அரசுப்பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்கும் ஆர்வம் அதிகரித்து வருகிறதா? ஆசிரியர்கள், பெற்றோர்கள் கருத்து Is there a growing interest in enrolling children in government schools? Feedback from teachers and parents - Minnalseithi

Latest

Search This Blog

Friday, April 21, 2023

அரசுப்பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்கும் ஆர்வம் அதிகரித்து வருகிறதா? ஆசிரியர்கள், பெற்றோர்கள் கருத்து Is there a growing interest in enrolling children in government schools? Feedback from teachers and parents

அரசுப்பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்கும் ஆர்வம் அதிகரித்து வருகிறதா? ஆசிரியர்கள், பெற்றோர்கள் கருத்து Is there a growing interest in enrolling children in government schools? Feedback from teachers and parents

அரசுப் பள்ளிகளில் ஏழை-எளிய மாணவர்கள்தான் படிப்பார்கள். போதுமான வசதிகள் இருக்காது. அங்கு முறையாக ஆங்கிலம் கற்க முடியாது. ஆசிரியர்கள் ஏனோ தானோ என்றுதான் பாடம் நடத்துவார்கள். இவை எல்லாம் அரசுப் பள்ளிகளை நினைக்கையில் பல பெற்றோர்களின் மனங்களில் நிழலாடும் அச்சங்கள். இந்த அச்சங்கள் மாறவேண்டும். பெற்றோர்கள் மட்டுமே நினைத்து மாற்றிவிட முடியாது. அரசு நினைக்க வேண்டும். அங்கு வேலை செய்யும் ஆசிரியர்கள் நினைக்க வேண்டும். அர்ப்பணிப்பு மனதுடன் அறப்பணியாற்ற வேண்டும். 

அவ்வாறு நடக்கும் என்றால் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் வருகை அதிகரித்துக்கொண்டே போகும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. கல்வி நலத்திட்டம் கல்விக்காக தமிழக அரசும் பல்வேறு நலத்திட்டங்களையும், காலை மதிய உணவுத் திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் வருகிற 28-ந்தேதி வரை ‘அரசுப் பள்ளிகளைக் கொண்டாடுவோம்' என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணிகள் நடைபெற்று வருகின்றன. 

இதனால் அரசு பள்ளிகூடங்களில் பிள்ளைகளை சேர்க்க பெற்றோர்கள் எந்த அளவிற்கு ஆர்வம் காட்டி வருகிறார்கள் என்பதுபற்றி பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். அவற்றைக் காண்போம். தமிழில் சாதிக்க முடியும் இதுகுறித்து கொளத்தூர், சீனிவாசநகர் சென்னை தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை மேகலா கூறும் போது, ‘சென்னை மாநகராட்சி கிரேட்டர் சென்னை மாநகராட்சியாக மாறியது போல் சென்னை மாநகராட்சி பள்ளிகளின் தரமும் உயர்ந்து உள்ளது. 

இதனால் நம் பள்ளிகளின் மீது பெற்றோர்களின் பார்வை இருப்பதுடன், அதிகளவில் சேர்க்கையும் இருந்து வருகிறது. எல்.கே.ஜி. முதல் 5-ம் வகுப்பு வரை ஆங்கில வழிக்கல்வியும் அளிக்கப்படுவதால் பிள்ளைகளைச் சேர்க்க பெற்றோர்கள் அதிகளவில் வருகின்றனர். தாய் மொழிக் கல்வியின் முக்கியத்துவத்தை மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் முதலில் ஏற்படுத்த வேண்டும். 

அரசாங்கம், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் சேர்ந்து, தாய்மொழிக் கல்வி குறித்த விழிப்புணர்வு பிரசாரம் செய்வதுடன், ஆங்கில வழியில் படிக்கிறதுதான் முக்கியம் என்று நினைக்கும் பெற்றோர்களுக்குத் தாய்மொழிக் கல்வியில் படிச்சாலும், வெளிநாடு வரை சென்று சாதிக்கும் மாணவர்கள் இருக்கிறார்கள் என்பதைப் புரியவைக்க வேண்டும். 

