குக்கரில் சமைத்த சாதத்தைச் சாப்பிடுவது நல்லதா? - Minnalseithi

Latest

Search This Blog

Saturday, June 24, 2023

குக்கரில் சமைத்த சாதத்தைச் சாப்பிடுவது நல்லதா?

குக்கரில் சமைத்த சாதத்தைச் சாப்பிடுவது நல்லதா?
குக்கரில் சமைத்த சாதத்தைச் சாப்பிடுவது நல்லதா? ``நேரத்தை மிச்சப்படுத்துவதற்காகவே பெரும்பாலும் குக்குரில் சமைக்கிறோம். ஆனால், குக்கரில் சமையல் செய்வதால் ஊட்டச்சத்துகளும் மருத்துவப் பயன்களும் கிடைக்குமா என்றால், இல்லை என்பதுதான் பதில்.

 அரிசியில் ஸ்டார்ச் அதிகமாகக் காணப்படும். அதைக் குக்குரில் சமைக்கும்போது அதிலிருக்கும் ஸ்டார்ச் வெளியேறாமல் தங்கிவிடும். அந்த ஸ்டார்ச் மிகுந்த சாதத்தைச் சாப்பிடும்போது உடலில் கார்போஹைட்ரேட் அதிகம் சேர்ந்துவிடும். தொடர்ந்து கார்போஹைட்ரேட்டின் அளவு அதிகரிப்பதால் உடல்எடை அதிகரிக்கும். சர்க்கரைநோய், உயர் ரத்த அழுத்தம், இதயநோய் போன்ற வாழ்வியல் சார்ந்த அனைத்து நோய்களுக்கும் உடல் எடை அதிகரிப்பதுதான் முக்கியக் காரணமாக உள்ளது. 

ஒருவரின் உயரத்துக்கேற்ற எடையில் இருக்கிறாரா என்பதை உடல்நிறை குறியீட்டெண்ணின் (BMI) மூலம் கணக்கிட முடியும். தற்போது சரியான பி.எம்.ஐ-யில் உடலைப் பராமரிப்பவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. நூற்றுக்கு 90 பேர் சரியான எடையைப் பராமரிப்பதில்லை, உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர். உடல் எடை அதிகரிக்காமல் இருப்பதற்கு இதுபோன்ற உணவுப்பழக்கத்தைப் பின்பற்றாமல் இருப்பதுதான் நல்லது. 

 குழந்தைகளுக்கு குக்கர் சாதம் கொடுக்கலாமா? 

 பெரியவர்களுக்கு மட்டுமல்ல குழந்தைகளுக்கும் குக்கரில் சமைத்த சாதத்தைக் கொடுப்பது நல்லதல்ல. குழந்தைகள் தற்போது திறந்தவெளியில் அதிகம் விளையாடுவதில்லை. வீட்டுக்குள்ளேயே வீடியோ கேம்ஸ், ஸ்மார்ட்போனில் வீடியோ பார்ப்பது என நேரத்தைக் கழித்து வருகின்றனர். அவர்களுக்கும் உடலுழைப்பு இல்லாத சூழ்நிலையில் குக்கரில் சமைத்த கார்போஹைட்ரேட் அதிகமுள்ள சாதத்தைச் சாப்பிட்டால் சிறுவயதிலேயே உடல்பருமன் பிரச்னைக்கு (Childhood Obesity) ஆளாகிவிடுவார்கள். குழந்தைகள் வளரும்போதே அவர்களை ஆரோக்கியமற்றவர்களாக வளர்க்க வேண்டாம்.

 காய்கறிகளைக் குக்கரில் சமைக்கலாமா?

 காய்கறிகளில் தண்ணீரில் கரையக்கூடிய நிறைய வைட்டமின்கள் இருக்கும். குக்கரில் அதிகமான தண்ணீர் வைத்து காய்கறிகளை வேகவைத்து, விசில் அடித்து தண்ணீர் எல்லாம் வெளியேறிவிட்டால் அவற்றில் இருக்கும் சத்துகள் நீங்கிவிடும். பொதுவாகவே காய்கறிகள் எளிதாக வெந்துவிடும். அவற்றை வேகவைக்க அதிக அழுத்தத்துடன்கூடிய குக்கர் தேவையில்லை. மூடியுடன்கூடிய அகலமான பாத்திரத்தில் அவற்றைச் சமைத்தாலே போதுமானது. அதில் தண்ணீர் அதிகமாகிவிட்டால்கூட, நீரை வடித்து அதில் உப்பு, மிளகுத்தூள் தூவி சூப் போன்று அதைக் குழந்தைகளுக்கோ பெரியவர்களுக்கோ குடிக்கக் கொடுக்கலாம்.

 எலெக்ட்ரிக் ரைஸ் குக்கர், கஞ்சியை வடிகட்டும் குக்கர் நல்லதா? 

சாதாரண பிரஷர் குக்கரோடு ஒப்பிடும்போது கஞ்சியை வடிகட்டும் பிரஷர் குக்கர், ரைஸ் குக்கர் போன்றவை ஓரளவு சிறந்தவைதான் என்றாலும், அவற்றையும் தொடர்ச்சியாகப் பயன்படுத்தக் கூடாது. காரணம் அதிக அளவில் தண்ணீர் வைத்து, கஞ்சியை வடிக்கும்போதுதான் அதிலிருக்கும் ஸ்டார்ச் முறையாக வெளியேறும். குறைவான தண்ணீரில் சாதத்தைச் சமைக்கும்போது ஸ்டார்ச் முழுவதும் வெளியேறாது.
அரிசியில் இருக்கும் ஸ்டார்ச்சை நீக்கிவிட்டால் அதில் உடலுக்கு நன்மை தரும் நார்ச்சத்துகள் மட்டுமே காணப்படும்.

 அதனால் சாதாரண பானையில் அதிகம் தண்ணீர் வைத்து அரிசியைச் சமைத்து, கஞ்சியை வடித்துவிட்டுப் பயன்படுத்திய நமது பழைய முறையைப் பின்பற்றுவதே நல்லது. எப்போதாவது அவசரத்துக்கு குக்கரில் ஒரு வெரைட்டி சாதமோ வீட்டில் நிகழும் நிகழ்ச்சிகளுக்குப் பிரியாணியோ சமைப்பதில் தவறில்லை. ஆனால், தினமும் குக்கரில் சமைப்பதைப் பழக்கமாக்கிக்கொள்ள வேண்டாம்.

No comments:

Post a Comment