பொருத்துவது. இதுவும் ஏசியை சரிவர இயங்குவதில் பிரச்சனையை ஏற்படுத்தி தீப்பிடிக்க வாய்ப்புள்ளது. அதோடு நமக்கு பொருட்சேதம், உயிர் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது.
இருப்பினும் கூட இந்த ஏசி தீவிபத்தை எளிதாக நாம் தடுக்கலாம். இதற்கு முக்கிய விஷயம் என்பது ஏசிகளில் ஏதேனும் பொருள் சேதமடைந்தால் அல்லது பழுதானால் அதற்கு பதில் உயர்தர உதிரி பாகங்களை வாங்கி பயன்படுத்துவது.
குறிப்பாக Split ACல் குளிரூட்டம் குழாய்களை தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டும். மேலும் ஏசியின் செயல்பாட்டை தொடர்ந்து கண்காணிப்பதோடு முறைப்படி குறித்த காலத்தில் சர்வீஸ் செய்ய வேண்டும்.
இதற்கு அடுத்தப்படியாக ஏசிகளில் தூசிகள் படியாமல் பார்த்து கொள்ள வேண்டும். இதுதவிர ஏசி இருக்கும் அறையில் அதிக குப்பைகள் சேர்வதை நாம் முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். இந்த 3 விஷயங்களை நாம் பின்பற்றினாலே போதும். ஏசிகள் தீப்பிடித்து எரியாமல் நீண்ட நாட்களாக நாம் அதன் சேவையை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment