கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து உடலைப் பாதுகாக்கவும், சோர்வை நீக்கி புத்துணர்வு பெறவும் உதவுவது தர்பூசணிப் பழம். நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் என இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. பழத்தைப் போலவே தர்பூசணி விதையிலும் பல்வேறு சத்துக்களும், மருத்துவப் பயன்களும் இருக்கின்றன.
கிராமப்புறங்களில் மழைக்காலத்தின் போது, குளிருக்கு இதமாக நெல்பொரி மற்றும் தர்பூசணி விதைகளை பொரித்து சாப்பிடுவது வழக்கம்.
தர்பூசணி விதைகளில் மெக்னீசியம், துத்தநாகம், இரும்புச்சத்து, புரதம், தாமிரம், நல்ல கொழுப்பு உள்ளிட்ட பல்வேறு சத்துக்கள் அடங்கியுள்ளன. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், ரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தவும் இது உதவுகிறது.
தர்பூசணி விதைகளின் பயன்கள்
தர்பூசணி விதையில் இருக்கும் தாமிரம், மாங்கனீசு மற்றும் பொட்டாசியம் ஆகிய சத்துகள் எலும்புகளை வலிமையாக்கும். அவ்வப்போது தர்பூசணி விதைகளை சாப்பிட்டு வருவதன் மூலம் ஆஸ்டியோபோரோசிஸ் எனும் எலும்பு சிதைவு பிரச்சினையை தடுக்க முடியும்.
இதில் உள்ள மெக்னீசியம், உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும்.
தர்பூசணி விதைகளில் மோனோ அன்சாச்சுரேட்டட் மற்றும் பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை ரத்தத்தில் இருக்கும் கெட்டக் கொழுப்பை குறைக்கக் கூடியவை. இதில் உள்ள 'வாசோடைலேட்டர்' எனும் மூலக்கூறுகள் ரத்தக்குழாய்களை விரிவடையச் செய்து ரத்த ஓட்டத்தை சீராக்கும்.
தர்பூசணி விதைகளில் உள்ள வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், இரும்புச்சத்து மற்றும் தாதுக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன. மேலும் இவை நரம்பு மண்டலத்தை வலுப்படுத்தவும், மூளையின் செயல்திறனை மேம்படுத்தவும் உதவுகின்றன. இதில் உள்ள போலிக் அமிலம் குழந்தைகளின் மூளை வளர்ச்சியை மேம்படுத்தும்.
முளைகட்டிய தர்பூசணி விதைகளில் இருக்கும் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்சிடென்டுகள் சரும ஆரோக்கியத்திற்கு சிறந்தவை. தர்பூசணி விதைகளில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் முகப்பரு மற்றும் முதுமையின் அறிகுறிகளை குறைக்க உதவும். இதில் உள்ள மெக்னீசியம் சரும அழற்சி, அரிப்பு, வறட்சி போன்ற பாதிப்புகளை குணப்படுத்தும்.
தர்பூசணி விதைகளில் இருக்கும் துத்தநாகம் மற்றும் புரதம் ஆகிய சத்துக்கள் சருமம் முதிர்ச்சி அடைவதை தாமதப்படுத்தும்.
தர்பூசணி விதைகளில் இருக்கும் புரதம், இரும்பு, மெக்னீசியம், துத்தநாகம் மற்றும் தாமிரம் ஆகிய சத்துக்கள் முடியின் வளர்ச்சியையும், ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். இதில் உள்ள மாங்கனீசு முடி உதிர்வைக் கட்டுப்படுத்தும்.
தர்பூசணி விதைகளில் இருக்கும் போலேட், இரும்பு, துத்தநாகம், தாமிரம், மெக்னீசியம், பொட்டாசியம், அமினோ அமிலங்கள் மற்றும் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் போன்ற ஊட்டச் சத்துக்கள் உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை சீராக்குகின்றன.
No comments:
Post a Comment