இதை படிக்கும் போதே நமக்கும் இந்த நிலை வருமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. ஆகவே மாரடைப்பு வராமல் தடுத்து, நம்மை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் வழிகளை பற்றி பார்ப்போம்.
இதயத்துக்கு இதமான உணவுகள்
ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வது இதய நோய்களை தடுக்க உதவும். எண்ணெய் நிறைந்த உணவுகள் (குறிப்பாக ஃப்ரை, வறுவல் உணவுகள்), பதப்படுத்தப்பட்ட உணவுகள், கொழுப்பு அதிகமான உணவுகள் ஆகியவை ரத்த நாளங்களுக்குள் கொழுப்புகளை படிய வைத்து அடைப்பை ஏற்படுத்துகின்றன. ஆகவே, இவற்றைத் தவிருங்கள்.
முட்டைகோஸ், கீரைகள் போன்ற பச்சை காய்கறிகள், முழு தானியங்கள், சால்மன், கானாங்கெளுத்தி, மத்தி, டியூனா போன்ற ஒமேகா 3 அமிலம் நிறைந்த மீன்கள், வால்நட் மற்றும் அக்ரூட் பருப்புகள், பீன்ஸ், பூண்டு ஆகியவற்றை அன்றாட உணவுகளில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
ஆக்டிவாக இருங்கள்
இதய நோய் மட்டுமல்ல எந்த உடல் உபாதைகளையும் அண்டவிடாமல் தடுக்கும் சக்தி உடலுழைப்புக்கும் உடற்பயிற்சிக்கும் உள்ளது. உடலுக்கு ஏதாவதொரு விதத்தில் பயிற்சி கொடுங்கள். தினசரி 30 நிமிடம் நடைபயிற்சி கூட உங்கள் இதய நலத்தை காக்க உதவும். உடல் உழைப்பு இல்லாத வாழ்கைமுறை உங்களை நோயாளி ஆக்கிவிடும். சில நேரங்களில் உயிரிழக்கும் நிலை கூட ஏற்படலாம். ஒருவர் வாரத்துக்கு குறைந்தது 150 நிமிடங்களாவது உடற்பயிற்சிகளில் ஈடுபட வேண்டும் என்கின்றன உலக சுகாதார அமைப்பு.
மன அழுத்தத்தை கையாளுங்கள்
இப்பொழுது இருக்கும் வாழ்க்கை சூழலில் மன அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது எளிதான ஒன்று அல்ல. ஆனால் மன அழுத்தத்தை சிறப்பாக கையாளுவது எப்படி என்று நீங்கள் கற்றுக்கொள்ளலாம். நல்ல தூக்கம், உடற்பயிற்சிகள், யோகா, தியானம் போன்றவை இதற்கு உதவும். உங்களுக்கு பிடித்தமான பொழுதுபோக்குகளில் ஈடுபடுவது, தோட்ட வேலைகள், புத்தகம் வாசித்தல், இசை கேட்பது அல்லது பயனுள்ள வீடியோக்கள் பார்ப்பது போன்ற செயல்பாடுகள் உங்கள் மன அழுத்தத்தை குறைத்து, அந்த சூழ்நிலையை சிறப்பாக கையாளும் தெளிவை வழங்கும். இதனால் மாரடைப்பு ஏற்படும் ஆபத்தை தவிர்க்கலாம்.
மது, புகை இரண்டுக்கும் நோ
மாரடைப்பு, நெஞ்சுவலி, இதய பாதிப்பு என இதயம்-ரத்தநாளம் தொடர்பான அனைத்து விதமான பாதிப்புகளையும் ஏற்படுத்தக்கூடியவை மது மற்றும் புகைப்பழக்கங்கள். இதயம் பாதிக்கப்பட்ட அறிகுறிகள் வெளியில் தெரிய வருவதற்கு முன்பே, இவை இதயத்தசைகளை சேதப்படுத்தியிருக்கும். அதிகம் அல்லது அடிக்கடி மது அருந்துவது இதய செயலிழப்பு, உயர் ரத்த அழுத்தம், சீரற்ற இதயத்துடிப்பு, ஸ்ட்ரோக் மற்றும் மரணத்தை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கிறது அமெரிக்க இதய கூட்டமைப்பு. அதேபோல் புகைப்பழக்கம் உங்கள் இதயம் மற்றும் ரத்த நாளங்களை நிரந்தரமாக சேதப்படுத்திவிடும். ஆகவே இதய நோய்களை தடுக்க சிறந்த வழி மது அருந்துதல் மற்றும் புகை பிடிக்கும் பழக்கங்களை கைவிடுவதே.
நீரிழிவு நோயாளிகள் உஷார்
மற்றவர்களை விட நீரிழிவு நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு இதய நோய்கள் ஏற்பட 4 மடங்கு வாய்ப்பு உள்ளது. ரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரை ரத்தநாளங்களை நிரந்தரமாக சேதப்படுத்திவிடும். ஆகவே இதய நோய்கள் வராமல் தடுக்க நீரிழிவு பாதிப்பை கட்டுக்குள் வைத்திருங்கள்.
உயர் ரத்த அழுத்தம்
தற்போது உள்ள வாழ்க்கை முறையில் இளைஞர்களால் வேலை மற்றும் வாழ்க்கை சமநிலையை சரியாக பராமரிக்க முடியாததால், டென்ஷன் எகிறிவிடுகிறது. இது ரத்த கொதிப்பு, உயர் ரத்த அழுத்த பாதிப்பு ஏற்படுத்துகிறது. இதுவும் இதய தசைகளை கடினமாக்கி ரத்தநாளங்களை சேதப்படுத்தி மாரடைப்புக்கு காரணமாகின்றது. ஆகவே, டென்ஷனை குறையுங்கள். அதற்கு உங்கள் வேலைக்கும், தனிப்பட்ட வாழ்க்கைக்கும் சமநிலையை பராமரியுங்கள். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கைக்கு போதுமான நேரம் ஒதுக்குங்கள்.
உடல் பருமனை கட்டுப்படுத்துங்கள்
உடல் பருமன் அதிகமாக இருந்தால் உங்களை நோய்கள் தேடி வரும். முதலில் கெட்ட கொழுப்பு சேர்வது இதய நோய்கள் முதல் சிறுநீரக பாதிப்பு வரை கொண்டு செல்லும். இதை தடுக்க மேலே சொன்ன உணவு முறைகளையும் உடலுழைப்பு, உடற்பயிற்சி கொண்ட லைப்ஸ்டைலையும் பின்பற்றுங்கள்.
மருத்துவ பரிசோதனை அவசியம்
குறிப்பிட்ட கால இடைவெளியில் முழு உடல் / மருத்துவ பரிசோதனைகள் செய்வது நாட்பட்ட நோய்களை தடுக்க உதவும். நாள்பட்ட நோய்களை தடுக்க மட்டுமல்ல, தற்போது இருக்கும் நோய் பாதிப்பு தீவிரமடையாமல் தடுக்கவும் இது உதவும்.
நெஞ்சுவலி ஏற்பட்டால் அலட்சியமாக இருப்பதுதான், பின்னாளில் அது மாரடைப்பு ஏற்பட காரணமாகிவிடுகிறது. உங்களுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதற்கான காரணம் என்னவென்று தெளிவாக தெரியவில்லை என்றால் அது வாய்வுத்தொல்லையாக இருக்கும் என்று அலட்சியம் வேண்டாம். உடனே மருத்துவரை பாருங்கள்.
No comments:
Post a Comment