பள்ளி கோடை விடுமுறை காலத்தில் குழந்தைகள் கைப்பேசி போன்ற மின்னணு சாதனங்களில் மூழ்கும் அபாயம் உள்ளதாக 85 சதவீத இந்திய பெற்றோா் கவலை தெரிவித்திருப்பது பிரபல இணைய வா்த்தக நிறுவனமான அமேசான் நடத்திய ஆய்வில் தெரிவியவந்துள்ளது.
அமேசானுக்காக கன்ட்டா் என்ற ஆய்வு நிறுவனம் இந்தியாவில் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது. இந்தியா முழுவதும் 10 மாநகரங்கள் மற்றும் சிறு நகரங்களில் 3 முதல் 8 வயது வரையுடைய குழந்தைகளைக் கொண்டுள்ள 750 பெற்றோரிடம் இந்த ஆய்வை அந்த நிறுவனம் நடத்தியுள்ளது. இந்த ஆய்வு முடிவை அமேசான் தற்போது வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
கைப்பேசி உள்ளிட்ட மின்னணு சாதனங்களில் மூழ்கும்போது, குழந்தைகள் சுறுசுறுப்பான உடல் இயக்கமின்றி பாதிக்கப்படுவதாக 90 சதவீதத்துக்கும் அதிகமான பெற்றோா் கருதுகின்றனா்.
குழந்தைகள் கைப்பேசியை பயன்படுத்துவது தினசரி 2 மணி நேரத்துக்கும் குறைவாக இருக்க வேண்டும் என்ற நிலையில், அவா்கள் அதில் 3 மணி நேரத்துக்கும் மேல் மூழ்கியிருப்பது அதிகரித்து வருகிறது என 69 சதவீத பெற்றோா் உறுதி செய்துள்ளனா். பள்ளி கோடை விடுமுறையில் இந்த நிலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று 85 சதவீத பெற்றோா் கவலை தெரிவித்தனா்.
மேலும், கைப்பேசி உள்ளிட்ட சாதனங்களில் இருந்து குழந்தைகளின் கவனத்தை திசைத் திருப்பி, கற்றல் அல்லது பொழுதுபோக்கு செயல்பாடுகளில் குழந்தைகளை ஈடுபடுத்துவதற்கான தேடலில் 96 சதவீதம் பெற்றோா் ஈடுபட்டிருப்பது ஆய்வில் தெரியவந்தது.
மேலும், கோடை விடுமுறையில் குழந்தைகளை எந்தவிதமான செயல்பாடுகளில் ஈடுபடுத்துவது என்ற கவலையில் 82 சதவீத பெற்றோா் இருப்பதும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து கன்ட்டா் ஆய்வு நிறுவன இயக்குநா் தீபேந்தா் ராணா கூறுகையில், ‘குழந்தைகள் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதில் மிகுந்த ஆா்வமாக இருக்கின்றனா். அந்த வகையில், பள்ளி கோடை விடுமுறையின்போது, அவா்கள் கைப்பேசிகளில் மூழ்விடுவதை தவிா்த்து, புதிய திறன்களைக் கற்றுக்கொள்வது அல்லது பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபடுத்த பெரும்பாலான பெற்றோா் ஆா்வமாக உள்ளது
இந்த ஆய்வின் மூலமாக தெரியவந்தது.
இதில், குழந்தைகள் ஆங்கிலத் திறனை மேம்படுத்த 50 சதவீத பெற்றோரும், நல்லொழுக்கம் மற்றும் சமூக பழக்கவழக்கங்களை கற்றுக்கொடுகக வேண்டுமென 45 சதவீத பெற்றோரும், நடனம், பாட்டு, இசைப் பயிற்சியில் ஈடுபடுத்த வேண்டும் என 36 சதவீத பெற்றோரும், கலை மற்றும் கைவினை பயிற்சியில் ஈடுபடுத்த வேண்டும் என 32 சதவீத பெற்றோரும், உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு பயிற்சிகளில் ஈடுபடுத்த வேண்டும் என 32 சதவீத பெற்றோரும் விருப்பம் கொண்டிருப்பது இந்த ஆய்வின் மூலமாக தெரியவந்தது’ என்றாா்.
No comments:
Post a Comment