தாய்மொழிக் கல்வியைச் சரியாகக் கற்றுக்கொடுப்பது அவசியம் என்பதை உணர்த்த வேண்டும். ஆங்கிலம் மொழி அவசியம்தான். ஆனால், தாய்மொழிக் கல்வி அதைவிட அவசியம். அரசுப் பள்ளியில் படிச்சாலும் சாதித்து முன்னேற முடியும் என்ற தெளிவை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம் அரசு பள்ளிகளின் சேர்க்கை மேலும் அதிகரிக்கும்' என்றார். 

 பெற்றோர்கள் தேடி வரும் நிலை வன்னிய தேனாம்பேட்டையில் உள்ள சென்னை உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் ராஜ்குமார் கூறும் போது, ‘மாணவர்களின் கல்வித்தரத்தை அதிகரிப்பதற்கு நன்றாக படிக்கும் மாணவர்களை மீண்டும் ஊக்குவிக்கும் வகையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ‘ரெமிடியல் வகுப்பு' என்ற தினசரி வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதற்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தரப்பில் நல்ல வரவேற்பு இருக்கிறது. அதேபோல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை 5.30 மணி வரை சிறப்பு வகுப்புகளும் நடத்தப்படுகிறது. 

காலையில் சிற்றுண்டி, மதிய உணவுகளும் வழங்கப்படுவதால் மாணவர்கள் ஆர்வமுடன் வருகின்றனர். கல்வியிலும் நல்ல மதிப்பெண்கள் பெறுகின்றனர். இதனால் அதிகளவில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சேர்ப்பதற்கு மாநகராட்சி பள்ளிகளை தேடி வரத்தொடங்கி இருக்கின்றனர்' என்றார். தரம் உயர்த்த வேண்டும் அயனாவரத்தைச் சேர்ந்த இல்லத்தரசி புனிதா சதீஷ் கூறும் போது, ‘அரசு பள்ளிகள் என்றால் முன்பெல்லாம் பெயரளவிற்குத்தான் இருக்கும். 

அதில் ஏழை குடும்பத்தினர்தான் தங்கள் குழந்தைகளை படிக்க வைப்பார்கள். வசதி படைத்தவர்கள் தனியார் பள்ளிகளை தேடி சென்று விடுவார்கள். ஆனால் தற்போது அரசு பள்ளிகளுக்கு அந்த நிலை இல்லை. சென்னையை பொறுத்த வரையில் ஒரு சில அரசு பள்ளியை தேடி பலர் செல்வதால் அங்கு சீட் கிடைப்பது அரிதான விஷயமாக இருக்கிறது. 

இதேபோன்று அனைத்து அரசு பள்ளிகளின் தரத்தையும் உயர்த்த வேண்டும். அதேபோல் அனைத்து அரசு பள்ளிகளிலும் வகுப்பறைகள், கழிவறைகள், வியைாட்டு மைதானம் போன்றவை முறையாக பராமரிக்கப்பட வேண்டும். மாணவர்களுக்கு தேவையான குடிநீர் வசதிகளும் முறையாக செய்துதர வேண்டும். காலியாக இருக்கும் ஆசிரியர்கள் பணியிடங்களையும் முழுமையாக நிரப்பி தரமான கல்வி கற்பிக்க கூடுதல் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார். சர்வதேச அளவில் பாடதிட்டம் அம்பத்தூரை சேர்ந்த மனிதவள மேம்பாட்டுத்துறை அதிகாரி அனுஜா கூறும்போது, ‘சி.பி.எஸ்.சி. பாடத்திட்டத்தில் படிப்பதைத்தான் பொதுமக்கள் உயர்வாக நினைத்திருந்தனர். 

ஆனால் தற்போது சர்வதேச தரத்திலான பாடத்திட்டம்தான் உயர்ந்தது என்று நினைத்து சர்வதேச அளவிலான பாடத்திட்டம் உள்ள பள்ளிகளைத் தேடிச் செல்கின்றனர். இதற்காக லட்சக்கணக்கான பணத்தையும் செலவிடுகின்றனர். ஏழைகளும் நடுத்தர வர்க்கத்தினரால் அதுமாதிரியான பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்க முடியாது என்பதால் அவர்கள், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் குழந்தைகளை சேர்த்து படிக்க வைக்கின்றனர். அரசுப் பள்ளியை தேடி அனைவரும் வர வேண்டும் என்றால் அரசு பள்ளியில் பாடத்திட்டங்கள் சர்வதேச அளவிற்கு தரம் உயர்த்த வேண்டும். அமெரிக்கா போன்ற நாடுகளில் அரசு பள்ளிகளில் தான் அனைவரும் படிக்க விரும்புகின்றனர். 

இங்கும் அதே நிலை வரவேண்டும். அதற்கு அரசு பள்ளியின் பாடத்திட்டங்களை மாற்றி அமைக்க வேண்டும்' என்றார். காலை உணவு கோடம்பாக்கத்தைச் சேர்ந்த பாலராணி கூறும் போது, ‘அரசு பள்ளிகள் முன்பு இருந்தது போல் இல்லாமல் மாணவர்களுக்கு ஒழுக்கமான, தரமான கல்வியைக் கற்றுத்தருவதால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மாநகராட்சி பள்ளிகளில் சேர்க்க ஆர்வமாக இருக்கிறார்கள். பள்ளிகளில் காலை சிற்றுண்டி, மதியம் உணவு வழங்கப்படுவதால் ஏழை மாணவர்கள் பலர் பயனடைகிறார்கள். அத்துடன் நல்ல கல்வியும் கிடைப்பதால் மாநகராட்சி பள்ளிக்கு என்று ஒரு வரவேற்பு இருக்கிறது. 

மேலும் தரத்தை உயர்த்துவதுடன், தொடர்ந்து இந்த திட்டங்களை செயல்படுத்துவதை அதிகாரிகள் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவும் ஒரு சில இடங்களில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில் சீட் கிடைப்பதாக இருந்தால் மந்திரியின் சிபாரிசுவரை பெறவேண்டிய நிலையும் இருக்கிறது' என்றார். பெற்றோர்கள் ஆர்வம் வடபழனியை சேர்ந்த ஜெசிந்தா கூறும் போது, ‘தனியார் பள்ளிகளை ஒப்பிடுகையில் தற்போது அரசு பள்ளிகள் எவ்வளவோ நன்றாக இருக்கின்றன. முன்பு தான் அரசு பள்ளிகளில் வகுப்பறைகள் படு மோசமாக இருக்கும். ஆனால் தற்போது அவ்வாறு இல்லை. காற்றோட்டமான சூழ்நிலையில் வகுப்பறைகள் இருப்பதால் மாணவர்களுக்கு கல்வி கற்பதற்கான நல்ல சூழ்நிலை காணப்படுகிறது. 

அதேபோல் ஆசிரியர்களும் பாடங்களை நன்கு கற்று தருவதால் மாணவர்கள் ஆர்வமுடன் பள்ளிகளுக்கு செல்கிறார்கள். இதனால் பெற்றோர்கள் அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்த்து படிக்க வைப்பதில் அதிக ஆர்வம் காண்பிக்கின்றனர்' என்றார். ‘அரசு பள்ளிகளை கொண்டாடுவோம்’ தமிழ்நாடு கல்வித்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் 37 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் 53 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். நடப்பு கல்வியாண்டுக்கான இறுதி வேலை நாள் வருகிற 28-ந்தேதியாகும். அது வரை அரசுப்பள்ளிகளில் 2023-2024- கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில், ‘அரசுப் பள்ளிகளைக் கொண்டாடுவோம்' என்ற தலைப்பில் விழிப்புணர்வுப் பேரணி அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட்டு வருகிறது. 

இந்தப் பேரணிக்காக தயாரிக்கப்பட்டுள்ள பிரத்யேக வாகனத்தில் பள்ளிக் கல்விக்கான அரசின் திட்டங்கள், கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள் மன்ற செயல்பாடுகள் என பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இந்தப் பேரணியில் அனைத்து அரசுப் பள்ளி ஆசிரியர்களும் பங்கேற்க உள்ளனர். அதன்படி 1 முதல் 9-ம் வகுப்புகளில் தங்கள் குழந்தைககளைக் சேர்க்க விரும்பும் பெற்றோர் அருகே உள்ள அரசுப் பள்ளிகளுக்குச் சென்று குழந்தைகளின் பெயரை உடனடியாகப் பதிவு செய்வதற்கும் வசதிகள் செய்யப்பட்டு உள்ளன' என்றனர்.

No comments:

Post a Comment